Last Updated : 24 May, 2016 09:32 AM

 

Published : 24 May 2016 09:32 AM
Last Updated : 24 May 2016 09:32 AM

தேர்தலோடு அரசியல் தீர்ந்துபோகாது!

அரசியலுக்கே தொடர்பில்லாமல் ஒரு சித்தாந்த சூனியத்தில் நடந்த தேர்தல் எது என்றால், அது தமிழகத் தேர்தலாகத்தான் இருக்கும். வழக்கமான சிந்தனையில் வேண்டுமானால். இதை அரசியலோடு தொடர்புபடுத்திப் பேசலாம். அதிக வாக்கு பெற்றவர்களுக்கே ஆட்சிக்கான உரிமை என்பதே அந்த வழக்கமான சிந்தனை.

அரசியலே அதுதானே என்று நீங்கள் கேட்கலாம். அரசியல், ஜனநாயகத்துக்கு முன்பே பிறந்தது. தேர்தலோ ஜனநாயகத்தின் ஓர் அங்கம். ஆனால், அதன் ஒரே அங்கமல்ல. தேர்தலில் வெற்றி பெறாத கட்சிகளும் அரசியலில் செயல்படும். எப்போதுமே தேர்தலில் பங்குகொள்ளாத கட்சிகளும் தீவிர அரசியல் நடத்தும். கட்சியாக இல்லாத அமைப்புகளிலும், கட்சிகளுக்கு வெளியேயும் கட்சிகளைவிட அதிக அரசியல் சுறுசுறுப்பும் இருக்கும்.

சித்தாந்த சூனியம்

கோட்பாடுகளின், கொள்கைகளின், சித்தாந்தங்களின் அடிப்படையிலானதே அரசியல்! நமது கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இருப்பதெல்லாம் அரசு நிர்வாகம் பற்றியவை, நிர்வாக மேம்பாடு பற்றியவை. அன்றாட நிர்வாகமும் அரசியலும் ஒன்றாகாது. 15 நாட்களில் உங்கள் மனுவுக்குப் பதில் வரும் என்றால் அது அரசியலா, அன்றாட நிர்வாகமா? கதவணையும் தடுப்பணையும், ஏரிக்குத் தூர்வாருவதும், விளைபொருட்களுக்கு அடக்க விலையோடு இவ்வளவு சேர்த்துத் தருவோம் என்பதும் அரசியலா? இங்கே தொடங்கி விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை, தனி அமைச்சகம், கடன் ரத்து, லோக் ஆயுக்தா, பொதுகண்காணிப்புக் குழுவரை எல்லாமே நிர்வாக முடிவுகள். எதுவும் அவரவர்களுடைய அரசியல் சித்தாந்தங்களில் விளைந்ததில்லை. சித்தாந்தச் சூனியத்தைத்தான் நமது அரசியல் கட்சிகள் கச்சிதமாகக் கற்றிருக்கிறார்கள்.

மதுவிலக்கு உறுதிமொழி காந்திய சித்தாந்தத்திலிருந்து வந்ததல்ல. மதுப் பழக்கம் ஒரு ஒழுக்கக்கேடு என்ற தார்மிக வரையறையாலும் வந்த முடிவல்ல. மதுவிலக்கால் கொஞ்சம் வாக்குகள் கிடைக்கும் என்ற கணிப்பால் வந்தது.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்று பேசிய கட்சிகள், அதற்கான சித்தாந்த நியாயத்தைக் கூறவில்லை. தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் இரு கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கிறார்கள் என்பது சரியான கணிப்பு அல்ல. மாற்றி மாற்றித் தண்டிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசியல் நிலைப்பாடாகச் சொல்லத்தக்க ஒன்றை அறிக்கைகள் கூறியிருந்தாலும் அதன் முழு வீச்சையும் காட்டுவதற்குக் கட்சிகளுக்குத் தயக்கம். இலவசங்கள் மூலம் ஆட்சியில் இருந்தவர்கள் தொடங்கிய சீரழிவுக் கலாச்சாரத்தைக் குறிப்பிடுகிற அறிக்கைகள் அதனை விரிவாகவே பேசியிருக்கலாம். மாறாக, தேவையற்ற இலவசங்களை அரசின் வருவாய் சேமிப்புக்காக முறைப்படுத்தலாம் என்று சொற்களைச் சோதித்துக் கோத்திருக்கின்றன அறிக்கைகள்.

தேர்தல் அறிக்கைகளும், தேர்தல் உரைகளும் வாக்குறுதிகளுக்காக மட்டுமல்ல. அவரவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை மக்களின் ஏற்புக்காகத் தெரியப்படுத்தும் ஆவணங்கள் அவை. இந்தத் தெளிவு அரசியல் கட்சிகளிடம் அறவே இல்லை என்று சொல்ல முடியாது. வருங்காலத்தில் ஒரு கட்சி ஆட்சி தொலைந்து, கூட்டணி ஆட்சிதான் வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணி அறிக்கை வெளிப்படையான அரசியல் நிலையை எடுத்துள்ளது. திராவிட ஆட்சி வேண்டும் என்று எப்போதும் தனது உரையைத் தொடங்கும் திமுக தலைவர் கருணாநிதி, திராவிட ஆட்சிக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு முடிப்பார். தனது சித்தாந்தம் என்ன என்பதை அவர் தேர்தல் நேரத்தில் அழுத்தமாகப் பேசுவார். ஆனால், அதே மேடையில் பேசும் கட்சிக்காரர்களில் பலர் அதைத் தொட்டோ, தொடுத்தோ பேசி நான் கேட்டதில்லை. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை வேண்டும் என கருணாநிதி பேசியது உண்டு. இப்போதும் அதை அவர் பேசியிருக்கலாம். ஆசிய நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமாக இந்திய - இலங்கை உறவு செயல்படும் என்று காங்கிரஸ் அறிக்கை கூறுவதும் ஒரு அரசியல் நிலைப்பாடுதான்.

அரசியல் வாய்ப்பு

இந்திய விடுதலைப் போராட்ட காலத்து அரசியல்வாதிகளின் முதல்கட்ட வேலையே அரசியல் தெரியாத மக்களுக்கு அரசியலை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. எதிராளியை எதிராளியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். தன் தரப்பு யார் என்பது புரிய வேண்டும். அத்தகைய சித்தாந்தப் புரிதலோடு அணிதிரள மக்களுக்கு அவர்கள் கற்பித்தார்கள். இதற்கு 1920 முதலான ஒவ்வொரு தேர்தலும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. நாட்டின் விடுதலை பெரும் சாதனைதான். ஆனால், மக்களை அரசியலுக்குத் தயார்செய்தது அதைவிடப் பெரிய சாதனை. தேர்தலில் பெறும் வெற்றி அதிகாரத்தைத் தரும் என்பது உண்மையே. ஆனால், தேர்தல் என்பது அரசியலுக்கான வாய்ப்பு. கட்சிகள் அதிகாரத்தைவிட அந்த வாய்ப்பையே பெரிதாகக் கருத வேண்டும்.

தேர்தல் அறிக்கைகளைப் பார்த்தால் கட்சிகள் அப்படிக் கருதியதாகத் தெரியவில்லை. அரசியலைத் தொடாமல் அன்றாட நிர்வாகத்தோடு நின்றுவிடுகின்றன. இந்த வேலைக்கு அதிகாரிகளே போதும். அரசியல்வாதிகள் தங்களை அதிகாரிகளாகவே கருதிக்கொள்வதற்கும், அவ்வாறே இருப்பதற்கும் பெருமைப்படுவதாகத் தோன்றுகிறது. இப்படிச் செய்வது உண்மையில் ஒரு தாழ்ச்சியல்லவா? நிர்வாகத்தோடு நிறுத்திக்கொள்பவர்கள் அதைச் சரியாகவாவது செய்ய வேண்டும். மக்களைத் தேடி பிரதிநிதிகள் செல்ல வேண்டியதில்லை. மக்கள் முதலமைச்சருக்கு எழுத வேண்டியதில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும், கட்சிக்காரர்களும் மக்களை நாட்டின் குடிமக்களாகக் கருதினாலே போதும். ஆட்சியில், குடிமக்கள் பயனாளிகள் மட்டுமல்ல, பங்காளிகளும் அவர்கள்தான் என்று கருதக் கற்றுக்கொண்டாலே போதும். இப்படி ஒரு அரசியல் கோட்பாடோ, சித்தாந்தப் பிடிப்போ இல்லாத இடத்தில் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் வார்த்தைகளாகத்தான் இருக்கும். அவை இருக்கும் இடத்தில் சொல்லாமலேயே நல்ல நிர்வாகம் நடக்கும். மனிதர்களைவிட அரசியல் கோட்பாடுகள் நல்ல வழிகாட்டிகள்.

சித்தாந்தத்தின் நிர்வாகம்

இந்த சித்தாந்தப் பற்று இருந்தபோது நிர்வாகம் எப்படி இருந்தது? 1970-களில் பொதுப் பிரச்சினைகளுக்காக ஒரு சாமானியனாக, தனிநபராக மாவட்ட ஆட்சியரை நான் அடிக்கடி போய்ப் பார்ப்பேன். காலையில் நிச்சயமாக அலுவலகத்தில் பார்க்கலாம். பரிவோடு விசாரிப்பார். மனுவைப் படிப்பார். என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பு எழுதி அனுப்புவார்.

‘மாவட்டத்துக்கு அமைச்சர்கள் வந்தால், அவர்களோடு மாவட்ட ஆட்சியர்கள் செல்ல வேண்டியதில்லை. அவர்கள் தங்களின் வழக்கமான அலுவலகப் பணிகளைக் கவனிக்கலாம்’ என்று காமராஜர் காலத்தில் அரசாங்கச் சுற்றறிக்கையே இருந்ததாக தமிழகத்தின் தலைமைச் செயலராக இருந்த கார்த்திகேயன் என்னிடம் சொன்னார். ‘அமைச்சர்கள் வழியாக ஒரு மனு வந்தால் அதை எப்படி பைசல் செய்வது என்று சங்கடமாக இருக்கும். ஆனால், அதுவே அமைச்சர் கக்கனிடமிருந்து வந்தால் சிரமமே இருக்காது. என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக எழுதியிருப்பார்’ என்றும் அவர் சொல்வார்.

முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தையும் நான் சந்தித்துள்ளேன். அவர் ‘‘ஐ.சி.எஸ். படித்த செயலரெல்லாம் என்னிடம் பணியாற்றியிருக்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களைக் கேட்டதில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான்தான் சொல்வேன்’’ என்று அவர் சொல்வார். இதற்கெல்லாம் நிரம்பப் படித்திருக்க வேண்டும் என்பதில்லை. சித்தாந்தப் பிடிப்பும் சுத்தமான மனதும் இருந்தாலே போதும்.

நடந்து முடிந்த தேர்தலில் கட்சிகள் வெளியிட்ட பெரும்பாலான அறிக்கைகளில் இந்த சித்தாந்தப் பிடிப்பைத்தான் காண முடியவில்லை. கடந்த அரை நூற்றாண்டில் மறந்ததும் மறக்கடிக்கப்பட்டதுமாக அரசியல் மாறிவிட்டது. அத்தகைய வெளிப்பாடாகவே நடந்து முடிந்த தேர்தல் இருந்தது.

- தங்க. ஜெயராமன், பேராசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x