இலையுதிர் காலம். 1998. பெய்ஜிங்கில் (Beijing) நான் புது மாணவன். சீன மொழி பயில வந்த வெளிநாட்டு மாணவர்களுக்காக, எங்கள் கல்லூரியில் மரபு முறைப்படி விருந்து தொடங்கியது.
அலங்கரிக்கப்பட்ட விறகு அடுப்பில் வைக்கப்பட்டிருந்த அரை ஆள் உயரமுள்ள சூப் பானை, நம் ஊர் பொங்கல் பானைகளை நினைவூட்டியது. கப்புகளில் பரிமாறப்பட்ட சூப் நல்ல அசைவச் சுவையோடும் காரசாரமாகவும் இருந்தது.
சுவையின் சாகசம்
ஹூ என்ற ஆங்கிலம் தெரிந்த ஒருங்கிணைப்பாளரிடம் சென்று, “இது சிக்கன் சூப்பா?” என்றேன். அந்த சீனப் பெண்ணுக்கு அந்த சூப்பின் ஆங்கில வார்த்தை நினைவுக்கு வராததால், “போய்க் கலக்கிப் பாருங்கள்” என்றார்.
ஆவி பறக்கும் அந்தப் பானைக்குள் கரண்டியை விட்டு அடியிலிருந்து நான் மேலே தூக்கினேன். அடர்த்தியான அந்தத் திரவத்திலிருந்து ஒரு பெரிய ஆமையின் ஓடு மேலே வந்தது. அதிர்ச்சியில் கத்திவிட்டேன். அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள். ஆமை ஓட்டை மீண்டும் சூப்புக்குள் நழுவவிட்டேன்.
“என்ன ஆயிற்று?” என்று ஹூ கேட்டார். எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினேன். அவர், “சூப் பிடித்திருந்தது என்றீர்களே? இந்த சூப்பைச் சாதாரண நாள்களில் செய்ய மாட்டோம். சிறப்பு விருந்தினர்களுக்காகவே செய்திருக்கிறார்கள். மனிதர்கள் உண்ணும் உணவு வகைகள் எல்லாம் அடிப்படையில் நல்ல உணவுதானே!” என்றார்.
அவரது வார்த்தைகள் உணவு குறித்த என் தயக்கங்களைக் கொஞ்சம் அசைத்தன. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எடுத்த சிறுசிறு முடிவுகளால், அடுத்த பத்து ஆண்டுகளில் நான் ஒரு சாகச உணவுப் பிரியனாக மாறினேன். பல கண்டங்களில், பழக்கமில்லாத உணவு வகைகளையும் தயக்கமில்லாமல் சுவைத்துப் பார்த்தேன். பெரிய, அதிர்ச்சியூட்டும் பட்டியல் அது.