

நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் ‘இந்திய உயர் கல்வி ஆணைய மசோதா 2025’ தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுச் சட்டமாகும் நிலையில், இந்திய உயர் கல்வியில் பெருமளவில் மாற்றங்கள் நிகழவிருக்கின்றன.
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், அவற்றுக்கு உள்பட்ட கல்லூரிகள் ஆகியவற்றின் உயர் கல்வியை நிர்வகிக்க - பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏஐசிடிஇ), தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) ஆகிய அமைப்புகள் செயல்படுகின்றன.
தனித்தனியாகச் செயல்படும் இவற்றைக் கலைத்துவிட்டு, அனைத்து உயர் கல்விச் செயல்பாடுகளையும் இந்திய உயர் கல்வி ஆணையத்தின்கீழ் (Higher Education Commission of India - HECI) கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதில் மருத்துவம், சட்டக் கல்லூரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைக்கப்படும் அமைப்புகள்: இந்தியாவில் உள்ள கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், அவற்றுடன் இணைக்கப்பட்டு உள்ள கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களை வழிநடத்துவது யுஜிசி அமைப்பு. பொறியியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களும், அத்துறை சார்ந்த உயர் கல்வி நிறுவனங்களும் ஏஐசிடிஇக்குக் கட்டுப்பட்டவை.