

டெல்லி பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. முதல்நாள் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். படம்: பிடிஐ
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல், போர், வரி விதிப்புக்குக் கண்டனம் தெரிவித்து, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
டெல்லி பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டுக்குப் பிரதமர் மோடி தலைமை வகித்தார். பிற்பகல் 2.35 மணிக்கு மூடிய அறையில் பிரிக்ஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கான விரிவான கொள்கைகளை வரையறுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, விண்வெளி, உயிரி தொழில்நுட்பத்தின் பலன்கள், வளரும் நாடுகளுக்குக் கிடைக்க வேண்டும்.
சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும். எண்ணெய் கப்பல், சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடாது. குளோபல் சவுத் நாடுகள் விதிகளைப் பின்பற்றும் நாடுகளாக இருக்கக் கூடாது. அந்த விதிகளை நாமே உருவாக்க வேண்டும். இரு நாட்டு எல்லையில் அமைதி நிலவுவது அவசியம். அப்போது இருதரப்பு உறவு வலுப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பிரதமரைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் பேசினர். பின்னர் பிரிக்ஸ் மாநாட்டில் உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன், ‘‘பிரிக்ஸ் புதுடெல்லி கூட்டு பிரகடனம்’’ நிறைவேற்றப்பட்டது. அந்த 45 பக்க பிரகடனத்தில் கூறியிருப்பதாவது: ‘மீள் திறன், புத்தாக்கம், நிலையான வளர்ச்சியை உருவாக்குதல்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே அரசியல்- பாதுகாப்பு, பொருளாதாரம்-நிதிச் சேவை, கலாச்சாரம் - மக்கள் தொடர்பு ஆகிய 3 தூண்களை வலுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
மேற்கு ஆசிய போர் (அமெரிக்கா, ஈரான்) மிகுந்த கவலை அளிக்கிறது. இந்தப் போருக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். முதல்கட்டமாக சம்பந்தப்பட்ட நாடுகள் பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஆக்கப்பூர்வமான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.
நீண்ட காலமாக நீடிக்கும் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்குச் சுமுக தீர்வு காணப்பட வேண்டும். கிழக்கு ஜெருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டு பாலஸ்தீனம் நாட்டை உருவாக்க வேண்டும். லெபனான், சிரியா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் ஆண்டு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தீவிரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்போர், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும்.
அணு சக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டும். பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் பெரிய அளவில் பங்காற்றுவதை சீனா ஆதரிக்கிறது. சர்வதேச வர்த்தகத்தில் பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன. நியாயமற்ற வரிவிதிப்பு நடைமுறைகளைக் கைவிட வேண்டும். அனைத்து நாடுகளும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். சர்வதேச வர்த்தகம், உலக விநியோகச் சங்கிலிக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த நாடும் செயல்படக் கூடாது. குளோபல் சவுத் நாடுகளின் பொருளாதார நலன்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறு கூட்டுப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் வெற்றி: பிரிக்ஸ் கூட்டமைப்பில் எதிரெதிர் துருவங்களாகச் செயல்படும் பல்வேறு நாடுகள் உள்ளன.குறிப்பாக மேற்காசிய போரில் ஈரானுக்கும் சவுதிக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. மேலும் ரஷ்யா, உக்ரைன் இடையே நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடிக்கிறது. இவற்றை கருத்தில் கொண்டு எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று கூட்டு பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்க அரசு அதிக வரிகளை விதித்து வருகிறது. இதை மறைமுகமாகக் குறிப்பிட்டு உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு நியாயமான வரிவிதிப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூட்டுப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டது இந்தியாவின் வெற்றியாகக் கருதப்படுகிறது.
மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாகப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். அப்போது பிரதமர் மோடி கூறும்போது, “டெல்லி பிரிக்ஸ் மாநாடு குறித்து சீன தரப்பில் நேர்மறையான கருத்துகள் வெளியிடப்பட்டன. இதற்காகச் சீன அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்புக்குச் சீனா தலைமையேற்கிறது. இதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும். இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும்போது, “பிரிக்ஸ் கூட்டமைப்பின் வளர்ச்சிக்காகச் சீனாவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் தங்களின் வளர்ச்சிப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேண சீனா விரும்புகிறது’’ என்று தெரிவித்தார்.