தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கலை வரலாற்று ஆசிரியர்களில் ஒருவர் குடவாயில் பாலசுப்ரமணியன். தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் 27 ஆண்டுகள் பணியாற்றியவர். தஞ்சாவூர் மாவட்டக் கல்வெட்டுகள், கோயில்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டவர்.
சோழர் வரலாற்றைக் கலை, இலக்கியச் சான்றுகளின் ஊடாக விரிவாக்கம் செய்து, முந்தைய பல அறிஞர்களின் ஆய்வு முடிவுகளைத் திருத்தி எழுதியவர். முதுமையிலும் அயராமல் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்துவரும் பாலசுப்ரமணியனுடன் உரையாடியதிலிருந்து...

சிறு வயதில் சோழர் கால நாணயங்களைக் கண்டெடுத்ததாகப் பதிவுசெய்திருக்கிறீர்கள். அப்போது என்ன தோன்றியது?
பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒருநாள் திடீர் மழை. அருகிலிருந்த கருவேலங்காட்டில் ஒதுங்கி நின்றோம். மழையால் ஏற்பட்ட மண் அரிப்பில் பல பழங்காசுகள் என் கண்ணில் பட்டன.
அவற்றைச் சேகரித்து எடுத்து வந்தபின், அவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதை அறிய முயன்றேன். அவை பிற்காலச் சோழர் - பாண்டியர் காலத்தவை. ஒரு நாணயத்தில் ‘உரக’ என்கிற எழுத்துகள் அச்சிடப்பட்டிருந்தன. அது சோழர்கள் இலங்கையை வெற்றி கொண்டதைக் குறிக்கும் நாணயம். இப்படித்தான் வரலாற்றின் மீதான ஆர்வம் பெருகிற்று.
கோயில் கட்டிடக் கலையை உங்கள் வரலாற்று ஆய்வுக்கான முதன்மைக் களமாகக் கொள்வதற்குக் காரணம் என்ன?
தொல் பழங்காலத்துள் நுழைய கோயில் கட்டிடக் கலையே அதிகச் செய்திகளைக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வரலாறு என்பது கோயில்களைச் சார்ந்த ஒன்றுதான். எனது முனைவர் பட்ட ஆய்வுக்குக்கூட ‘தமிழகக் கோபுரக் கலை’ என்கிற தலைப்பையே எடுத்துக்கொண்டேன். எழுபதுகளில் வெளியான எனது முதல் ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு ‘கல்லெல்லாம் கதை சொல்லும் தாராசுரம்’.
தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமியை உங்கள் குருவாகக் குறிப்பிடுகிறீர்கள். அவரிடமிருந்து கற்றுக்கொண்ட முக்கியமான ஆய்வு அணுகுமுறை எத்தகையது?
இரா.நாகசாமியுடன் பழகிய காலத்தில், தமிழ்நாடு முழுவதும் நேரில் சென்று ஆய்வுசெய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. எந்தவொரு கண்டறிதலையும் ஆய்வு முடிவாக உடனே ஏற்றுக்கொள்ளமாட்டார்.
அதன் மூலச் சான்றுகளை நாமே நேரில் சென்று நன்கு ஆராய்ந்து பார்ப்பதன் மூலம்தான் தெளிவுபெற முடியும் என்று அறிவுறுத்துவார். புதிய சான்றுகள் கிடைக்கும்போது, பழைய முடிவுகள் மாற்றம் பெறும் அல்லது மேம்படும் என்பதிலும், ஆய்வில் இது தொடர்ந்து நிகழக்கூடிய மாற்றம் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.