

தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் சரஸ்வதி வேணுகோபாலன்; மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறையின் முதல் தலைவராகப் பணிபுரிந்தவர்; தமிழக அரசு, புதுவை அரசு, பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற பல நிறுவனங்களின் விருதுகளைப் பெற்றவர்.
‘நாட்டுப்புறவியல்-கோட்பாட்டு ஆய்வுகள்’ முதலான இவரது நூல்கள் கவனம் ஈர்த்தவை. 80 வயதைக் கடந்துவிட்ட சரஸ்வதி தற்போது புதுச்சேரியில் வசிக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து...
நாட்டுப்புறவியல் துறைக்கு நீங்கள் வந்தது எப்படி?
1973இல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தேன். அப்போதே முனைவர் பட்ட ஆய்வுக்கும் பதிவுசெய்தேன். பேராசிரியர் முத்துசண்முகம் பிள்ளை துறைத் தலைவராக இருந்தார். தமிழிலும் நிர்வாகத்திலும் மாணவர்களை வழிநடத்துவதிலும் அவர் ஒரு வல்லுநர்.
எனது ஆய்வுக்காக நாட்டுப்புறவியலைத் தேர்ந்தெடுக்குமாறு கூறினார். சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், இலக்கண ஆய்வுகள் மட்டுமே அப்போது முக்கியத்துவம் பெற்றிருந்தன. “நாட்டுப்புறப் பாடல்களுக்காகப் பெண்களைத்தான் நாட வேண்டியிருக்கும். அவர்கள் உன்னிடம் தகவல்களைத் தயக்கமின்றிப் பகிர்ந்துகொள்வார்கள்” என அவர் உத்வேகம் அளித்தார்.
‘சாதி அடிப்படையில் தாலாட்டு, ஒப்பாரிப் பாடல்களில் ஒற்றுமை வேற்றுமைகள்’ என்கிற தலைப்பில் மதுரையை மையமாகக் கொண்டு ஆய்வுசெய்தேன். அப்போது வா.செ.குழந்தைசாமி துணைவேந்தராக இருந்தார். அவரது தலைமையில் வேலைகள் விரைவாக நடைபெற்றன. தரவுகளைச் சேகரிக்கவும் எழுதவும் மூன்று ஆண்டுகள் ஆனாலும், துறைரீதியான வேலைகள் ஆறே மாதங்களில் முடிந்து முனைவர் பட்டத்தைப் பெற்றேன்.
ஆய்வில் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
ஊர்ப்புறங்களில் தாலாட்டை ஓராட்டு, தோராட்டு, ரோராட்டு என்று குறிப்பிட்டனர். 45-80 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பாடினர். மதுரையின் நகரப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியிலும் மக்களின் அணுகுமுறை வெவ்வேறானதாக இருந்தது.
“ஒப்பாரிப் பாடல்களை எதுக்குச் சேகரிக்கிறீங்க?” என நகரப் பகுதிப் பெண்கள் ஒருவித விலகலோடு கேட்டனர். கிராமத்து மக்களிடம் இருந்துதான் ஒப்பாரிப் பாடல்கள் அதிகம் கிடைத்தன. சாதிரீதியாகவும் அணுகுமுறை வேறுபட்டது.