அலையாத்திக் காடுகளைப் போலவே மணல் மேடுகளும் முக்கியம்: மீனவச் செயல்பாட்டாளர் க.சரவணன்

கருத்துப் பேழை சந்திப்பு
க.சரவணன்

க.சரவணன்

Updated on: 
3 min read

மீனவர்களின் வாழ்விட உரிமைகளை மீட்டெடுக்க, நவீன வரைபடத் தொழில்நுட்பத்தையும் (GPS) சட்ட வழிமுறைகளையும் இணைத்துப் போராடிவருபவர் சென்னையைச் சேர்ந்த க.சரவணன். ஊரூர்குப்பம் மீன்பிடிப்போர் கூட்டுறவுச் சங்க முன்னாள் செயலாளரான இவர், ‘கடற்கரை விரைவுச்சாலை’ (Beach Expressway) திட்டத்துக்கு எதிராகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக வெற்றிகண்டவர். அவருடன் உரையாடியதிலிருந்து...

Q

மீன்பிடித் தொழிலில் பெரிய இயந்திரப் படகுகளும் இழுவலைப் படகுகளும் (டிராலர்கள்) கரையோர மீன்பிடித்தலை மட்டுமே நம்பி வாழும் சிறுவலை, கரைவலை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றனவா?

A

தமிழ்நாடு கடல்சார் மீன்பிடித்தல் ஒழுங்குமுறை விதிகளின்படி, கரையிலிருந்து ஐந்து கடல் மைல் (9.26 கி.மீ.) தூரத்துக்குள் பெரிய இயந்திரப் படகுகள் மீன்பிடிக்கக் கூடாது. ஆனால், அவை பெரும்பாலும் இந்த எல்லைக்குள்ளேயே குறிப்பிடத்தக்க அளவில் நடக்கவே செய்கின்றன.

வணிக நோக்கில் தேவைக்கு அதிகமாக மீன்வளம் சுரண்டப்படுவதால், கரையோர மீன்பிடித்தலை மட்டுமே நம்பியுள்ள பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தள்ளப்பட்டுள்ளது.

Q

தமிழக மீனவர்கள் தங்களுடைய பாரம்பரிய வாழ்விடங்களை இழந்துவருவதாக நீங்கள் சொல்ல என்ன காரணம்?

A

சென்னைத் துறைமுகம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றின் அலைத்தடுப்புச் சுவர்கள், கடல் நீரோட்டத்தையும் மணல் நகர்வையும் மாற்றியுள்ளன. இதனால் துறைமுகங்களின் தெற்குப் பகுதியில் மணல் சேர்ந்து, மெரினா கடற்கரை நீண்டுகொண்டே போனது.

அதே நேரத்தில், வடக்கே உள்ள திருவொற்றியூர், எண்ணூர்க் கடற்கரைப் பகுதிகளில் கடல் அரிப்பு பெருமளவு ஏற்பட்டது. அங்கே அளவீடு செய்யப்பட்ட நிலப்பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிட்டன.

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களிலிருந்து கடலில் வெளியேற்றப்படும் அடர்த்தி மிகுந்த உப்புக் கரைசல் கழிவு நீரால், மீன் இனப்பெருக்க இடங்கள் பாதிக்கப்படுகின்றன. இறால் பண்ணைத் தொழிலுக்கான இறால் குஞ்சு பொரிப்பகங்கள் உயரலைக் கோட்டிலிருந்து 200 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன. இவை குழாய்கள் மூலம் கடல்நீரை எடுத்து, கழிவுநீரைக் கடற்கரையிலேயே வெளியேற்றுகின்றன.

அனல்மின் நிலையங்களோ சாம்பல் கழிவையும் சூடான நீரையும் கழிமுகம் வழியாகக் கடலில் விடுவதால், மீன் இனப்பெருக்கமும் மீன்பிடித் தொழிலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா மேம்பாடு என்கிற பெயரில் உல்லாச விடுதிகள், நட்சத்திர விடுதிகள், கேளிக்கைப் பூங்காக்கள், நீலக்கொடித் திட்டங்கள் (Blue Flag Certification) ஆகியவை உயரலைக் கோட்டுக்கு மிக அருகில், கடற்கரையை ஒட்டி அமைக்கப்படுகின்றன.

இதனால் கரையோர மீன்பிடித் தொழில்களுக்கான இடங்கள் சுருங்கியும் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. மீனவர்கள் தொன்றுதொட்டுப் பயன்படுத்தி வந்த கடற்கரைப் புறம்போக்கு மற்றும் மீன் உலர்த்தும் புறம்போக்கு நிலங்கள் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டு ஒப்படைக்கப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது.

Q

கொசஸ்தலை ஆற்றில் கரையோரக் கடல் மீன் வகைகள் சமீபத்தில் டன் கணக்கில் செத்து மிதந்தது ஏன்?

A

எண்ணூரைச் சுற்றிலும் அபாயகரமான தொழிற்சாலைகள் அதிக அளவில் செயல்பட்டுவருகின்றன. இவற்றிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுகளும் நகரக் கழிவுகளும் பக்கிங்காம் கால்வாய் வழியாகவும், ஆற்றின் இருகரைகளில் இருந்தும் நேரடியாக ஆற்றில் கலக்கின்றன.

வேதிப் பொருள் சேமிப்புத் தொட்டிகளைச் சுத்தம்செய்ததால் உருவான கழிவுகளும் ஆற்றில் விடப்படுவதாகவும், அதிக வெப்பமுள்ள சூடான நீர் வெளியேற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவையே கரையோரக் கடலிலிருந்து எதிர் நீந்திவரும் மீன்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் பெருமளவில் இறந்து மிதக்க முக்கியக் காரணங்கள்.

Loading content, please wait...

X