Last Updated : 09 Oct, 2016 12:26 PM

 

Published : 09 Oct 2016 12:26 PM
Last Updated : 09 Oct 2016 12:26 PM

குட்டையைக் குழப்ப வேறு விஷயமே இல்லையா?

நாட்டின் பாதுகாப்பா ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான விளையாட்டுப் பொருள் ஆக வேண்டும்?

உரி தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்ட ராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்கும் உத்தி பலன் அளிக்கக் கூடியதா, இல்லையா; இந்தியா இதைச் செய்யலாமா, கூடாதா என்பதில் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். அப்படியான பலதரப்பட்ட கருத்துகளே வலுவான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். ஆனால், உரி தாக்குதலையொட்டி, ராணுவத்தை முன்வைத்து ஆளும்கட்சியும் எதிர்க்கட்சிகளும் நம் நாட்டில் நடத்திவரும் விவாதங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. நம்முடைய தலைவர்கள் மைக்கைக் கண்டால் மனம்போனபடி பேட்டி கொடுப்பதும், கருத்துச் சொல்வதும், மாற்றாரைக் கேள்வி கேட்பதும் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் உரி ராணுவ முகாம் மீது செப்டம்பர் 18 ஞாயிறு அதிகாலை லஷ்கர்-இ-தொய்பா பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கான பதிலடிகளில் ஒன்றாக செப்டம்பர் 29-ம் நாள் இரவு, பயங்கரவாதிகள் பயிற்சி பெறும் முகாம் என்று அடையாளம் காணப்பட்ட இடத்தின் மீது இந்திய ராணுவ அதிரடிப்படை திடீர் தாக்குதல் நடத்தியது. 20 முதல் 25 பேரைக் கொண்ட 6 முதல் 7 தளங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. இந்திய ராணுவத் தரப்பில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லாமல் படை திரும்பியது என்று அடுத்த நாள் தெரிவிக்கப்பட்டது. இதை பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. அதேவேளையில், ‘எதிர் விளைவுகளுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும்’ என்று பாகிஸ்தான் ராணுவத் தரப்பிலிருந்து பதிலாக வெளிவந்தது. அப்படியானால், தாக்குதல் நடந்திருக்கிறது என்ற ஒப்புதலாக அதைக் கருத வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து, தாக்குதல் ஏன் என்ற காரணத்தை விளக்கினார். இந்திய ராணுவத்தின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் (டி.ஜி.எம்.ஓ.), பாகிஸ்தானில் இதே பதவியை வகிக்கும் சகாவை அழைத்து, தன்னுடைய நாட்டின் பதில் தாக்குதல் குறித்து தகவல் தந்ததுடன், இனி இப்படி எல்லை கடந்து சாகசம் செய்யும் பயங்கரவாதிகளுக்குத் துணையாக இருக்காதீர்கள் என்று எச்சரிக்கையும் விடுத்தார். இந்தத் தாக்குதலுக்காகப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் பிரதமர் மோடியைப் பாராட்டினார்கள். ராகுல் காந்தியும் அர்விந்த் கேஜ்ரிவாலும் இன்னபிற எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராட்டினார்கள். சர்வதேசத் தளத்திலும் தனக்கு ஆதரவான சூழலை இந்தியா உருவாக்கியது. இதுவரை யாவும் சுபம்.

இதற்குப் பிறகுதான் கோளாறு தொடங்கியது. பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், ‘அறுவை சிகிச்சையைப் போன்ற துல்லியமான தாக்குதல் நடந்து இரண்டு நாட்களாகின்றன; பாகிஸ்தானிடமிருந்து பேச்சோ, மூச்சோ காணவில்லை’ என்று கூறிப் புளகாங்கிதம் அடைந்தார். அத்துடன் அவருடைய கட்சிக்காரர்கள் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்ததும்தான் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம்’ என்று மார் தட்டினார்கள். இதை அப்படியே வார்த்தைகளில் வடித்து, ராணுவத்துக்குப் புகழ் அஞ்சலியைச் செலுத்துவதைப் போல உத்தரப் பிரதேசத்தில் டிஜிடல் பேனர்களாக வைத்தார்கள். தொடர்ந்து நாடு முழுக்க பாஜகவினர் இதைத் தங்கள் கட்சியின் சாதனைபோலப் பிரகடனப்படுத்த ஆரம்பித்தார்கள்.

இவ்வளவு நடந்த பிறகு, எதிர்க்கட்சிக்காரர்கள் சும்மா இருப்பார்களா? மும்பை காங்கிரஸ் தலைவரான சஞ்சய் நிருபம், ‘இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலே போலிதான்’ என்று ஒரு போடு போட்டார். ‘இந்தத் தாக்குதல் உண்மை என்றால், அது தொடர்பாக ராணுவம் எடுத்த விடியோ காட்சிகளை மக்கள் அறிய ஒளிபரப்ப வேண்டும்’ என்று அடுத்து கோரிக்கை விடுத்தார் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால். ‘எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தினால், இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் வழக்கம் தான்; அதையெல்லாம் நாங்கள் வெளியே சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள மாட்டோம். அது ராணுவ விவகாரம் என்று விட்டுவிடுவோம். இப்போது நடந்தது தங்களால்தான் என்று மோடி அரசு உரிமை பாராட்டுவதால், அந்த விடியோ எங்கே என்று மக்கள் கேட்பார்கள்’என்று சொன்னார் ப.சிதம்பரம்.

விளைவு என்னவாயிற்று? பாகிஸ்தான் ஏற்படுத்தாத களங்கத்தை உள்ளூரில் ராணுவம் எதிர்கொள்ளும் சூழல் உருவாயிற்று. வெறுத்துப்போய் இப்போது முன்னாள் ஜெனரல்கள் வி.பி.மாலிக், ஜே.ஜே.சிங், சங்கர் ராய் சவுத்ரி ஆகியோர் காட்டமாகச் சொல்லியிருக்கிறார்கள், “இந்திய ராணுவம் பதிலடித் தாக்குதலைத் தொடுத்ததா என்று சில முட்டாள்கள் சந்தேகப்படுகிறார்கள் என்பதற்காக விடியோவை வெளியிடக் கூடாது. காரணம், இந்த விடியோவை வெளியிட்டால் இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் உத்தியை பாகிஸ்தான் எளிதில் புரிந்துகொள்ள வழியேற்பட்டுவிடும்.’’

ஆயிரத்தெட்டு விஷயங்கள் இருக்கின்றன, அரசியல் செய்ய. நாட்டின் பாதுகாப்பா ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான விளையாட்டுப் பொருள் ஆக வேண்டும்? எதிர்க்கட்சிகளைக் காட்டிலும் இதுபோன்ற விஷயங்களில் எப்படிக் கவனமாகச் செயல் படுவது என்பதில் ஆளும் பாஜகவுக்குக் கூடுதல் பொறுப்பு உண்டு. எப்போதுமே மீன் பிடிக்கும் வேட்கையோடு அரசியல் குளத்தைக் கலக்கிக்கொண்டே இருப்பது யாருக்குமே நல்லதல்ல!

- வ.ரங்காசாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x