

மனிதர்கள் எப்போதுமே தங்களுக்கு மேலே விரிந்து கிடக்கும் பரந்த வானத்தை நோக்கி வியப்புடன் கேள்விகளைக் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். பூமி எப்படித் தானாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது, நிலவின் ஒரு பக்கத்தை மட்டும் நாம் காண்பது ஏன், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் ஏன் அதிகரிக்கவில்லை, ஆப்பம் வடிவில் விண்மீன் மண்டலங்கள் இருப்பது ஏன், வால்மீன்களுக்கு வால் வந்தது எப்படி, குறுங்கோள்கள் பூமியைத் தாக்குமா, யுரேனஸ், நெப்டியூன் கோள்களில் வைரமழை பொழிகிறதா போன்ற கடினமான கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நூல்கள் தமிழில் இல்லை என்கிற குறையைப் போக்கும் விதத்தில் அறிவியலாளர் த.வி. வெங்கடேஸ்வரன் எளிமையான நடையில் இந்நூலை எழுதியுள்ளார்.
வானியல் தகவல்கள் மட்டுமல்லாமல் நவீன விண்வெளி அறிவியலும் எதிர்காலமும் இந்த நூலில் எழுதப்பட்டிருக்கின்றன. விண்வெளி நிலையத்தில் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது, விண்கலங்களுக்கு எரிபொருள் எவ்வாறு கிடைக்கிறது, மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகள், குறுங்கோள்களால் பூமிக்கு ஆபத்து வருமா, விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு அச்சுறுத்தல் வருமா போன்ற தலைப்புகளிலும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சுவாரசியத்தை அளிக்கிறது. நீண்ட காலமாக அறிவியல் உலகம் பெரிதும் தேடிக்கொண்டிருக்கும் ‘ஏலியன்கள் இருக்கிறார்களா?’ என்கிற கேள்விக்கான தற்போதைய அறிவியல் சாத்தியக்கூறுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்நூல் விண்வெளி அறிவியலைத் தத்துவார்த்தமான எண்களிலிருந்தும், கடினமான சூத்திரங்களிலிருந்தும் விடுவிக்கிறது.எல்லாரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்துள்ள இந்நூல், மாணவர்களிடமும் அறிவியல் ஆர்வலர்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏலியன்கள் இருக்கிறார்களா?
த.வி.வெங்கடேஸ்வரன்
‘இந்து தமிழ் திசை’ வெளியீடு
விலை: ரூ.180
தொடர்புக்கு: 7401296562
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications