கால்பந்து திருவிழா: களத்துக்கு அப்பால்...

கால்பந்து திருவிழா: களத்துக்கு அப்பால்...
Updated on
2 min read

1930இல் உருகுவே நாட்டில் நடைபெற்ற முதல் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் வெறும் 13 அணிகள் மட்டுமே பங்கேற்றன. அதிலிருந்து 52 ஆண்டுகளுக்கு பிறகு, 1982இல் இத்தாலியில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில்தான் அந்த எண்ணிக்கை 24ஆக உயர்த்தப்பட்டது.

1998இல் ஃபிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரின்போது 32 அணிகள் களமிறங்கின. இத்தொடரில் விளையாடிய குரோஷியா, அறிமுக உலகக் கோப்பையிலேயே 3ஆவது இடத்தைப் பிடித்து ஆச்சரியப்படுத்தியது. அதில் இருந்து 32 அணிகள் பங்கேற்பது வழக்கமாக இருந்த நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 48 அணிகள் களம் காண்கின்றன.

‘8’ வெற்றியாளர்கள்

2026இல் நடைபெற இருப்பது 23ஆவது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை. உலகின் பல்வேறு நாடுகள் இத்தொடருக்குத் தேர்ச்சி பெற்று விளையாடி இருந்தாலும் எட்டு அணிகள் மட்டுமே இதுவரை கோப்பையை வென்றுள்ளன: பிரேசில் (5), ஜெர்மனி (4), இத்தாலி (4),

அர்ஜென்டினா (3), ஃபிரான்ஸ் (2), உருகுவே (2), இங்கிலாந்து (1), ஸ்பெயின் (1).

ஆயிரம் களம்

இம்முறை ஜப்பான் - துனிசியா அணிகள் மோதும் குரூப் எஃப் போட்டி, உலகக் கோப்பை வரலாற்றில் 1,000ஆவது ஆட்டமாகப் பதிவாக உள்ளது. இந்த மைல்கல்லை எட்ட உலகக் கோப்பைக்கு 96 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.

ஆனால், 104 போட்டிகள் கொண்ட புதிய உலகக் கோப்பை வடிவம் தொடர்ந்தால், இன்னும் 10 தொடர்களில் அதாவது ஏறக்குறைய 40 ஆண்டுகளில் உலகக் கோப்பை வரலாற்றின் 2,000ஆவது போட்டியையும் காணலாம்.

ஆசிய நாடுகள் தென் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்திவரும் கால்பந்து உலகக் கோப்பையில் ஜப்பான், தென் கொரியா, ஈரான், செளதி அரேபியா ஆகிய ஆசிய நாடுகளும் தொடர்ந்து பங்கேற்றுத் தடம்பதித்துள்ளன.

ஆனால், உலகக் கோப்பை வரலாற்றில் களமிறங்கிய முதல் ஆசிய அணி ‘டச்சு கிழக்கு இந்தியத் தீவுகள்’. 1938ஆம் ஆண்டு ஃபிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அறிமுகமான அந்த அணி, தற்போது இந்தோனேசியக் கால்பந்து அணியாக அடையாளம் காணப்படுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in