

கங்கையும் கடாரமும் கொண்டவன் ராஜேந்திர சோழன். அவன் கட்டுவித்த கோயில் ‘கங்கை கொண்ட சோழீச்சரம்’. ‘காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே’ என்ற அப்பரடிகள் கூற்றுக்கிணங்க அக்கோயிலை எழுத்தின்வழிநம் கண்முன் காட்டுவிக்கிறார் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன். அவர்தம் ‘இராஜராஜேச்சரம்’ நூலின் சிறப்பெல்லாம் இதற்கும் பொருந்தும்.
திருக்கோயிலின் அமைப்பையும் அது கட்டப்பட்ட வரலாற்றையும் சுருக்கமாகக் கூறி நம்மைக் கோயிலுக்குள் கூட்டிச் செல்கிறார் ஆசிரியர். பின்னர் கோயிற் கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியே விளக்கிக் காட்டுகிறார். அவற்றைப் பிற கோயில்களோடு ஒப்பிட்டுக் காட்டும் இடங்கள் நுட்பமான ஆராய்ச்சிகளாகும். அதன்பிறகு கோயிலில் எழில்கொஞ்ச நிற்கும் சிற்பங்களைப் பற்றி விரிவாக விவரிக்கிறார். சிற்பத்தின் வடிவமைப்பு, புராண வரலாறு, இலக்கிய ஆளுகை முதலியவற்றையும் விளக்குகிறார்.