Last Updated : 09 May, 2022 02:20 PM

 

Published : 09 May 2022 02:20 PM
Last Updated : 09 May 2022 02:20 PM

திமுக அரசு @ 1 ஆண்டு | பள்ளிக் கல்வி - சாபக்கேட்டில் இருந்து மீட்கும் சாத்தியப்பாடு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தது? நிறை, குறைகள் என்னென்ன? செய்ய வேண்டியவை என்னென்ன? - இது குறித்து சற்றே விரிவாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கல்வியாளர் வே.வசந்தி தேவி...

"கடந்த ஓராண்டில் தமிழகத்தில் பேசுபொருளாகி, வீதிதோறும் ஒலித்துக் கொண்டிருக்கும் இரு திட்டங்கள் - பள்ளி மேலாண்மைக் குழு, இல்லம் தேடிக் கல்வி. இவை இரண்டும் இன்றைய தமிழகத்துக்கு கல்வியை அதன் சாபக்கேட்டிலிருந்து மீட்கும் சாத்தியப்பாடு கொண்டவை.

தமிழத்தின் பள்ளிகள் தங்கள் உயிர் பந்தங்களைத் துண்டித்துக் கொண்டுவிட்டன. சுற்றிலுமுள்ள சமுதாயத்துடனான உறவுகளை இழந்துவிட்டன. சமுதாயத்தில் வேரூன்றி, மக்களுடன் இடைவிடாது நடக்க வேண்டிய உரையாடல்கள் உறைந்துவிட்டன. பெரும்பாலான ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் பள்ளியின் அருகமை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. வெகுதூரம் பயணித்து, தங்கள் கற்பித்தல் பணியை முடித்து, அவசரமாக வீடு திரும்புபவர்கள். பள்ளியின் பயனாளிகளான (stakeholders) பெற்றோர் பெரும்பாலான பள்ளி வளாகங்களுக்குள் காலடி வைக்கவே அனுமதியற்றவர்கள். இந்த அவமதிப்பிற்கான காரணத்தை விளக்க வேண்டிய தேவை இல்லை. இன்று அரசுப் பள்ளி பெற்றோர் ஏழைக்கும் ஏழையானவர் மட்டுமே. ஆகவே குரலற்றவர்கள். இவர்களுக்குப் பள்ளிகள் எதற்கு பதில் சொல்ல வேண்டும்?

ஜனநாயக நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு, ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதுதான். அதிகாரத்தைப் பரவலாக்குவதுதான். ஜனநாயக சமுதாயத்தின் பிரஜைகளை உருவாக்கும் கல்வி அமைப்பிற்கும் இது முழுமையாகப் பொருந்தும். தமிழகத்தின் அடித்தளமான பள்ளி அமைப்பு சிறப்புற அமைந்து, அறிவும் திறனும் உணர்வும் கொண்ட மாணவர்கள் உருவாக வேண்டுமென்றால், அரசுப் பள்ளிகளின் நிர்வாக அமைப்பு ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.

கல்வி நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் தேவை. அதிகாரம் மையப்பட்டுக் கிடக்கும் நிலை மாறி, அதிகாரப்பரவலும், அதிகாரிகளின் கையிலிருந்து கல்வி மீட்கப்படுதலும் ( De-Bureaucratisation) தேவை. உலகின் எந்த முன்னணி நாட்டிலோ, மற்ற வளரும் நாடுகளிலோ அதிகாரிகளால் பள்ளிகள் நிர்வகிக்கும் நிலையே கிடையாது. அனைத்து நாடுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிகளும், பெற்றோரும் இணைந்து நடத்தும் நிர்வாகம்தான் பள்ளிகளில் நிலவுகிறது. அந்நாடுகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இத்தகைய ஜனநாயக நிர்வாக அமைப்பே அடித்தளமாகிறது. அதற்கான முதல்கட்ட முயற்சியே பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைத்தல்.

பள்ளி மேலாண்மைக் குழு: கடந்த ஏப்ரல் 23, ஏப்ரல் 30 - தமிழ்நாட்டின் அனைத்து கிராம – நகரத் தெருக்களும் ஓர் அதிசயத்தைக் கண்டன. அருகிலிருக்கும் அரசுப் பள்ளியை நோக்கி, கடைக்கோடி மக்கள் சாரை சாரையாகச் சென்றனர். தங்கள் ஓட்டு வீடுகளிலிருந்தும், நூறு நாள் வேலைத் திட்ட வேலையை கொஞ்சம் ஒதுக்கிவிட்டும், தூசு படிந்த ஆடைகளுடனும் விரைந்தனர். தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளின் நிர்வாக அதிகாரத்தில் பங்கேற்கும் நம்பவியலா வாய்ப்பு. பள்ளி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதற்கும் அனுமதி அற்றவர்கள்... அழைப்பு விடுத்து, வரவேற்கப்பட்டனர்.

மேலே குறிப்பிட்ட இரு நாட்களில் தமிழ்நாட்டின் அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில், பாதி தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பிற்கானத் தேர்தல் நடைபெற்றது. பெற்றோரும், ஊர் மக்களும் இது எங்கள் பள்ளி என்று சொந்தமும், பெருமையும் கொள்ளும் மாற்றத்திற்கான தொடக்கம். பட்டுப்போன ஜனநாயகத்தின் வேர்களில் பாயும் புது வெள்ளம். நாடு முழுதும் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் கல்வி உரிமைச் சட்டம், 2009, பள்ளிகளை நிர்வகிக்கும், கண்காணிக்கும் பொறுப்பையும், அதிகாரத்தையும் பள்ளி மேலாண்மைக் குழுக்களிடம் ஒப்படைத்துள்ளது. பெற்றோர் பதினைந்து பேர், உள்ளாட்சி உறுப்பினர் இருவர், தலைமை ஆசிரியர், ஓர் ஆசிரியர், கல்வியாளர்... இவற்றில் பாதிக்கு அதிகமானோர் பெண்கள். பெண் தலைவர் கொண்ட இந்தக் குழு வேர் மட்ட ஜனநாயகத்தின் ஒரு எடுத்துக்காட்டு.

பள்ளிக்கான ஆண்டுத் திட்டம் உருவாக்குவதிலிருந்து, பள்ளியின் தேவைகளைத் தீர்மானங்கள் நிறைவேற்றி, உரிய இடத்திலிருந்து பெறுதல், வரவு - செலவுகளைக் கண்காணித்தல், கட்டமைப்புகள், போதிய ஆசிரியகள் நியமனம், மாணவர்ச் சேர்க்கை, ஆசிரியர் வருகை, கற்றுத் தருதல், ஒவ்வொரு மாணவரும் வகுக்கப்பட்ட திறன்களைப் பெறுகிறார்களா, பின்தங்கிய மாணவருக்குத் தனி கவனம் அளிக்கப்படுகிறதா, வன்முறைகள் தடுக்கப்படுகிறனவா என்ற அனைத்தையும் கண்காணிக்கும் அமைப்பு இது. தமிழ்நாட்டில் இந்தக் குழு பெயரளவில் அமைக்கப்பட்டு, கேலிக் கூத்தாகிக் கிடக்கிறது. பள்ளித் தலைமை ஆசிரியர் தன்னிச்சையாக அமைத்துக் கொண்ட குழு, என்றும் கூடாத குழு, எவரும் அறியாத குழு. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பல சட்டங்கள் போல், உதாசீனம் செய்யப்பட்ட, செயலிழந்த சட்டம்.

சட்டம் நடைமுறைக்கு வந்த பனிரெண்டு ஆண்டுகளாக மறைத்து, அமிழ்த்து வைக்கப்பட்டிருந்த இந்த ஆதார அமைப்பு இன்று தமிழ்நாட்டில் உயிர்பெற்று எழத் தொடங்கி இருக்கிறது. இன்றய தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பள்ளி மேலாண்மைக் குழுவைக் கல்வி மறுசீரமைப்பின் தொடக்கப் புள்ளியாகப் பாவிக்கிறது. கடந்த சில மாதங்களாக பள்ளி மேலாண்மைக் குழுவைப் பள்ளிதோறும் அமைக்க, உயிர்த் துடிப்பு கொண்ட அமைப்பாக மாற்ற, அரசுப் பள்ளி மாணவரின் பெற்றோர், குரல் பறிக்கப்பட்ட, விளிம்பு நிலையினர் உரிமைகளை மீட்டெடுக்க பிரம்மாண்ட முயற்சிகளைக் கல்வித் துறை, குறிப்பாக, மாநிலத் திட்ட இயக்குநரகம் எடுத்து வருகிறது.

இந்த ஜனநாயகக் கனவை வானிலிருந்து தரைக்கிறக்க படிகள் ஒவ்வொன்றாக கவனமாக அமைக்கப்படுகின்றன. சட்டம் மேலும் inclusive ஆக ஆக்கப்பட்டு, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், திருநங்கைகள் ஆகிய பெற்றோருக்கு முன்னுரிமையும், துணைத் தலைவர் பதவியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பல மட்ட, பல கட்டப் பயிற்சிகள்; மாநிலம் முழுதும் பல்லாயிரக் கணக்கான பள்ளிகள் முழு பயனடைய நூற்றுக்கணக்கான அதிகாரிகள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், பெற்றோர்கள், சிவில் சமூக அமைப்பினர், தன்னார்வலர்கள் அனைவருக்கும் இடைவிடாப் பயிற்சிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும், குடியிருப்பிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், கலைப் பயணங்கள், காணொலிகள், சுவரொட்டிகள். குழுவின் பெரும் முக்கியத்துவம், யார் அதன் உறுப்பினர்கள், அதன் பணிகள், அதிகாரங்கள், பொறுப்புகள் குறித்துப் பேசி வருகின்றன.

முதல் இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஏப்ரல் 23 அன்று, மாநிலம் முழுவதற்குமான அரசு நடுநிலைப் பள்ளிகளிலும், ஏப்ரல் 30 அன்று மாநிலம் முழுவதுமான தொடக்கப் பள்ளிகளில் பாதியிலும் நடந்துள்ளன. லட்சோபலட்சப் பெற்றோர் பங்கேற்றனர். முதல் கட்டத்தில் 5,74,615 பெற்றோர், மொத்தப் பெற்றோரில் 57.8%, இரண்டாம் கட்டத்தில் 7,53,197, மொத்தப் பெற்றோரில் 67.3%, அடுத்த இரண்டு ஆண்டுகள் பள்ளிகளை நிர்வகிக்கப் போகும் குழுக்களைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். பல மாவட்டங்களில் 70%, சிலவற்றில் 90% வரை பங்கேற்புப் பதிவாகி இருக்கிறது. நடைபெற்ற பிரச்சாரமும், மக்களைத் திரட்டியதும், பங்கேற்றதும், பகிர்ந்துகொண்டதும் முன் காணாத புத்துணர்ச்சியைப் பெற்றோர்களுக்கு ஊட்டிய அனுபவம்.

ஒரு சிறு நம்பிக்கை சாளரம் திறந்திருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு வேறொரு உலகம், இன்றினும் கொஞ்சம் மேம்பட்ட உலகம் சாத்தியம் என்ற நம்பிக்கை சாளரம்; அந்த உலகத்தை ஒரு படி அருகில் கொண்டு வருவதில் தங்களுக்கும் ஒரு சிறு பங்கு உண்டு என்ற நம்பிக்கை சாளரம் திறந்திருக்கும். அடுத்து மூன்று கட்டங்கள், மீதி பாதி தொடக்கப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், நடக்கவிருக்கின்றன. நம் கண் முன்னால் புதிய வரலாறு படைக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகம் என்பது அதிகாரப் பரவல் செய்யப்பட்ட ஜனநாயக அமைப்பாக மாறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன என்ற நம்பிக்கை அளிக்கிறது. முன் நிற்கும் சவால்கள் ஏராளம். அரசுப் பள்ளி நிர்வாகத்தில் ஒடுக்கப்பட்ட பெற்றோருக்கு பங்கேற்பு உறுதி செய்யப்படுமா? அல்லது, முன்பு போல் ஏட்டில் நின்றுவிடுமா?

வே.வசந்திதேவி

மேலே சொன்னது போல், பள்ளி மேலாண்மைக் குழு வேர்மட்ட ஜனநாயக அமைப்பு. ஜனநாயகத்தின் இலக்கணமான அதிகாரப் பரவல், பயனாளிகள் பங்கேற்பு, நிறுவன கடப்பாடு (institutional accountability) ஆகியவற்றில் நிலை கொண்டது. இத்தகைய உயர் விழுமியங்களெல்லாம் ஆதிக்கங்கள் கோலோச்சும் சமுதாயத்தில் சாத்தியமாகுமா?

ஆதிக்கங்கள் உடைபட்டால்தான் சாத்தியமாகும். எந்த ஆதிக்கங்கள்? பெரிய ஆதிக்கங்கள், குட்டி ஆதிக்கங்கள். நம் சமுதாயத்தின் சாவா சாதியம் போல் ஒவ்வொரு மட்டத்திலும் நிலை கொண்டிருக்கும் ஆதிக்கங்கள். மேல் அதிகாரிகளிலிருந்து தொடங்கி பல மட்ட அதிகாரிகள். பள்ளிகளை அடைந்தால், தலைமை ஆசிரியரின் ஆதிக்கம், அவர் கீழ் ஆசிரியர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குட்டி ராஜ்யம். அதிகாரங்களை விட்டுவிட யாருக்குத்தான் மனம் வரும்? இந்நிலையை மாற்றுவதற்குப் பெரும் முயற்சிகள் தேவை. அடுத்த இரண்டு ஆண்டுகள் சோதனைக் காலம். பெற்றதைப் பேணிக் காக்க வேண்டிய காலம்.

இந்தப் புதிய வரலாற்றின் பிறப்பிடம் எது? தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் மேல்மட்ட அதிகாரிகளின் ஆழ்ந்த அர்ப்பணம், மக்களிடம் கொண்ட அசையா நம்பிக்கை, நிர்வாகத் திறமை ஆகியவற்றில் பிறப்பெடுத்த நீரோட்டம். அது ஜீவ நதியாக வேண்டும். அரசின் மேல் மட்டத்திலிருந்து ஆணைகள் பிறந்தால் போதாது. மொத்த சமூகத்தின் பங்கேற்பு தேவை. கல்வி ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர், பெற்றோர், சிவில் சமூக அமைப்பினர், முன்னாள் மாணவர் பலரும் முயற்சி செய்ய வேண்டும். வெளியிலிருந்து நேசக் கரம் நீட்டப்பட வேண்டும். பள்ளிகளின் அச்சம், கதவைத் திறப்பதும், புதிய காற்று வீசுவதும் உகந்ததல்ல என்ற அச்சம் போக்கப்பட வேண்டும். பெற்றோரும், சமூகமும் தங்கள் எதிரிகளல்ல, தோழர்கள் என்ற நம்பிக்கை பிறக்க வேண்டும்.

உள்ளாட்சிகளுக்குப் பள்ளி மேலாண்மைக் குழுவில் முக்கியப் பங்கு உண்டு. ஊர்ப் பள்ளி நம் பள்ளி என்ற ஆழ்ந்த புரிதலுடன், அரவணைக்க வேண்டும். ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்ல; அர்ப்பணிப்புடன் வளர்த்து, பெருமை பெற என்ற பொறுப்புணர்வு மேலோங்க வேண்டும்.

விளிம்பு நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் குரலற்ற ஒரு பெரும் மக்கள் திரள் தங்கள் குழந்தைகளின் எதிர் காலம் குறித்த நம்பிக்கைகளின் குவி மையமாகப் பள்ளி மேலாண்மைக் குழுவைக் காண வேண்டும்.

இல்லம் தேடிக் கல்வி: கரோனாவின் சூறாவளித் தாக்கத்தில் உலக நாடுகள் அனைத்திலும் கல்வி சுக்கு நூறாக உடைந்தது. சமுதாயத்தின் செல்வங்களான குழந்தைகள் கற்றதை, கற்றலையே, இழந்து சாம்பிக் கிடக்கின்றனர். மீளவியலா வரலாற்றுப் பேரிழப்பாக நிலைத்து விடும் அபாயம் எங்கும் உணரப்படுகிறது. ஒரு தலைமுறையின் சோகம் இது. கல்வி மீட்சிக்கான திட்டம் ஒன்றைத் தமிழக அரசு உருவாக்கியது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் சிந்திக்கத் துணியாத ‘ இல்லம் தேடிக் கல்வி’ என்றத் திட்டம் இது. குழந்தைகளின் வசிப்பிடத்தில் மையங்கள் அமைத்து, மாலை நேரங்களில் தன்னார்வலர்களின் துணையுடன் நடக்கும். பெற்றோரும், ஊர் மக்களும் மையங்களை நிர்வகிப்பதில் பெரும் பங்கேற்பர். குழந்தைகள் இழந்ததை மீட்பர்; முன்பு காணாத புதியவற்றையும் பெறுவர் என்பது திட்டத்தின் நோக்கம். வகுப்பறையின் மூச்சு முட்டும் சூழலுக்கு மாற்றாக, மனப்பாடம் செய்து கொட்டும் புரியாத கற்றலுக்கு மாற்றாக, சுதந்திரக் காற்று வீச, பாடலும், ஆடலும், ஒலிக்க, குழந்தைகளின் கேள்விகளும், ஆரவாரமும் கட்டற்று பொங்கி வர, அவற்றையெல்லாம் பெற்றோரும், ஊராரும் கண்டு மகிழ, கல்வி நடைபெறும் என்பது எதிர்பார்ப்பு. வரவேற்பையும், விமர்சனங்களையும், தாக்குதல்களையும் திட்டம் சந்தித்தது.

திட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த பின்... அதன் சொரூபமாக, வடிவமாகக் காட்சியளிப்பவர்கள் அதனை நடத்தும் தன்னார்வலர்கள். தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் மையங்களில் கற்பிக்க விரும்பும் தன்னார்வலர்கள் பதிவு செய்யுமாறு அரசு அறிவித்த போது, ஓர் அதிசயம் காத்திருந்தது. ஒரு லட்சத்துத் தொன்னூறாயிரம் பதிவுகள். அனைவரும் பெண்கள். கிராமங்களில், சிற்றூர்களில் வீடுகளில் முடங்கிக் கிடந்த பெண்கள், பட்டதாரிகள், பள்ளி முடித்தவர்கள் திரண்டு வந்தனர். அரசு நடத்திய பல கட்டத் தேர்வுகளை அனாயாசமாகக் கடந்து, எதிர்ப்புகளைத் தவிடு பொடியாக்கி, தலை நிமிர்ந்து நிற்கும் கல்விப் படை இது. திட்டம் வகுக்கும் போது சிந்தித்தும் பார்க்காத படை. தமிழ் சமூகப் பார்க்கடலைக் கடைந்த போது, அதன் ஆழத்திலிருந்து, எதிர்பாராமல் எழுந்து, மண்ணுக்கும், விண்ணுக்குமாய் விஸ்வரூபம் எடுத்த மகாசக்தி.

தன்னார்வலர்களின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் காண்போரையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறது. பல காலம் ஆசிரியர் இயக்கத் தலைவராக இருந்த ஒருவர் சொல்கிறார், “அந்த சகோதரிகளைப் பார்த்தால், காலில் விழ வேண்டும் போல் இருக்கிறது.” பலர் புதுப்புது கற்பித்தல் முறைகளைக் கையாளுகிறார்கள். தங்கள் சொந்த செலவிலேயே கல்வி உபகரணங்களைத் தயாரிக்கிறார்கள். சென்னை தீவுத் திடலில் நடந்த பொருட்காட்சியில் இல்லம் தேடிக் கல்வி அரங்கம் அனைவரையும் கவ்வி இழுத்தது. இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட சாபக்கேட்டிற்கு, பள்ளிகள் சமுதாயத்திலிருந்து அந்நியப்பட்டுக் கிடப்பதற்கு , விமோசனம் தேடும் வாய்ப்பும் தென்படுகிறது. பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான தேர்தல்களில் உறுப்பினர்களாக ஏராளமான தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பள்ளியையும், சமுதாயத்தையும் இணைக்கும் சங்கிலி அவர்கள். அந்நியப்பட்டவை அன்யோன்யப்படும் விடியல் தென்படுகிறது.

மையங்களில் புதிய கல்வி; சுவர்களை உடைத்த, தடைகளைத் தகர்த்த கல்வி; ‘ டீச்சர்’ என்ற அதிகாரச் சொல்லிற்கு பதிலாக, ‘அக்கா’ என்ற அன்புச் சொல். அன்பின் அரவணைப்பில் அச்சம் தவிர்த்த கற்றல். கேள்வி கேட்கலாம்; சக மாணவருடன் சேர்ந்து விடை தேடலாம்; விடைகள் பலவாயினும் கடிதல் இல்லை; விடுகதைகள் போடலாம். பாடிக் கற்கலாம்; கற்றதை வரையலாம்; நடிக்கலாம். கற்பனைக் குதிரையைத் தட்டி விடலாம்; விண்ணை நோக்கிப் பறக்கலாம். குழந்தைகள் ஆர்வத்துடன் ஓடி வருகிறார்கள். அக்காவிற்காகக் காத்திருக்கிறார்கள். வகுப்பு முடிந்தும் போக மறுக்கிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் ஆரம்பத்தில் ஆத்திரமும், பொறாமையும் கொண்டவர்கள், மையங்களுக்குப் போக மறுத்தவர்கள், இன்று புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.

உலகம் முழுதும், பல காலமாக மாற்றுக் கல்வி இயக்கங்களும், புரட்சியாளர்களும் கனவு கண்ட கல்வி இதுதானோ? கொரானாவின் கொடையாக நம் மடியில் வந்து வீழ்ந்திருக்கிறதோ?

தமிழ்நாடு இன்று மாடல் ஆகி இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்- சமூக செயல்பாட்டாளர் ஜான் டிரீஸ் போகுமிடமெல்லாம் ‘ தமிழகத்தைப் பாருங்கள்’ என்று சொல்கிறார்.

குறைகளற்ற நிறைகளேது? - கனவு மெய்ப்பட செய்ய வேண்டியதோ ஏராளம். திட்ட வடிவில் இருக்கும் சில குறைகள் நீக்கப்பட வேண்டும். அரசு அமைப்பை உருவாக்கிவிட்டது. அமைப்பில் ஆன்மாவைக் காணும் பொறுப்பு நம் அனைவரினுடையது.”

கட்டுரையாளர்: வே.வசந்திதேவி | தொடர்புக்கு: vasanthideviv@gmail.com

- தொகுப்பு: இந்து குணசேகர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x