Last Updated : 09 Oct, 2017 09:03 AM

 

Published : 09 Oct 2017 09:03 AM
Last Updated : 09 Oct 2017 09:03 AM

என்றென்றும் நாயகன் சே குவாரா - இறுதித் தருணங்கள்

நவம்பர் 1966. உருகுவே நாட்டைச் சேர்ந்த வணிகரான அடோல்போ மேனா கான்சாலெஸ் பொலிவியாவிலுள்ள லா பாஸ் என்னுமிடத்துக்குச் செல்கிறார். பனிசூழ்ந்த இல்லுமானி மலையை ரசித்துக்கொண்டிருக்கும் வகையில் அதன் எதிரே அமைந்துள்ள ஒரு விடுதியில் தங்குகிறார். கண்ணாடியில் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்கிறார், சற்று பருத்த உடம்பு, வழுக்கைத் தலை, வாயில் புகைந்துகொண்டிருக்கும் சுருட்டுடன். உண்மையில் அவர், அர்ஜன்டைனாவில் பிறந்த புரட்சிக்காரரான, கியூபாவில் அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்ற கலகத்தை ஒடுக்கிய, ஐநா சபையிலிருந்து அமெரிக்காவுக்குத் தன் செய்தியை விடுத்த, மார்க்சியக் கோட்பாடுகளைப் பற்றியும் கொரில்லா போர்முறையைப் பற்றியும் எழுதிய, உலகெங்கிலும் சோசலிசத்தைப் பரப்ப விரும்பிய சே குவாரா.

11 மாதங்கள் கழித்து, அவருடைய மற்றொரு உருவம் கொண்ட புகைப்படம் உலகெங்கும் பார்க்கப்படுகிறது. ஒரு படுக்கையில், உயிரற்ற அவரது உடல், தலை முடி கலைந்த நிலையில், கண்கள் முழுமையாகத் திறந்த நிலையில். அமெரிக்க உளவுத் துறை அவரது மரணத்தை அறிவிக்கிறது. அழுக்காகவும், ரத்தமாகவும் இருந்த அவரது உடலைச் சுத்தம் செய்ய உதவிய செவிலியரான சுசானா ஒசிநாகா கூறுகிறார் : “அவர்கள், அவரைப் பார்க்க இயேசுவைப் போல இருப்பதாகக் கூறினர்,” “மக்கள் அவரை இன்றும் புனித எர்னெஸ்டோ என்று கருதி வழிபடுகிறார்கள். அவர் இன்றும் அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள்”. அக்டோபர் 9, 2017, அவர் கொலை செய்யப்பட்ட 50-ம் ஆண்டு. இதனை நினைவுகூரும் வகையில் பொலிவிய அதிபரான ஈவோ மொரேல்ஸ், ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான குரலை எழுப்புவது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.

1965-ல் காங்கோவின் தோற்றுப்போன பயணத்திற்குப் பின் பொலிவியாவைத் தன் போராட்டக் களமாகக் கொள்கிறார் சே. 1960-களில் எதையும் சாதிக்கலாம் என்ற சூழல் அமைந்திருந்தது. இருந்தபோதிலும் சே குவாராவும் 47 பேர் கொண்ட அவரது படையும் நான்சாகுவா பகுதிக்கு வந்தபின் அனைத்தும் எதிர்பார்த்ததற்கு மாறாக அமைந்தது. அவர்களுக்கு கியூபாவுடனான ரேடியோ இணைப்பு கிடைக்கவில்லை. தேவைப்படுகின்ற பொருட்களின் வரத்து குறைந்தது. அனைவரும் நோயினாலும், கொடிய பூச்சிகளாலும் பாதிக்கப்பட்டனர்.

சே பொலிவியாவில் இருப்பதை மோப்பம் பிடித்துவிட்டது அமெரிக்கா. அவருடைய படையிலிருந்த வீரர்களில் பாதிக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தம் முயற்சியில் முயன்று தோற்றனர். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட சே, ஒரு கழுதை மீது பயணித்து லா ஹிகேரா என்ற கிராமத்தை அடைந்தார். அப்பகுதியில் இருந்த ஒரு விவசாயி அவர்களுக்கு இந்த செய்தியைத் தெரிவித்துவிட்டார். துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, சே ஒரு பெட்டியில் வைத்திருந்த சிறு துப்பாக்கிகளை ஒரு குண்டு அழித்தது. காயமடைந்த சே, கேரி பிராடோ தலைமையிலான படையிடம் சரணடைந்தார்.

“சுடாதீர்கள், நான்தான் சே. நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு இன்னும் பயனாக இருக்கும்,” என்று சே கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இறுதித் தருணங்கள்: கார்டியன் இதழுக்கு அளித்த பேட்டியில் பிராடோ அப்போது நடந்ததை நினைவுகூர்ந்தார். “அவர் அழுக்காகவும், களைத்துப்போயும் இருந்ததைக் கண்டு நான் பரிதாபப்பட்டேன். அவர் ஒரு நாயகன் என்று உங்களால் எவ்விதத்திலும் நினைத்துப் பார்க்கமுடியாது”.

சே குவேராவையும் அவரது தோழர்களையும் லா ஹிகேராவில் இருந்த ஒரு பள்ளி வீட்டுக்கு அழைத்துச்சென்றுத் தனித்தனி அறைகளில் அடைத்தனர். பிராடோ அப்போது சே குவாராவுடன் பேசியதாகவும், அவருக்காக உணவு, காபி, சுருட்டுகளைக் கொண்டு வந்து தந்ததாகவும் கூறினார். “நாங்கள் அவரை மிகவும் மரியாதையுடன் நடத்தினோம். வீரர்கள் கொல்லப்பட்டபோதிலும்கூட அவர் மீது எங்களுக்குக் கோபமில்லை,” என்றார் அவர். என்னை என்ன செய்யப்போகிறீர்கள் என்று சே கேட்டபோது சாந்தா குருஸ் என்னுமிடத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு அவர் உட்படுத்தப்படுவார் என்று கூறினார் பிராடோ. “அதைக் கேட்ட அவர் நீதிமன்றத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணினார்,” என்றார் பிராடோ. ஆனால் விசாரணை நடைபெறவில்லை. அடுத்த நாளே அவரைத் தீர்த்துக்கட்டும்படி பிராடோவுக்கு ஆணை வந்துவிட்டது.

அந்தப் பொறுப்பை 27 வயதான ராணுவ சார்ஜென்டான மாரி டெரான் தானே முன்வந்து ஏற்றுக்கொண்டார். இயந்திரத் துப்பாக்கியினைக்கொண்டு இரண்டே சூட்டில் சேயின் வாழ்க்கையை அவர் முடித்தார். பின்னர் அவரது உடலை அருகிலிருந்த வாலேகிராண்டே என்னுமிடத்துக்கு ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து உலக ஊடகங்களுக்கு முன்பாக கைகளற்ற அவருடைய உடல் காட்சிப்படுத்தப்பட்டது. அவருடைய தோழர்கள் அடையாளமிடப்படாத கல்லறைகளில் புதைக்கப்பட்டனர். சுமார் 30 வருடங்கள் அவர்களைப் பற்றி எவ்வித விவரமும் அறிவிக்கப்படவில்லை.சே குவாராவின் கொலையில் தனக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்ற பிராடோ, அவ்வாறான செய்கைகள் அக்காலகட்டத்தில் இயல்பாக இருந்தன என்றார். “அவர் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கதே. ஆனால் அப்போது நடந்தனவற்றை நினைத்துப்பார்க்க வேண்டும்… அக்காலகட்டத்தில் அது நியாயப்படுத்தப்பட்டது” என்றார் அவர். சேயின் தோழர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்ட இடத்தில் சுவடுகள் உள்ளன. சே அடைக்கலம் புகுந்த பாறாங்கல்லில் இப்போது ஓவியங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளன.

சே உயிர் துறந்த கிராமம்: அக்காலத்தில் சேவுக்கு விரோதமான உணர்வு லா ஹிகேரா கிராமத்தில் பரவியிருந்த போதிலும்கூட, அவர் 50 வருடங்களுக்கு முன்பாக அந்தக் கிராமத்தில் கொல்லப்பட்டதால், அங்குள்ளவர் களுக்குப் புதிய வாழ்க்கைக் கிடைத்தது. அரை டஜன் உணவு விடுதிகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டன. “சே மட்டும் இங்கு வந்திருக்காவிட்டால், எங்களுக்கு வேலை கிடைத்திருக்காது,” என்கிறார் சே கொலை செய்யப்பட்ட பள்ளி வீட்டின் பொறுப்பாளர்களில் ஒருவர். அந்த இடம் தற்போது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

உள்ளே எங்கு பார்த்தாலும் உலகம் முழுவதிலுமிருந்து அங்கு வரும் யாத்ரீகர்கள் எழுதி வைத்துள்ள அஞ்சலிகள் காணப்படுகின்றன. சேயின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்துக்கும், அவரும் அவருடைய தோழர்களும் புதைக்கப்பட்ட இடங்களுக்கும் யாத்ரீகர்களை அழைத்துச் சென்று வருகின்றனர். லா ஹிகேரா மற்றும் வால்லேகிராண்டேக்கு 9 அக்டோபர் 2017 அன்று 10,000-க்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிடுவார்கள் என்றும் அவர்களில் சமூக ஆர்வலர்கள், உள்ளூர்த் தலைவர்கள், கியூப அலுவலர்கள், சே குவேராவின் குழந்தைகள் உள்ளிட்டோர் அடங்குவர் என்றும் கூறப்படுகிறது. பயன்படுத்தப்படாத விமான ஓடுதளம் சீரமைக்கப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட சே குவாரா பண்பாட்டு மையம் புதுப்பொலிவு பெறுகிறது. கியூப மருத்துவர்களும், செவிலியர்களும் சே தொடர்பான நினைவுச்சின்னங்களில் புதிதாக வண்ணம் பூசிக்கொண்டிருக்கின்றனர். ஊரே விழாக்கோலம் பெறுகிறது.

சேயின் உடல் பகுதியைக் கண்டுபிடிக்க உதவிய குழுவில் ஒருவரான, உள்ளூர் வழிகாட்டியான கோன்சாலோ கஸ்மேன் கூறுகிறார். “அப்போது எனக்கு சே யாரென்று தெரியாது. கியூபாவின் விசாரணைக் குழுவினர் எங்களிடம் கூறினர், ‘இப்போது நீங்களும் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டீர்கள் என்று,’ அவர் தொடர்கிறார். “எங்களைப் பொறுத்தவரை அவர் ஒரு நாயகன்தான்”!

© தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: பா.ஜம்புலிங்கம் | அக் 9: சே குவாரா 50-ம் ஆண்டு நினைவு தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x