ஆனைமங்கலம் செப்பேடுகள் நாகைக்கே திரும்பட்டும்!

ஆனைமங்கலம் செப்பேடுகள் நாகைக்கே திரும்பட்டும்!
Updated on
2 min read

கல்​கி​யின் ‘பொன்​னி​யின் செல்​வன்’ நாவலை நேசித்த ஒவ்​வொரு தமிழ் நெஞ்​சத்​துக்​கும் சூளாமணி விகார​மும் ஆனைமங்​கலக் கிரா​ம​மும் நன்கு அறி​முகம் ஆகி​யிருக்​கும். அதற்​கான வரலாற்​றுச் சின்​னங்​களான செப்​பேடு​கள் அயல்​நாட்டு அருங்​காட்​சி​யகத்​தில் இது​வரை உறங்​கிக்​கொண்​டிருந்​தன.

3 நூற்​றாண்​டு​களின் தூக்​கத்​தைக் கலைத்​துக்​கொண்​டு, அவை அண்​மை​யில் தாய்​மண்​ணைத் தொட்​டிருக்​கின்​றன. 2026 மே 16-ம் தேதி நெதர்​லாந்​தின் ஹேக் நகரில் நடந்த மீளளிப்பு விழா​வில், அந்த நாட்டு பிரதமர் ராப் ஜெட்​டன், 11-ம் நூற்​றாண்​டைச் சேர்ந்த சோழர் கால ஆனைமங்​கலம் செப்​புத் தகடு​களை பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் முறைப்​படி ஒப்​படைத்​தார். கடந்த 2012 முதல் 14 ஆண்​டு​களாகத் தொடர்ந்த முயற்சி இது.

ஒரு நாகரி​கத்​தின் கண்​ணாடி: இவை ஒரு பேரரசின் நினை​வுத் திரட்​சி. 30 கிலோ எடை​யுள்ள 21 பெருந்​தகடு​களும், பிற்​காலத்​தில் இணைந்த 3 சிறு​தகடு​களு​மான இச்​செப்​பேடு​கள் சோழ அரச முத்​திரையைச் சுமந்து நிற்​கின்​றன.

வடமொழி ஏடு​கள் சோழ மரபின் வழி​வழி வரலாற்​றைப் பாடி​னால், தமிழ் ஏடு​கள் நிலஅளவை முறையை​யும், நிர்​வாகச் சொல்​லாடலை​யும், சட்​டப்​பூர்வ ஆவண மரபை​யும் பதிவுசெய்​கின்​றன. ராஜ​ராஜனின் புகழ்​பெற்ற மெய்க்​கீர்த்​தி, மன்​னர்​களின் வழி​வழிப் பட்​டியல், ஆட்சி அதி​காரி​களின் விவரங்​கள், வென்ற நாடு​களின் குறிப்​பு​கள் - ஒரே ஆவணத்​தில் இரு மொழிகள் தோளோடு தோள் நிற்​பது என ஒரு நாகரி​கத்​தின் திறந்த மனதைக் காட்​டும் கண்​ணாடி.

சமயப் பொறை​யும் பன்​முகப் பண்​பாடும்: கிபி 1005-ல், முதலாம் ராஜ​ராஜ சோழனின் 21-வது ஆட்​சி​யாண்​டில், ஸ்ரீவிஜயப் பேரரசைச் சேர்ந்த மாற​விஜயோத்​துங்க வர்​மன், நாகப்​பட்​டினத்​தில் சூளாமணி வர்ம விகாரத்தை எழுப்​பி​னார். அதை ஆதரித்த சைவ சமயத்​தைச் சார்ந்த ராஜ​ராஜ சோழன், ஆனைமங்​கலம் என்ற முழுக் கிரா​மத்​தையே பள்​ளிச்​சந்​த​மாக வழங்​கி​னார். வேற்​றுச் சமயத்​தின் வழி​பாட்​டிடத்​துக்கு ஒரு மன்​னர் ஊரையே தான​மாக அளித்த அந்​தச் செயல், தமிழ் மன்​னர்​களின் சமயப் பொறையை​யும், இந்த மண்​ணின் பன்​முகப் பண்​பாட்​டை​யும் ஆயிரம் ஆண்​டு​களுக்கு முன்பே எழுத்​தில் நிறுத்​தி​யதற்​கான சான்​று.

ராஜ​ராஜ சோழன் மகன் முதலாம் ராஜேந்​திர சோழன் தந்​தை​யின் சொல்​லைச் செம்​பில் பொறித்து நிலை​யான ஆவண​மாக்​கி​னார். இந்த ஆவணங்​கள், டச்சு ஆதிக்​கக் கால​மான 18-ம் நூற்​றாண்​டில், ஃப்​ளோரன்​சி​யஸ் கேம்​பர் என்​பவ​ரால் நாகை​யில் இருந்து நெதர்​லாந்​துக்கு கொண்​டு​செல்​லப்​பட்​டு, பல கைமாறி, 1862-ல் லெய்​டன் பல்​கலை. அருங்​காட்​சி​யகத்தை அடைந்​தன.

வரலாற்​றுக்கு முழு மரி​யாதை: தற்​போது செப்​பேடு​கள் இந்​தியா திரும்​பியது பெரு​மகிழ்ச்​சி. பண்​பாட்​டுச் செல்​வங்​களைத் தாய்​நாடு​களுக்​குத் திருப்​பும் உலகளா​விய அறமுயற்​சி​யின் ஒரு பகு​தியே இந்த மீளளிப்​பு. அதே​நேரம், இந்​தச் செப்​பேடு​கள் அவற்​றின் வரலாற்​றுத் தாயக​மான நாகைக்கே திரும்ப வேண்​டும்.

ராஜ​ராஜன் வாழ்ந்த வரலாறு, ராஜேந்​திரன் ஆவணப்​படுத்​திய வரலாறு, மாற​விஜயோத்​துங்க வர்​மன் எழுப்​பிய விகாரம், சோழர் கடல் வணி​கம் - இவை அனைத்​தும் நேரடி​யாக நாகையோடு பிணைந்​தவை. ஆவணத்தை அதன் சொந்த மண்​ணுக்​குத் திருப்​புவ​தே, வரலாற்​றுக்​குச் செலுத்​தப்​படும் முழு​மை​யான மரி​யாதை.

மற்​றொரு பணி​யாக, நாகப்​பட்​டினத்​தில் சோழர் வரலாற்​றை​யும், கடல்​சார் மரபை​யும், பவுத்த - சைவ நல்​லிணக்​கத்​தை​யும், தமி​ழரின் பன்​னாட்​டுத் தொடர்​பு​களை​யும் எடுத்​துரைக்​கும் ஒரு நவீன அருங்​காட்​சி​யகம் எழ வேண்​டும். மத்​திய, மாநில அரசுகள் இணைந்​து, பொது​மக்​களும் மாண​வர்​களும் ஆய்​வாளர்​களும் நேரில் கண்டு வியக்​கும் வகை​யில், இந்த செப்​பேடு​களை நாகை​யில் நிலை​யாகக் காட்​சிப்​படுத்த வேண்​டும். ஆயிரம் ஆண்​டு​களைக் கடந்​து​வந்த இந்த சின்​னங்​கள், இனிவ​ரும் ஆயிரம் ஆண்​டு​களுக்​கும் தாய்​மண்​ணில் பாது​காக்​கப்பட வேண்​டும்.

- பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர், நாகை சட்டப்பேரவை உறுப்பினர்.

ஆனைமங்கலம் செப்பேடுகள் நாகைக்கே திரும்பட்டும்!
பிரிக்ஸ் மாநாட்டில் கூட்டுப் பிரகடனம்: பஹல்காம் தாக்குதல், போர், அதிக வரி விதிப்புக்குக் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in