Last Updated : 20 May, 2023 06:51 PM

1  

Published : 20 May 2023 06:51 PM
Last Updated : 20 May 2023 06:51 PM

இன்ஃப்ளூயன்சர் 3 | நீங்கள் ரட்சகர் இல்லை... - ஸூமர்ஸ் தலைமுறையும், டிக் டாக் ஹவுஸும்!

திருவள்ளூர் பெரிய குப்பத்தை சேர்ந்த ’ரீல்ஸ் குயின்’ என்று அழைக்கப்பட்ட சிறுமி (வயது 9) பெற்றோர் படிக்கச் சொல்லி கண்டித்ததால் தூக்கிட்டு உயிரிழந்தார்.

9 வயது சிறுமி எப்படி தன் உயிரை மாய்த்துக் கொள்வார் என்ற விவாதம் அன்று ஒருநாள் ஓடியது. உண்மையில் இந்த துயர் செய்தி உளவியல் பார்வையில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்கொலை செய்யும் மனநிலைக்கு அந்த சிறுமியை தூண்டியது எது? சமூக வலைதளங்கள் அந்த சிறுமியின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? என்ற கேள்விகள் பரவலாக ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், செய்தி சேனல்கள் மாற்று வழியை தேர்ந்தெடுத்தன. தற்கொலைச் செய்திகளை வழங்கும் விதிமுறைகளை மீறி சிறுமியின் ரீல்ஸ் வீடியோக்கலை ’இறந்த இன்ஸ்டா ரீல்ஸ் பறவை’ என்று கேலி தன்மையுடன் பதிவிட்டு கடந்தன.

இந்நிகழ்வு நடந்த சில தினங்களில், அமெரிக்காவில் ஒரு சம்பவம் அரங்கேறுகிறது. நண்பர்களுடான ’டிக் டாக்’ சவால் ஒன்றில் பெனாட்ரில் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட சிறுவன் இறந்து போகிறான். இந்த சம்பவம் இளம் தலைமுறையின் டிக் டாக் பயன்பாடு குறித்த விவாதத்தை அங்கு ஏற்படுத்தியது.

பதின் பருவத்தை கூட எட்டாத இந்தக் குழந்தைகளின் மரணங்கள்... இன்ஃப்ளூயன்சர்கள் உலகம் எப்படி இயங்குகின்றது என்ற தேடலை நோக்கி என்னை நகர்த்தியது. குறிப்பாக ஸூமர்ஸ் (zoomers ) தலைமுறையை நோக்கி.

உலகளவில் ஸ்மார்ட் போன்களின் தாக்கம் தீவிரமாக இருந்த காலக்கட்டம். யதார்த்தங்கள் மாற தொடங்கின..சமூக ஊடகங்களில் பேசப்படுவவைதான் நிஜ வாழ்கையிலும் எதிரொலிக்க தொடங்கின.

அத்தகைய காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் ஸூமர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது, 1996-2012-களில் பிறந்தவர்கள்.

இயல்புக்கு மாறாய்.. - சமூக வலைதளங்களின் ஆதிக்கத்துக்குப் பிறகு இங்கு இயல்பாக இருந்தல் என்பது அந்நியமாகவும், தோல்வியடைந்தாகவும் பார்க்கும் நிலையை உருவாக்கியது. அவ்வாறான நிலையில் இயல்பாய் இருந்தலுக்கு மாறாக எதிர் திசையில் பயணிக்கப்பட்டவர்கள் வெற்றியாளர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். இந்த சூழல்கள் இந்த தலைமுறையில் வெற்றிக்கான நெருக்கடியை சற்று கூடுதலாக ஏற்படுத்தும். அதுதான் ஸூமர்ஸ் உலகிலும் நடந்து கொண்டிருக்கிறது.

ஸூமர்கள் சற்று கூடுதலான சுதந்திர மன நிலையை கொண்டிருக்கின்றனர். இந்த சுதந்திர மனநிலைதான் முந்தையை தலைமுறைகளுக்கும் இவர்களுக்கு இடையேயான இடைவெளியை தீர்மானிக்கிறது.

குறுகிய காலத்தில் புகழை அடைந்திட அனைத்து வாய்ப்புகளை சமூக வலைதளங்கள் உருவாக்கி கொடுத்திருக்கின்றன. அதே நேரத்தில் இங்கு வழிகாட்டல்களும் முக்கியம். விளம்பர நிறுவனங்களின் பலத்துடன் இயங்கும் இன்ப்ளுயன்சர்கள் இதில் தாக்கு பிடிக்க முடிகிறது. அதுவே பின்னணி இல்லாதவர்கள் அழுத்தத்தில் தவறான முடிவைகளை எடுத்துவிடவும் வாய்ப்புகள் உள்ளன.

டிக் டாக் ஹவுஸ்.. - யூ டியூபர் என்றால் ஒரு காலத்தில் வெட்டி வேலை என்ற விமர்சிக்கப்பட்ட நிலை மாறி தற்போது சமூகத்தில் அந்தஸ்து மிக்க வேலையாக மாறிவிட்டது. டாக்டர், ஆசிரியர், வழக்கறிஞர் வரிசையில் யூடியூபரும் வந்துவிட்டனர். டிக் டாக் ஹவுஸ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறார்களா? கல்லூரி செல்லாமல் பள்ளிப் படிப்பு முடித்த கையுடன் டிக்டாக்கிற்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க இளைஞர்கள் நாளும் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள்.

புரிதலுக்காக இந்த அறிமுகத்தை இங்கு அளிக்கிறேன்: அமெரிக்காவில் உள்ள ஏஜென்சி / நிறுவனங்கள் பொழுதுபோக்குத் திறனின் அடிப்படையில் இளைஞர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்களுக்கு எந்த திறனை முன்னிறுத்தி தங்களுக்கென்ற கூட்டத்தை உருவாக்க போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள சில காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இளைஞர் கூட்டம் ஒரு குடும்பத்தைபோல் ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுகிறது. நாளடைவில் இந்த இளைஞர் / இளைஞிகளுக்கு என்று ரசிகர் கூட்டம் மெல்ல மெல்ல உருவாகிறது.

மறுபக்கம் டிக் டாக் ஹவுஸில் இருப்பவர்களை சமூக வலைதளங்களில் பிரபலமடையச் செய்வது இந்த நிறுவனத்தின் பொறுப்பாகிறது. அதற்கு முதலீடாக ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனங்கள் செலவிடுகின்றன. முடிவில் டிக் டாக் ஹவுஸில் இருப்பவர்களின் முகம் பிரபலமடைகிறது. பிறகு பிராண்ட்டுகள் மூலம் வருமானம் கிடைக்க துவங்குகிறது. இதில் பெரும் தொகை அந்த இளைஞர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.

இவை எல்லாம் இங்கு பிரச்சனைகள் இல்லை. உலகளவில் பொழுதுபோக்குத் துறை இப்படிதான் இயங்குகிறது என்று எடுத்துக் கொள்வோம். அந்த டிக் டாக் ஹவுஸ் இயங்கும் முறைகள்தான் நெருடல்களை ஏற்படுத்துகிறது.

மேற்குறிப்பிட்ட டிக் டாக் ஹவுஸ்... பிக்பாஸ் வீடு போல் இயங்குகிறது. ஓரே வீட்டில் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் சிறிய வேறுபாடு உள்ளது. பிக்பாஸ் வீட்டில் நீங்கள் வெளியே செல்ல முடியாது. பிக்பாஸின் கட்டளை படிதான் செயல்பட வேண்டும். டிக் டாக் ஹவுஸில் நீங்கள் வெளியே செல்லாமல் ஏஜென்சி உங்களுக்கு கட்டளையிடுகிறது.

பிக் பாஸ் ஹவுஸில் 10 பேர் தங்கு இருக்கிறார்கள் என்றால் இதில் 1 அல்லது 2 கன்டென்ட் க்ரியேட்டர்ஸ் இருக்கிறார்கள். இதில் சிலர் தங்களது 24 மணி நேர வாழ்க்கையும் ரீல்ஸாக பதிவிடுகிறார்கள். சிலர் ஆதர்ச காதலர்களாக உலகிற்கு தங்களை அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். சிலர் நடனமாடுகிறார்கள் , சிலர் கோரமான ஒப்பனைகளை செய்து கொள்கிறார்கள், சிலர் சைக்கோ கோட்பாடுகளையும் முன்வைக்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும் கட்டளை என்பது அவர்களின் வீடியோ எவ்வாறாகினும் வைரலாகிவிட வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு எந்த எல்லையும் அவர்கள் கடக்கிறார்கள். இந்தப் பயணத்தில் உழைப்புச் சுரண்டல்களும் அரங்கேறுகின்றன. ஆனால், அவை புகழின் வெளிச்சத்தில் இயல்பான ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது..

அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு இன்ஃப்ளூயன்சர் - கார்ப்ரேட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டால் அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற சட்ட வரையறை 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் இம்மாதிரியான சட்டங்கள் இல்லை.

நீங்கள் துவைக்கும் சோப்பு முதல் உங்கள் அரசியல் நிலைப்பாடு வரை மூளைச் சலவை செய்யும் கூட்டம் இங்கு லட்சக்கணக்கில் உருவாகிவிட்டன. இவர்களை கட்டுப்படுத்த எந்த நெறிமுறைகளும் இங்கு இல்லை.

ரட்சகர் மனநிலை: தனது சுய அடையாளம் குறித்து இந்த தலைமுறையில் இருக்கும் புரிதல் குறைபாடானது அறம், நியதி வரைமுறைகளை மீற வழிவகுக்கிறது.

உதாரணத்துக்கு, பிரபல இன்ப்ளுயன்சர் ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கற்பனை நிகழ்வாக, ஓரு ரீல்ஸ் வீடியோவை பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த ஒருவர், அந்த இன்ப்ளுயன்சரை போனில் அழைக்கிறார். நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்.. என்று அவர் கூறியதும் அந்த நபர் தற்கொலை செய்துகொண்டால், கடைசி தொலைபேசி அழைப்பாக தனது எண் இருந்துவிடுமோ என்று இன்ப்ளுயன்சர் அச்சம் கொள்கிறார். இதனை தவிர்ப்பதற்காக நகைசுவையான தொனியில் அவர் பேசுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த வீடியோவை கண்ட லட்சக்கணக்கானவர்களில் சிலரே அந்த வீடியோவில் இருந்த தவறை சுட்டிக் காட்டி இருந்தார்கள். பெரும்பாலானவர்களின் பதிவுகள் ஸ்மைலிகளாகவே இருந்தன.

மேற்கூறிய நிகழ்விலிருந்து பார்க்கும்போது இந்த தலைமுறை நையலிசம் ( Nihilism ) என்ற கோட்பாட்டை தங்களை அறியாமலே ஏற்று கொண்டிருக்கிறதா என என்ண தோன்றுகிறது.

முதலில் நையிலிசத்தை தெரிந்து கொள்வோம். தத்துவவியல் கோட்பாடுகளில் நயிஹிலிசம் கோட்பாடு மிகப் பிரபலமானது. இந்த உலகில் நன்மை.. தீமை என்று எதுவும் இல்லை.. வாழ்கை அர்த்தமற்றது.. நன்றியுணர்வோ, விசுவாசமோ எதுவும் தேவையில்லை என்ற இல்லாமை கோட்பாட்டை முன் வைக்கிறது.

வரலாற்றில் நையலிசத்திற்கு இரண்டு முகங்கள் உண்டு. நயிஹிலிசத்தின் ஆக்கப்பூர்வமான கருத்தாக்கங்களை தேர்ந்தெடுத்தால் வெளிச்சமான பாதை உங்களுக்கு கிடைக்கலாம்.. மாறாய் நயிஹிலிசத்தின் மறுபக்கத்தை தேர்ந்தெடுத்தால் ஹிட்லரின் பாதையும் அமையலாம்.

உங்களுக்கான இன்ஃப்ளூயன்சரை அடையாளம் காணும் தேடலில் நீங்களும் வெளிப்படுகிறீர்கள். உங்கள் தேர்வுகளுக்கு இன்ப்ளுயன்சரை முழுமையாக சார்ந்திருத்தல் என்பதே ஒருவித அடிமை மனநிலைதான். சுய தேர்வுகளும், தேடுதல்களும் இல்லா சமூகத்திற்கு ஒட்டுண்ணிகள் வரலாறே மிஞ்சும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உண்மையில் இங்கு யாரும் ரட்சகர் இல்லை என்ற மனநிலையிலிருந்து இன்ப்ளுயன்சர்களை அணுகுங்கள்..

“ தனிமனித பித்து நிலை என்பது மிக அரிதானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவே குழுவாக இயங்கும்போது அது இயல்பான விதியாகிறது...” என்கிறார் நைஹிலிசத்தை வழிமொழிந்த ஜெர்மனியின் தத்துவியலாளர் பிரட்ரிக் நீட்சே.

நீட்சே கூறும் இந்த குழு மனப்பான்மையை அடுத்த அத்தியாங்களில் பார்க்கலாம்.

| தொடர்ந்து பயணிப்போம்... |

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

முந்தைய அந்தியாயங்கள்:

இன்ஃப்ளூயன்சர் 1 | அந்தப் பெண் யூடியூபர் எங்கே? - நம் முன் விரிக்கப்படும் மாய வலை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x