ஆதிக்கம் இழக்கிறதா அமெரிக்க டாலர்? | சொல்... பொருள்... தெளிவு

பிரிக்ஸ் நாடுகளின் நகர்வால் புதிய மாற்றங்கள் ஏற்படலாம்
ஆதிக்கம் இழக்கிறதா அமெரிக்க டாலர்? | சொல்... பொருள்... தெளிவு
Updated on: 
3 min read

ஈரான் - அமெரிக்க ராணுவ மோதலுக்குப் பிறகு, நாடுகளுக்கு இடையிலான உலக வர்த்தகத்தில் ‘டாலருக்கு மாற்று’ (De-dollarization) என்கிற சொல்லாடல் பிரபலமாகி இருக்கிறது.

உலக வர்த்தகத்தில் சர்வதேசப் பரிவர்த்தனை நாணயமாகத் தசாப்தங்களாக நீடித்துவரும் அமெரிக்க டாலரின் ஒற்றை ஆதிக்கத்தைக் குறைத்து அதற்கு மாற்றாக, பன்முகக் கட்டண முறைகளை நோக்கிப் படிப்படியாக நகர்வதற்கான முன்னெடுப்பாகவே இது தெரிகிறது.

அண்மையில், டெல்லியில் நடைபெற்ற 18ஆவது பிரிக்ஸ் (BRICS 2026) மாநாட்டில், ‘டி-டாலரைசேஷன்’ என்கிற நகர்வை உலகப் பொருளாதாரத்தில் தவிர்க்கவியலாத புதிய யதார்த்தமாக முன்னெடுப்பதற்கான வலுவான அடித்தளத்தை பிரிக்ஸ் நாடுகள் ஒருமனதாக முன்மொழிந்திருக்கின்றன.

அச்சாணியாக டாலர்

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டன. அப்போது, பல உலக நாடுகளுக்குப் பெரிய அளவில் அமெரிக்கா நிதியுதவி செய்து, உலகின் பெரும் பகுதி தங்கத்தின் இருப்பைத் தன்வசப்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, 1944இல் நடைபெற்ற பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகிய இரண்டு சர்வதேச நிதி நிறுவனங்கள் டாலரை மையமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டன. அமெரிக்கா தன் பங்குக்கு ‘35 டாலர்கள் தந்தால் ஒரு அவுன்ஸ் தங்கம்’ என்கிற வீதத்தில் டாலரின் மதிப்பைத் தங்கத்துடன் (Gold Standard) நேரடியாக இணைத்தது. இதனால் உலகப் பொது நாணயமாக டாலர் உருவெடுத்தது.

இதன் பின்னர், 1971இல் அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த ரிச்சர்ட் நிக்சன், டாலரைத் தங்கமாக மாற்றிக்கொள்ளும் முறையை அதிரடியாக ரத்து செய்தார்.

இருப்பினும், 1970களின் மத்தியில் சவுதி அரேபியா உள்ளிட்ட ஒபெக் (OPEC) நாடுகளுடன் அமெரிக்கா செய்துகொண்ட ‘பெட்ரோடாலர் ஒப்பந்தம்’, உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்கிற கிடுக்கிப்பிடியை போட்டது.

இதனால், உலகில் எந்தவொரு நாட்டுக்கும் கச்சா எண்ணெய் வாங்க டாலர் தேவைப்பட்டதால், தங்கத்தின் ஆதரவு இல்லாமலேயே உலகின் அசைக்க முடியாத ஏகபோக ஆதிக்க நாணயமாக, உலக வர்த்தகத்தின் அச்சாணியாக டாலர் நிலைத்து நிற்கத் தொடங்கியது.

விழுந்தது சம்மட்டி அடி

கடந்த 2000இல் உலக நாடுகளின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் டாலரின் பங்கு என்பது 70 சதவீதத்துக்கும் மேல் இருந்தது. ஆனால், 2008இல் பேரிடியாக இறங்கிய ‘உலக நிதி நெருக்கடி’ டாலரின் ஏகபோக ஆதிக்கத்துக்குச் சம்மட்டி அடி கொடுத்தது.

அமெரிக்காவின் உள்நாட்டு வங்கிகள், நிதி முறைகேடுகளால் உருவான இந்த நெருக்கடி, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியது. ‘அமெரிக்காவின் நிதிச் சந்தைதான் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது’ என்கிற பிம்பம் நொறுங்கிப்போனது.

அமெரிக்காவின் வங்கி நிர்வாகச் சீர்கேடுகளால் நிகழ்ந்த 2008 நிலைமையைப் போன்ற எதிர்பாராத நெருக்கடிகளால் தங்களுடைய பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதை வளரும் நாடுகள் விரும்பவில்லை.

இதன் விளைவாகத்தான், உலக நிதி அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்கிற நோக்கில் 2009இல் ‘பிரிக்ஸ்’ (BRICS) கூட்டமைப்பு அதிகாரபூர்வமாகத் தோற்றுவிக்கப்பட்டது.

டாலரின் செல்வாக்கைத் தூக்கி நிறுத்திவந்த அமெரிக்க - சவுதி ‘பெட்ரோடாலர்’ ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் அண்மையில் முடிவுக்கு வந்தது. இது டாலர் ஆதிக்கத்துக்குப் பேரிடி. இதன் விளைவாக, இன்று உலக நாடுகளின் டாலர் கையிருப்பு 57 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

வளரும் நாடுகளின் அச்சம்

டாலரின் ஆதிக்க பலமே பல நாடுகளுக்குப் பொருளாதாரப் பலவீனமாக மாறியது. காரணம், சர்வதேச வர்த்தகத்தில் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் அமெரிக்காவின் கண்காணிப்பில் உள்ள வங்கிகள் வழியான ‘ஸ்விஃப்ட்’ (SWIFT- Society for Worldwide Interbank Financial Telecommunication) கட்டண முறை மூலமே நடத்தப்படுவதுதான்.

தனது வெளியுறவுக் கொள்கைகளுக்குச் செவிமடுக்காத ஈரான், ரஷ்யா போன்ற நாடுகள் மீது விதிக்கும் கடுமையான பொருளாதாரத் தடைகள் காரணமாக, டாலரை ஒரு நிதிசார் ஆயுதமாக அமெரிக்கா கையாள்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.

குறிப்பாக, 2022இல் உக்ரைன் போரின் பின்னணியில், ரஷ்யாவின் மத்திய வங்கிக்குச் சொந்தமான 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள வெளிநாட்டுச் சொத்துகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முடக்கின.

டாலர் ‘ஸ்விஃப்ட்’ கட்டண அமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்ட ஈரான், தனது கச்சா எண்ணெய் வர்த்தகத்தை டாலருக்குப் பதிலாக சீன யுவான் (Yuan) போன்ற மாற்று நாணயங்களுக்கு விற்கத் தொடங்கியது.

இந்தியா போன்ற நாடுகள்கூட ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு மாற்று நாணயப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தத் தொடங்கின. என்றாலும் ரஷ்யாவுக்கு அமெரிக்கா காட்டிய கசப்பான முகத்தை, நாளை நாமும் காண நேரிடலாம், தங்களின் சொத்துக்களும் முடக்கப்படலாம் என்கிற அச்சம் இந்தியா, சீனா, வளைகுடா நாடுகளுக்கும் எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியில் இருந்துதான் ‘பிரிக்ஸ் 2026’ மாநாட்டின் ‘புது டெல்லி பிரகடனம்’ வழியே, டாலருக்கான மாற்றை இந்தியாவின் தலைமையில் முன்னெடுக்க ‘பிரிக்ஸ்’ உறுப்பு நாடுகள் உறுதிமொழி ஏற்றுள்ளன.

சொந்த வலிமை

பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் வர்த்தகம் செய்ய டாலரைத் தவிர்த்துவிட்டுத் தங்களின் சொந்த நாணயங்களை முழு வீச்சில் பரஸ்பரம் பயன்படுத்துவது என ஒப்புக்கொண்டுள்ளன. குறிப்பாக, இந்தியா பல்வேறு உலக நாடுகளுடன் நேரடியாக இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய ‘சிறப்பு வாஸ்ட்ரோ கணக்கு’களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை போன்ற நாடுகள் டாலர் இல்லாமல் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்கின்றன.

மேலும், இந்திய ரிசர்வ் வங்கி, பிரிக்ஸ் நாடுகளின் ‘மத்திய வங்கி டிஜிட்டல் நாணய’ங்களை ஒன்றிணைத்து, அதன் மூலம் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை எளிதாக்க முன்வந்துள்ளது.

இந்தியாவின் ‘யுபிஐ’ கட்டண முறையை உலக நாடுகளின் கட்டண அமைப்புகளுடன் இணைப்பதன் மூலம், சர்வதேச நிதிப் பரிவர்த்தனைகளில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ‘ஸ்விஃப்ட்’ முறையின் தேவையைக் குறைத்துவருகிறது.

பயம் உதறிய சவுதி

இதற்கிடையில் சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளர்களாக சீனாவும் இந்தியாவும் உருவெடுத்துள்ளன.

எனவே, 2024இல் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ள சவுதி அரேபியா, தனது கச்சா எண்ணெய்யை சீன யுவான், இந்திய ரூபாய் போன்ற மாற்று நாணயங்களுக்கு விற்கத் தொடங்கியிருப்பது, அமெரிக்காவின் நீண்ட காலக் கூட்டாளிகளே டாலர் சாராத ‘பலமுனை நிதி அமைப்’பை நோக்கி நகரத் தயாராகிவிட்டதை உறுதிப்படுத்துகிறது.

உலக வர்த்தகத்தின் பரிவர்த்தனை நாணயம் என்பது டாலர் என்கிற ‘ஒருமுனை’ ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு, சுதந்திரமான பலமுனை நிதி அமைப்பாகப் பன்முகத்தன்மை பெற்று வருவதையே இந்த ‘டி-டாலரைசேஷன்’ நகர்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆதிக்கம் இழக்கிறதா அமெரிக்க டாலர்? | சொல்... பொருள்... தெளிவு
வடபழனி முருகன் கோயிலில் 30 அடி தூரத்தில் இருந்து சுவாமி தரிசனம்: கூட்டத்தைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in