

உள்படம்: டி.என்.ரகு
ஃபி ஃபா உலகக் கோப்பைக் கால்பந்துத் திருவிழா அடுத்த ஒரு மாதத்துக்குத் தொடர உள்ளது. முதல் முறையாக அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இத்தொடர் குறித்துப் பத்திரிகையாளர், வர்ணனையாளர் டி.என்.ரகுவிடம் பேசியதிலிருந்து...
உலகின் பல நாடுகளையும் சமூகங்களையும் கால்பந்து விளையாட்டு வலுவாக இணைக்க என்ன காரணம்?
அனைவராலும் விளையாட முடிகிற, ரசிக்க முடிகிற, எளிமையான, ஜனநாயகமான விளையாட்டு கால்பந்துதான். மற்ற விளையாட்டுகளைப் போன்று கால்பந்து விளையாட்டிலும் சில உத்திகளைப் பின்பற்ற வேண்டும் என்கிறபோதும், சாதாரண மக்களை அந்நியப்படுத்தும்படியான உத்திகளாக அவை இருக்காது.
மொத்தமே 17 விதிமுறைகள்தான். காலங்காலமாக இதில் வெகு சில மாற்றங்களே செய்யப்பட்டுள்ளன. அதனால் கால்பந்து மீதான உற்சாகம் மங்கவே இல்லை. அதைப் போல நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுவதால் இத்தொடரின் மதிப்பும் அப்படியே தொடர்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளும் கால்பந்து உலகக் கோப்பையும்தான் உலகத்தையே இணைக்கக்கூடிய முக்கியமான தொடர்கள். கால்பந்து கிளப் போட்டிகளில் இருக்கும் கசப்புணர்வு உலகக் கோப்பையின்போது இருக்காது. இன்னொரு அணியின் மீது வெறுப்பு, கிண்டல் ஆகியவற்றை வெளிப்படுத்தாமல் ஒட்டுமொத்தமாகவே உற்சாக மனநிலையில் ரசிகர்களைக் காணலாம்.
பல நாடுகளுக்குக் கால்பந்து ஓர் அடையாளமாக இன்றும் உள்ளது. 1954இல் நடைபெற்ற உலகக் கோப்பையை மேற்கு ஜெர்மனி வென்றது. இரண்டாம் உலகப் போர் காரணமாக ஜெர்மனியின் மீது ஏற்பட்டிருந்த வெறுப்பையும் கசப்பான அடையாளத்தையும் மாற்ற இந்த வெற்றி முக்கியக் காரணியாக அமைந்தது எனலாம். யுகோஸ்லாவியாவில் இருந்து தனி நாடாகப் பிரிந்த குரோஷியாவுக்குக் கால்பந்து ஒரு அடையாளத்தைத் தந்தது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ என மூன்று நாடுகள் இணைந்து உலகக் கோப்பையை நடத்துவதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன?
பொதுவாக, எதிலிருந்தும் அரசியலைப் பிரிக்க முடியாது. அதற்கு விளையாட்டும் விதிவிலக்கல்ல. ஃபிஃபா உலகக் கோப்பைக்கு ஈரான் அணி தேர்வாகி இருந்தாலும் அமெரிக்க - ஈரான் போர் காரணமாக ஈரான் அணி வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் இருந்தது.
2022இல் கத்தாரில் உலகக் கோப்பை நடைபெற்றபோது 100 டாலருக்கும் குறைவான விலையில் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆகின. அமெரிக்காவில் 1,000 டாலர் விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதால் மக்களுக்கான விளையாட்டு மக்களுக்கானதாக இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
அமெரிக்காவில் அமெரிக்கக் கால்பந்து விளையாட்டும் பேஸ்பாலும் பிரபலம். கனடாவைப் பொறுத்தவரை ஐஸ் ஹாக்கி பிரபலமான விளையாட்டு. ஆனால் மெக்சிகோவில் கால்பந்துதான் நம்பர் 1, 2, 3 எல்லாம். ஆனால், அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் மெக்சிகோவில் அதிக எண்ணிக்கையிலான உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறாதது வருத்தமான விஷயம்.
இதற்கு முன்பு மெக்சிகோவில் நடைபெற்ற இரண்டு கால்பந்து உலகக் கோப்பைத் தொடர்களுமே வரலாற்றுச் சிறப்புமிக்கவை. 1970இல் உலகக் கோப்பையை பிரேசில் தட்டிச்சென்றது. கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அது மூன்றாவது உலகக் கோப்பைத் தொடர்.
1986இல் மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை காலிறுதிப்போட்டியில் இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகள் மோதின. மரடோனாவின் ‘கடவுளின் கை’, ‘நூற்றாண்டின் சிறந்த கோல்’ ஆகிய வரலாற்று நிகழ்வுகள் பதிவான சிறப்பு மெக்சிகோவுக்கு உண்டு.
நட்சத்திர வீரர் ரொனால்டோ இடம்பெற்றுள்ளபோதும் போர்ச்சுகலின் உலகக் கோப்பைக் கனவு நனவாகாமல் இருக்கக் காரணம்?
போர்ச்சுகல், உலகக் கோப்பையை வெல்லும் திறன் கொண்ட அணிதான். அதேவேளையில், ரொனால்டோ இருப்பதே அந்த அணிக்கு ஒரு பின்னடைவு எனலாம். வயதாகிவிட்டபோதிலும் உடலளவில் கட்டுக்கோப்பாகவே இருந்தாலும் அணியில் ரொனால்டோ இடம்பெறுவதால் மற்ற வீரர்களுக்கு மறைமுக அழுத்தம் ஏற்படுகிறது.
ரொனால்டோ மாற்று வீரராக இறங்கினால் போர்ச்சுகலுக்குப் பலமாக அமையும். அதுமட்டுமன்றி அவர் செளதி ப்ரோ லீகில் விளையாடுகிறார். ஐரோப்பிய லீக் தொடர்களில் விளையாடினால் மட்டுமே முழுத் திறன்கொண்டு முன்னணியில் ஒரு வீரரால் இயங்க முடியும். ரொனால்டோ அதில் இல்லாததும் அவருக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.
கோப்பையை வெல்லக்கூடிய அணி எது என்பது பற்றி உங்களின் கணிப்பு?
உலகக் கோப்பையை பிரேசில் வெல்ல வேண்டுமென மனம் சொல்கிறது. அந்த அணியைச் சேர்ந்த நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மருக்கு உலகக் கோப்பை கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா கோப்பையைத் தக்கவைப்பது சவாலாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
அணிகளின் பலம், ஃபார்ம் ஆகியவற்றைக் கணக்கில் எடுக்கும்போது ஸ்பெயின் அல்லது ஃபிரான்ஸ் கோப்பையை வெல்லலாம் என்பது என் கணிப்பு. புதிய நம்பிக்கை நட்சத்திரங்களில் ஸ்பெயின் அணியின் லமின் யமால் (18 வயது) முக்கியமானவர்.
இந்திய ரசிகர்களின் ஆதரவு எந்த அணிக்கு இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
இந்தியாவில் வண்ணத் தொலைக்காட்சிகள் வந்த நேரத்தில்தான் மரடோனாவின் உலகக் கோப்பைப் பங்கேற்பு நிகழ்ந்தது. கால்பந்து விளையாட்டில் இந்தியாவுக்கு எனத் தனிச் சாதனைகள் இல்லையென்றாலும் கால்பந்தை ரசிப்பவர்கள் இங்கு ஏராளம்.
கால்பந்து ரசிகர்களாக இல்லாத இந்தியர்களும் உலகக் கோப்பையைக் கண்டு ரசிப்பார்கள். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாமுவேல் முத்துசாமி, நிஷான் வேலுப்பிள்ளை, தஹ்சின் முகமது ஜம்ஷித், சர்பிரீத் சிங் ஆகிய நான்கு வீரர்கள் உலகக் கோப்பையில் களம் காண்பது இந்திய மண்ணுக்குத் தனிச்சிறப்பு!
கால்பந்து இந்தியாவில் பரவலாகாமல் இருப்பதற்கு கிரிக்கெட் காரணமல்ல. அது மக்களின் விருப்பம். இந்தியக் கால்பந்து சம்மேளனத்தின் மெத்தனப்போக்கைத்தான் காரணமாகச் சொல்ல முடியும். இந்தியாவில் கால்பந்து பிரபலமாகத்தான் இருக்கிறது.
தங்களுடைய குழந்தைகள் கால்பந்து விளையாட வேண்டும் எனப் பெற்றோருக்கும் ஆர்வம் இருக்கிறது. ஆனால், மாநில / தேசிய அளவில் அதிகார ஒழுங்குமுறை இல்லை. இந்த ஆண்டு இந்தியக் கால்பந்து அணி ஆசியக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெறவில்லை என்பது கவலையான விஷயம். இந்நிலை மாற வேண்டும்!
- தொடர்புக்கு: karthiga.rajendran@hindutamil.co.in