

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அரசியல் வரலாற்றில் ஓர் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது. ஏறக்குறைய ஆறு தசாப்த கால இருமுனைத் திராவிட ஆட்சியை முறியடித்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஓர் அரசியல் மாற்றத்தைச் சாதித்துள்ளது.
தேர்தல் கொண்டாட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையில், புதிய மாநில நிர்வாகம் ஓர் இக்கட்டான குறுக்குச் சாலையில் (Crossroad) நிற்கிறது. தமிழ்நாட்டின் தற்போதைய கடுமையான பொருளாதார யதார்த்தங்களை எதிர்கொள்வதற்குச் சீரிய கொள்கை முடிவுகளும் பொருளாதார மேலாண்மையும் அவசியம்.
மலைபோல் கடன் சுமை
புதிய அரசு எதிர்கொள்ளும் உடனடிச் சவால் மாநிலத்தின் நிதி நிலைமை. 2026-27 நிதியாண்டில் மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை சுமார் ரூ.10.71 லட்சம் கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் செலவு செய்யும் திறனை நேரடியாகப் பாதிக்கிறது.
மார்ச் 2026 நிலவரப்படி, கடனுக்கான வட்டி - அசல் திருப்பிச் செலுத்தும் தொகை (Interest plus Principal Repayment) மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.1.16 லட்சம் கோடி என்கிற பிரம்மாண்ட அளவைத் தொடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன் சுமை மாநிலத்தின் மூலதனச் செலவினங்களை (Capital Expenditure) விழுங்கிவிடுகிறது. அரசு ஈட்டும் வருவாயில் பெரும்பகுதி பழைய கடன்களை அடைப்பதற்கே சென்றுவிடுவதால் புதிய பள்ளிகள், மருத்துவமனைகள், பிற உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான நிதி கடுமையாக முடக்கப்படுகிறது.
மேலும் மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் சந்திக்கும் நிதி நெருக்கடி நிலையை மேலும் சிக்கலாக்குகிறது. மின்சாரத் துறையில் மார்ச் 2026 தரவுகளின்படி ரூ.1.5 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் உள்ளது.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், தமிழக வெற்றிக் கழகம் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் நிதி மேலாண்மைக்குப் பெரும் சவாலாக அமையப்போகின்றன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி, ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கான மாத உதவித்தொகை போன்ற நலத்திட்டங்கள் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.