நவீன வாழ்க்கையில் ஞெகிழி (பிளாஸ்டிக்) இன்றியமையாத பொருளாகிவிட்டது. மருத்துவம், வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு, வாகன உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளில் அதன் பயன்பாடு தவிர்க்க முடியாத நிலையை அடைந்திருக்கிறது.
எனவே, ஞெகிழியை முற்றிலும் ஒழிப்பதைவிட, மறுபயன்பாடு / மறுசுழற்சிக்கு உட்படுத்துவதும், பொருத்தமான இடங்களில் சிதைவுறும்மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துவதும் அறிவார்ந்த அணுகுமுறைகளாக அமையும்.
உயிரியல் மூலப்பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் பாலிமர்களும் சிதைவுறும் பாலிமர்களும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
இருப்பினும், உயிரியல் மூலப்பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் அனைத்து பாலிமர்களும் சிதைவுறுபவை அல்ல. அவற்றின் சிதைவுத்தன்மை, பயன்பாடு / சுற்றுச்சூழல் தாக்கம் ஆகியவை அறிவியல் பரிசோதனைகள், உரிய தரச்சான்றுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தொழில் துறைக்கான புதிய மூலதனம்
மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், கரும்புச் சக்கை, நெல் உமி, நெல் வைக்கோல், வாழைத்தண்டு நார், தென்னை நார், கடல் பாசி, தென்னை மட்டை, தேங்காய் ஓடு போன்றவற்றை மதிப்புமிக்க உயிரியல் மூலப்பொருள்களாக மாற்றலாம்.
இவற்றிலிருந்து மாவுச்சத்து, செல்லுலோஸ், இயற்கை நார்களைப் பிரித்தெடுத்துப் புதிய பாலிமர் கலவைகளையும் கூட்டுப்பொருள்களையும் உருவாக்க முடியும். மாவுச்சத்து அடிப்படையிலான மூலப் பொருள்களான பாலிலாக்டிக் அமிலம் (PLA), பாலிஹைட்ராக்சி அல்கேனோயட்ஸ் (PHA) ஆகியவை இத்துறையின் முக்கியமான தொழில்நுட்ப வாய்ப்புகளாகும்.
குறிப்பாக, தென்னை சார்ந்த விவசாயத் துணைப்பொருள்களை வீணாகும் கழிவுகளாகப் பார்க்காமல், தொழில் துறை மூலப்பொருள்களாக மாற்ற வேண்டும். தென்னை நார், மட்டை, தேங்காய் ஓடு போன்றவற்றிலிருந்து பெறப்படும் இயற்கைக் கூறுகளைப் பயன்படுத்திப் பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்டபொருள்களை உருவாக்கலாம். இதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானமும் கிராமப்புறங்களில் புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகும்.