

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி 30 அடி தூரத்தில் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் என்று உயர் நீதிமன்றத்தில் கோயில் துணை ஆணையர் மனு தாக்கல் செய்துள்ளார்.
வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் பாரபட்சமின்றி தடையற்ற தரிசனம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக வடபழனியைச் சேர்ந்த என்.எஸ்.செந்தில்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், `பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலி்ல் சுவாமி தரிசனம் செய்ய வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுடன் வருவோரிடம் அறநிலையத்துறை ஊழியர்கள் பாரபட்சத்துடன் நடந்து கொள்கின்றனர்.
முருகனை நிம்மதியாக தரிசிக்க முடியாதபடி அறநிலையத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் தன்னிச்சையாக பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். ரூ. 50 ஆக இருந்த சிறப்பு தரிசன கட்டணம் தற்போது ரூ. 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதியவர்கள் முதல் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுடன் வருவோருக்கான இலவச தரிசன பிரத்யேக வழி அடைக்கப்பட்டு, பணம் கொடுப்பவர்களை மட்டும் சிறப்பு தரிசன வழியில் அனுமதிக்கின்றனர்.
பக்தர்களை பணம் கொட்டும் இயந்திரம் போல கோயில் நிர்வாகம் கருதுகிறது. அர்த்த மண்டபத்தில் அமர்ந்து முருகனை தரிசிக்கும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.
10 மீட்டர் தூரத்தில் முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்து வந்த நிலையில், தற்போது அந்த தூரம் 150 மீட்டர் தொலைவாக நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
எனவே வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் பாரபட்சமின்றி தடையற்ற தரிசனம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கில் வடபழனி முருகன் கோயில் துணை ஆணையர் எஸ். லட்சுமி தாக்கல் செய்திருந்த பதில்மனுவில், `மனுதாரரின் குற்றச்சாட்டுகள் தவறானவை.
வடபழனி முருகன் கோயிலுக்கு விசேஷ நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகரித்து வருவதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 150 மீட்டர் தொலைவில் நின்று தான் முருகப்பெருமானை தரிசிக்க அனுமதிப்பதாக கூறுவது தவறு. 30 அடி தூரத்தில் நின்று தரிசிக்கும் வகையில் புதிய வழி அமைக்கப்பட்டுள்ளது.
எவ்வித இடையூறுமின்றி பக்தர்கள் மன நிம்மதியுடன் தரிசனம் மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.