

ஐரோப்பாவில் நிலவும் ‘வெப்ப அலை’ உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. வெப்ப அலையால் கடந்த ஜூன் 21 தொடங்கி 1,300க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.
அமைதியான கொலையாளி
வெப்ப அலையால் மரணம் என்கிற செய்தியைக் கேள்விப்படுகையில், ஒருவர் அப்படியே வெயிலில் சுருண்டு விழுந்து இறந்துவிடுவது போன்ற ஒரு கற்பனை நமக்குள் விரியும். இது வெப்ப மண்டலப் பகுதி மக்களின் கற்பனை.
ஐரோப்பாவின் நிலைமை வேறு. அங்கு இரவுநேர வெப்பத் தாக்குதல்தான் பெரும் உயிரிழப்புக்குக் காரணமாகிறது. வீட்டில் அமைதியாக உறங்குபவர்களே, அதிலும் குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களே அதிகம் மரணமடைகின்றனர். எனவேதான், வெப்ப அலையை ‘அமைதியான கொலையாளி’ (Silent Killer) என்கின்றனர்.
நவீன ஐரோப்பிய வானிலை வரலாற்றில், கடந்த 2003ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெப்ப அலைதான் உச்சமானதாகக் கருதப்பட்டது. அப்போது ஏறக்குறைய 70,000 பேர் பலியாகியிருந்தனர். ஃபிரான்ஸில் மட்டும் அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் முதல் மூன்று வாரத்துக்குள்ளாக 14,800 பேர் மரணத்தைத் தழுவினர்.
குளிர்ப் பகுதியான ஐரோப்பாவின் கட்டிடங்கள், அதன் சுற்றுச்சூழல் இயல்புக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தன. இரவு நேர வெப்பத்தைத் தக்கவைத்து, கடும் குளிரைத் தவிர்க்கும் வகையில் கண்ணாடி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருந்தன.
ஐரோப்பாவின் சூழலுக்கு அவசியமற்றது என்கிற காரணத்தால் குளிரூட்டி (ஏ.சி.) இயந்திரப் பயன்பாடும் இருக்கவில்லை. அதே காரணத்துக்காக, மின்விசிறிகளும் குறைவு. ஆதலால், இரவுநேர வெப்பம் வெளியேறாமல் தங்கி நீடிக்க உதவிய இந்த அமைப்புதான் வெப்ப அலைக் காலத்தில் எதிரியாக மாறுகிறது.
விளைவாக முதியவர்கள், தீவிர நோயாளிகள் தம் உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் திறனை இழக்கின்றனர். அதுவே, உறக்கத்தில் மரணம் ஏற்படவும் வழிவகுக்கிறது. இதை அறிந்ததும் அங்கு கட்டிட வடிவமைப்புகள் சீரமைக்கப்பட்டன.