Last Updated : 19 Jun, 2014 10:00 AM

 

Published : 19 Jun 2014 10:00 AM
Last Updated : 19 Jun 2014 10:00 AM

ஜூன் 19, 1945- ஆங் சான் சூச்சி பிறந்த நாள்

தற்போது மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மா வின் தேசத்தந்தையாக மதிக்கப்படுபவர் ஆங் சான். பர்மா கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் அவர். அவரது மகள்தான் பர்மாவின் ஜனநாயகப் போராளியான ஆங் சான் சூச்சி. அவர் பிறந்து இன்றுடன் 69 ஆண்டுகளாகின்றன.

ஆங் சான் சூச்சியின் தந்தையும் அவரது 30 தோழர்களும் இணைந்து ஆங்கிலேய அரசுக்கு எதிராக நடத்திய ஆயுதப் போராட்டம்தான் பர்மாவின் விடுதலைப் போராட்டம்.

அந்தப் போராட்டத்தின் நிறைவாக 1947-ல் ஆங்சான் 32 வயதில் பர்மாவின் முதல் பிரதமர் ஆனார். சில மாதங்களிலேயே அவரும் அவரது அமைச்சர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

சிறிது கால ஜனநாயகத்துக்குப் பிறகு, பர்மா வின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் ஆங்சானுடன் பங்கெடுத்த நீவின் என்பவர் ராணுவ சர்வாதிகாரியாக மாறி, பர்மாவின் ராணுவ ஆட்சி வரலாற்றை 1962-ல் தொடங்கி வைத்தார். அது முதல் பர்மாவை ராணுவ சர்வாதிகாரிகள்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தந்தை கொல்லப்பட்டபோது இரண்டு வயதுக் குழந்தையாக இருந்த ஆங் சான் சூச்சி, வளர்ந்து பெரியவரானதும் ராணுவத்துக்கு எதிராகத் தனது ஜனநாயகப் போராட்டத்தை ஆரம்பித்தார். இதையடுத்து, 1989 முதல் 2010 அவரைப் பல கட்டங் களாக வீட்டுச் சிறையில் அடைத்தது ராணுவம். பல ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர், 2010-ம் ஆண்டில் அவர் விடுவிக்கப்பட்டார். ஜனநாயகத் துக்கான தேசியக் கழகம் எனும் அவரது கட்சி, 1990-ல் நடந்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றும் அவரை ராணுவம் பதவியேற்க விடவில்லை.

காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் சூச்சி. 1991-ல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

1993-ல் புரிந்துணர்வுக்கான ஜவாஹர்லால் விருதை இந்தியா அவருக்கு வழங்கியது. ஜன நாயகத்தை மீட்க பர்மாவில் தொடர்ந்து அவரது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x