வாக்குப்பதிவின் வரலாறு | சொல்... பொருள்... தெளிவு

வாக்குப்பதிவின் வரலாறு | சொல்... பொருள்... தெளிவு
Updated on
3 min read

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்), வாக்குப்பதிவு சரிபார்ப்புக் கருவிகளை (விவிபாட்) அனைத்துத் தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவருகின்றன. கடந்த 74 ஆண்டுகளில் வாக்குப்பதிவு முறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

முதல் வாக்கு

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல், 1951 அக்டோபரில் இருந்து 1952 பிப்ரவரி வரை பல கட்டங்களாக நடைபெற்றது. இதற்கிடையில், 1952 ஜனவரி 2 முதல் 25வரை சென்னை மாகாணத்தின் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட்டது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் அவர்களுடைய கட்சிச் சின்னம் ஒட்டப்பட்ட தனித்தனி வாக்குப்பெட்டிகள் ஒதுக்கப்பட்டன.

வாக்காளர்கள் தங்களுக்குப் பிடித்தமான வேட்பாளரின் சின்னம் ஒட்டப்பட்ட பெட்டியில் வெற்று வாக்குச்சீட்டைச் செலுத்தித் தங்களின் வாக்குரிமையை உறுதிசெய்தனர். 1957இல் நடைபெற்ற இரண்டாவது சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாக்குச்சீட்டு முறையே கடைப்பிடிக்கப்பட்டது.

மூன்றாவது தேர்தலில் (1962), குறியீட்டு முறை அறிமுகமானது. அனைத்து வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் அடங்கிய பொதுவான ஒரு வாக்குச்சீட்டு இதில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாக்காளர்கள் தாங்கள் தேர்வுசெய்ய விரும்பும் வேட்பாளரின் சின்னத்துக்கு நேராக முத்திரை குத்தி, பொதுவான வாக்குப்பெட்டியில் அதைச் செலுத்தினர்.

வாக்குச்சாவடியில் சிக்கல்

இதை அடுத்து 1996வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற அத்தனை சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் குறியீட்டு முறையில் சீட்டு கொண்டு வாக்களிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், வாக்குச்சீட்டு முறையினால் ஏற்பட்ட காலதாமதம், முறைகேடுகள் போன்றவை புதிய சிக்கலாக உருவெடுத்தன. குறிப்பாக, 60களில் பிஹார், மேற்கு வங்கத் தேர்தல்களின்போது நடைபெற்ற வாக்குச்சாவடி கைப்பற்றுதல் உள்ளிட்ட அராஜகச் செயல்கள் மாற்றுவழிகளுக்கான அவசியத்தை உணர்த்தின.

இவிஎம் அறிமுகம்

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.எல்.ஷாக்தர் இதற்கான ஆய்வை 1977இல் முடுக்கிவிட்டார். இந்திய அணுசக்தித் துறைக்கு உள்பட்ட ஹைதராபாதைச் சேர்ந்த இந்திய மின்னணுவியல் கழகம் 1979இல் இவிஎம் மாதிரியைத் தயாரித்தது.

இதன் மேம்பட்ட வடிவத்தை பம்பாய் ஐஐடி பேராசிரியர்கள் ஏ.ஜி.ராவ், ரவி பூவய்யா இருவரும் இணைந்து உருவாக்கினர். பெல் நிறுவனத்தின் தொழிலாளர் சங்கத் தேர்தலுக்கு அவர்கள் வடிவமைத்துக் கொடுத்த இயந்திரம் இதுவே.

கட்டுப்பாட்டு அலகு, வாக்குப்பதிவு அலகு என இரண்டு பகுதிகளைக் கொண்டது இவிஎம் இயந்திரம். வேட்பாளரின் பெயர், சின்னம், பொத்தான்களுடன் கூடியது வாக்குப்பதிவு அலகு.

கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாக்குகள் பதிவுசெய்ய முடியும் என்பதால் கள்ள ஓட்டு செலுத்துவது கடினம். செல்லாத வாக்கு என்கிற குளறுபடிக்கும் இதில் இடமில்லை.

அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் காகித வாக்குக்கு மாற்றாக இதைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. இப்படி நிறைய சாதகங்கள் இருக்கவே தேர்தல் ஆணையம் இவிஎம்மைப் பயன்படுத்த முடிவெடுத்தது.

மக்களவைத் தேர்தல், மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு மட்டும் இவிஎம் மூலம் வாக்குப்பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. கேரளத்தின் பரவூர் தொகுதியில் 1982இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதன்முதலில் இவிஎம் பயன்படுத்தப்பட்டது.

இவிஎம் தயாரிக்கும் பொறுப்பு இந்திய மின்னணுவியல் கழகம், பெங்களூரு பெல் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் பிரித்து ஒப்படைக்கப்பட்டது.

இவிஎம் காலம்

இவிஎம் இயந்திரத்தின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்படவே தேர்தல் சீர்திருத்தக் குழுவை மத்திய அரசு 1990 ஜனவரியில் நியமித்தது. பல சோதனைகள் மூலம் இவிஎம்-ஐ ‘ஹேக்’ செய்ய முடியாது என்று டிஆர்டிஓ தொழில்நுட்ப நிபுணர் குழு மெய்ப்பித்துக்காட்டியது.

தேர்தல் ஆணையமும் இவிஎம் பாதுகாப்பானது, நம்பகமானது என்று உறுதி அளித்தது. 1998லிருந்து 2001க்கு இடைப்பட்ட காலத்தில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா மாநிலத் தேர்தல்களில் இவிஎம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதன்முறையாக 234 தொகுதிகளிலும் இவிஎம் வாக்குப்பதிவு 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் நடைபெற்றது.

இதே ஆண்டிலிருந்துதான் கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் இவிஎம்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன. 2004 மக்களவைத் தேர்தலிலிருந்து நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளிலும் இவிஎம் பயன்பாட்டுக்கு வந்தது.

சரிபார்ப்புக் கருவி

இவிஎம் இயந்திரத்தின் மூலம் வாக்குகள் மடைமாற்றப்படுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதைத் தடை செய்யக் கோரி அரசியல் கட்சிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இதையடுத்து வாக்காளர்கள் செலுத்திய வாக்கு சரியான வேட்பாளருக்குச் சென்றதா என்பதை உறுதிப்படுத்தும் விவிபாட் சரிபார்ப்புக் கருவி அறிமுகம் செய்யப்பட்டது. 2019 மக்களவைத் தேர்தலில் இருந்து அனைத்துத் தொகுதிகளிலும் விவிபாட் கருவி இணைக்கப்பட்டது.

வாக்காளர் தனது வாக்கைச் செலுத்திய பிறகு, விவிபாட் கருவியின் திரையில், தான் அளித்த வாக்கு சரியான வேட்பாளர், சின்னத்துக்குப் பதிவாகியுள்ளதா என்பதை 7 விநாடிகளுக்குப் பார்த்து உறுதி செய்துகொள்ளலாம்.

நோட்டா விருப்பம்

இதுவரை மூன்று முறை இவிஎம் இயந்திரம் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருப்பது ‘நோட்டா’ பொத்தானுடன் கூடிய மூன்றாம் தலைமுறை இவிஎம் இயந்திரமாகும்.

எந்தவொரு கட்சி வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை; இருப்பினும் ஜனநாயகக் கடமையில் இருந்து தவறக் கூடாது என நினைப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் ‘நோட்டா’.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961இன்படி ‘49ஓ’ என்னும் முறை அறிமுகம் செய்யப்பட்டபோது வாக்குச் சீட்டிலோ, வாக்குப்பதிவு இயந்திரத்திலோ இதற்கு வழிவகை செய்யப்படவில்லை.

மாறாக, வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம், தான் ‘49ஓ’ வகை வாக்காளர் என்பதைத் தெரிவித்து, அதற்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும்.

இப்படிச் செய்யும்போது வாக்களிப்பதற்கான ரகசியக் கொள்கை மீறப்படுவதாக விமர்சனம் எழுந்ததால், வேட்பாளர் பட்டியலின் இறுதியில் ‘நோட்டா’வைச் சேர்க்க உச்ச நீதிமன்றம் 2013இல் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில், ஏர்க்காடு தொகுதியில் 2013இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதன்முறையாக ‘நோட்டா’ பயன்பாட்டுக்கு வந்தது. இவிஎம் இயந்திரத்தின் கடைசி பொத்தான் இதுவே.

தேர்தல் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்த ‘நோட்டா’ பயன்பட்டாலும், எந்தவொரு வேட்பாளரையும் நிராகரிக்கும் உரிமை இதன் மூலம் வாக்காளருக்கு அளிக்கப்படுவதில்லை. அதுமட்டுமன்றி, ஒரு தொகுதியில் அதிகப்படியான ‘நோட்டா’ பதிவாகி இருப்பினும், அதிகப்படியான வாக்குகள் பெற்ற வேட்பாளரே வெற்றி பெறுவார்.

வாக்குப்பதிவின் வரலாறு | சொல்... பொருள்... தெளிவு
கேரள தேர்தலில் மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் அணிகள் இடையே கடும் போட்டி: கருத்துக் கணிப்பில் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in