Published : 05 Apr 2016 09:06 AM
Last Updated : 05 Apr 2016 09:06 AM

நலத்திட்டங்களுக்குப் போட்டி அரசியல் அவசியம்: ஜெயரஞ்சன் நேர்காணல்

தேர்தல்களின் கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்கு, தேர்தல் அறிக்கைகளுக்குப் பெரிய பீடிகை கொடுக்கின்றன அரசியல் கட்சிகள். உள்ளபடி, எந்த அளவுக்குத் தேர்தல் அறிக்கைகள் ஆட்சியில் செல்வாக்கு செலுத்துகின்றன. கடந்த கால வரலாறு நமக்குச் சொல்லும் பாடம் என்ன? சமூகப் பொருளியல் ஆய்வாளர் மற்றும் மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநர் ஜெயரஞ்சனிடம் பேசினேன்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து நிர்வாகம் மற்றும் திட்டங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் என்னவிதமான சூழ்நிலைகளும் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன?

தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லா மாற்றங்களும் கட்சிகளுக்கு இடையிலான போட்டியின் அடிப்படையிலேயே நடந்துள்ளன. எளியவர்களுக்கு யார் அணுக்கமானவர்கள் என்பதைக் காண்பிப்பதற்கான போட்டியும், தன் கட்சியின் அடித்தளத்தைக் கூடுதலாக வலுப்படுத்துவதற்குமே நிர்வாகரீதியாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்கின்றன. கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில், அப்போது மாநில அரசிடமிருந்த வளங்கள் மற்றும் வருவாயின் அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தைத் துவக்கினார். அதற்கு மேல் அவருக்கு சாத்தியமாகவில்லை. நிதியும் இல்லை. மைய அரசின் ஒத்துழைப்பும் இல்லை. அடுத்து வந்த எம்ஜிஆர் அரசு, காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைச் சத்துணவுத் திட்டமாகச் செழுமைப்படுத்தியது மிகவும் புரட்சிகரமானது என்று இன்றும் சொல்கிறோம். மேலும் அவர், பொது விநியோக முறையை விரிவுபடுத்தவும் செய்தார்.

தமிழக அரசியலில் அரிசி சார்ந்த அரசியல் எப்போதும் மையமாக இருந்துள்ளதல்லவா?

காங்கிரஸ் ஆட்சியைக் காலிசெய்தது அரிசிதான். 1970-களில் உணவுநிலை மாநிலத்தில் வளமாக இல்லை. 80-களின் துவக்கத்தில் அரிசி உற்பத்தி உபரிநிலைக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் எம்ஜிஆரால் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவர முடிந்தது. இதன் மூலம் ஏழைகளுக்கு ஆதரவான அரசு என்று அவருடைய அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்த முனைந்தார். அடையாள அரசியலும் முக்கியமான வேலையைச் செய்தது. அவர் மீது மலையாளி என்ற விமர்சனம் இருந்த காலத்தில், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கினார். நேர்மை மிக்க ஆய்வறிஞரான வ.அய்.சுப்ரமணியனைத் துணைவேந்தராக நியமித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பான பணிகள் சுப்ரமணியன் காலத்தில் நடந்தேறின. கட்சிகளுக்கிடையில் ஒவ்வொருவருக்கும் தன்னை நிரூபிக்கும் போட்டிதான் இதுபோன்ற காரியங்கள் நடக்கக் காரணமாக உள்ளது.

தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகள் எல்லாவற்றையும் தாண்டி, அடுத்தடுத்துப் போட்டியாக வரும் அரசுகள் ஒவ்வொரு படியாக நலத்திட்டங்களை மேம்படுத்திச் செல்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது.

தமிழகத்தின் வளங்களும், வருவாயும் கூடிக்கொண்டே வரும்போது அதற்கேற்பச் செயல்பாடுகளும் திட்டங்களும் அதிகரிக்கின்றன என்கிறீர்களா?

ஆமாம். 1967-ல் செய்ய முடியாத காரியங்கள் 2000-ல் சாத்தியமாகின்றன. அப்போது பணமும் கிடையாது, உணவுப் பொருட்களும் கிடையாது. 2000-ல் உணவுப் பொருட்களும் உபரியாக உள்ளன. வரிவருவாயும் அதிகமாகிவிட்டது. வருடத்துக்கு ரூ.3,000 கோடி செலவழிப் பதென்பது அத்தனை எளிதாகிவிட்டது அந்தச் சூழ்நிலையில் தான் 2 ரூபாய் அரிசித் திட்டம் கருணாநிதியால் அறிமுகப் படுத்தப்படுகிறது. மைய அரசின் மானியத்தையும் மாநில அரசின் மானியத்தையும் திறம்பட இணைப்பதால் இந்தத் திட்டம் சாத்திய மாகிறது. ஜெயலலிதா அரசு அதை இலவசமாகவே ஆக்கிவிடுகிறது. இதற்கு இப்போது ரூ. 4,000 கோடி செலவு ஆகிறது. இதற்கும் 2 கட்சிகளுக்கு இடையிலிருக்கும் போட்டி மனப்பான்மையே காரணம். மக்கள் நலத் திட்டம் சார்ந்து ஒரு அரசு நடப்பதற்கு இந்தப் போட்டி அரசியல் முக்கியமானது. ஆரோக்கியமானதும்கூட.

இலவசக் கலாச்சாரம் என்று டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் சொல்லும் விமர்சனங்கள் பற்றி…

இலவசங்களுக்கு எதிராக யார் பேசினாலும் அது மக்களிடம் எடுபடவே செய்யாது. நமது சமூகம் உணவைத்தான் மையமாகக் கொண்டது. ஆதிக்க சாதிகள்தான் உணவின் மீதான ஏகபோகத்தை வைத்திருந்தன. பொது விநியோகத் திட்டம் வாயிலாகவும், இலவச அரிசி போன்ற திட்டங்கள் வாயிலாகவும் இந்த ஏகபோகத்தை முழுமையாக அரசுகள் உடைத்து நொறுக்கிவிட்டன. முன்பிருந்த கிராமப்புற அதிகாரப் படிநிலைகளில் இதனால் நிலைகுலைவு ஏற்பட்டுவிட்டது. சாப்பாட்டுக்காக யாரும் யார் வீட்டுக்கு முன்பும் நிற்க வேண்டிய அவசியம் இல்லாத சூழ்நிலையில் முன்பிருந்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போகிறது. ஒரு வேளாண்மைச் சமூகத்தில் விவசாயக் கூலிகள் வறட்சிக் காலங்களில் பண்ணையாரைச் சார்ந்து நிற்கும் சூழல் இப்போது இல்லை. மத்திய அரசு கொண்டுவந்த வேலை உத்தரவாதத் திட்டம் கூடுதலாக அவர்களைத் தன்னிறைவாக்கியுள்ளது. வேலை, உணவு இரண்டுக்கும் நில உடைமையாளரிடம் மட்டும் தான் போய் நிற்க வேண்டும் என்ற நிலைக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.

கடந்த 20 ஆண்டுகளைப் பார்த்தீர்களெனில், ஏகப்பட்ட திட்டங்கள் வேகமாக நடைமுறைக்கு வந்துள்ளன. இலவசங்கள் அதிகரிக்கும் அதே வேளையில் கல்வி, ஆரோக்கியம் போன்ற அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து அரசு விலகுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்துச் சொல்லுங்கள்…

அப்படி முழுமையாகச் சொல்ல முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை இணையிணையாக நடக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆந்திரா போன்ற மாநிலங்களில் நிறைய திட்டங்களை மூடியே விட்டார்கள். இங்குள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் அனைத்தும் முழுமையாகச் செயல்படும் திறன் கொண்டவை. ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நாம் மோசமாக இருப்பதாக நான் கருதவில்லை.

தமிழகத்தில் மது அருந்துபவர்களின் சதவீதம் 43லிருந்து 47 சதவீதமாக வளர்ந்துள்ளது. மதுவிலக்கு அனைத்துக் கட்சிகளின் விவாதமாகவும் மாறியுள்ளது. ஒரு மாநில அரசு மதுவிலக்கைச் சரியாக அமல்படுத்த மத்திய அரசின் உதவி அவசியமா?

மத்திய அரசு நினைத்தால் சாத்தியம்தான். ஏனெனில், வேறு வகையான வருவாய் வழிகள் உள்ளன. ஆனால், எல்லா மாநிலங்களும் இந்தக் கோரிக்கையை வைத்தால் என்ன செய்வது என்று மத்திய அரசு அச்சப்படும். ஏனெனில், மது மூலம் கிடைக்கும் வருவாய் மிகப் பெரியது.

தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நவீன மாற்றங்களை உள்வாங்கியதாகவும் முற்போக்குத்தன்மை கொண்டதாகவும் யாருடைய தேர்தல் அறிக்கைகளைச் சொல்வீர்கள்?

மாநில அளவில் திமுக, பாமக இரண்டு கட்சிகளின் தொடர்ச்சியான தேர்தல் அறிக்கைகளைச் சொல்லலாம். பொறுப்புணர்வுடன் தீவிரமாக விவாதித்துத் தயாரிப்பார்கள். அபத்தங்கள் என்று எந்த அம்சத்தையும் அவற்றில் பார்க்க முடியாது. மற்ற தேர்தல் அறிக்கைகள் எல்லாம் அவியல் மாதிரிதான். தேசிய அளவில் பார்த்தால் காங்கிரஸ், சிபிஎம் இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் தயாரிக்கப் படுபவை.

தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் ஒரு அரசு, உடனடியாகக் கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் எவை? தேர்தல் அறிக்கைகள் எதையெதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்?

விவசாயம்தான் உடனடியாகக் கவனிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. விவசாய வருவாயைச் சார்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. விவசாய வருவாயை மட்டுமே நம்பியிருப்பவர்கள் 25% மட்டுமே இங்கு உள்ளனர். ஏனெனில், விவசாயத்தை லாபமான தொழிலாகச் செய்வதற்குப் போதிய நீர்ப்பாசன வசதிகளும் மேலாண்மையும் இல்லை. விளைபொருட்களுக்குச் சரியான விலை கிடைப்பதில்லை. விலை, விவசாயிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. அடுத்த விஷயம் வேலைவாய்ப்பு. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இங்குள்ள கொள்கை வகுப்பாளர்களுக்குத் தெளிவான பார்வை இல்லை. மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் அயல்நாட்டு முதலீடு வழியாக வேலைவாய்ப்புகள் கூடும் என்று சொல்கிறார்கள். ஆனால், யாரும் வேலையின் தரம் பற்றிப் பேசுவதே இல்லை. அங்கே என்ன மாதிரியான வேலைகள் கொடுக்கப்படுகின்றன? கிட்டத்தட்ட அன்றாடக் கூலிகள் போலத்தான் பணியாளர்கள் எடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எந்த வேலைப் பாதுகாப்பும் கிடையாது. இந்தச் சூழ்நிலையாவது எதிர்காலத்தில் தொடருமா என்பதும் கேள்விக்குறியே. சமீபத்தில் இந்தியா வந்துள்ள பல புதிய தொழிற்சாலைகள் முழுக்க முழுக்கத் தானியங்கி தொழில்கூடங்களையே வைத்துள்ளன. 10,000 பணியாளர்கள் வேலை செய்த கார் தொழிற்சாலைகளை நவீனப்படுத்திவிட்டால், 500 பேர் வேலை செய்தால் போதும். இப்படியிருக்கும் சூழ்நிலையில் இத்தனை முதலீடு வந்ததாகக் கூறுவதில் என்ன பொருள் உள்ளது?

அடுத்து உடனடியாகக் கவனிக்க வேண்டிய அம்சம் கல்வித் துறை. ஆரம்பக் கல்வி, உயர் கல்வியின் தரம் மென்மேலும் மோசமாகி வருகிறது. கல்வியைப் பொறுத் தவரை மிகப் பெரிய வெடிவிபத்துக்குக் காத்திருக்கும் அணுஉலை போல உள்ளது. நமது கல்வியின் தரம் குறைவது பற்றி எத்தனையோ அறிக்கைகள் வந்துவிட்டன. ஆனால், அதை அரசுகள் கண்டுகொள்வதே இல்லை. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட செயல்வழிக் கல்விமுறைத் திட்டம் மாற்றத்துக்கான ஒரு நல்ல தொடக்கம். அதைத் தொடர்ந்து அமல்படுத்தி மேம்படுத்தியிருக்க வேண்டும். படிக்கும்போதே யோசித்துப் படிக்கும் சூழல் இதனால் உருவாகும். பள்ளிக்கல்வியில் தொடங்கி அதை மேம்படுத்தி கல்லூரி வரை கொண்டுபோயிருந்தால் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். அதைத் தொடரவில்லை.

அடுத்தது, சுகாதாரம். பொது மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

தேர்தல் மற்றும் அரசு நிர்வாகம், வளர்ச்சித் திட்டங்க ளின் மேல் சிறிய தாக்கத்தையே தேர்தல் அறிக்கைகள் ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. ஆனால், அவை தொடர்ந்து பெரிதாகப் பேசப்படுவதன் காரணம் என்ன?

ஒரு கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதாகத் தேர்தல் அறிக்கை உள்ளது. தேர்தலில் ஒரு பாவனை என்று தேர்தல் அறிக்கையைச் சொல்லலாம். அரசியல் சாசனம்போல, ஒரு ஆட்சியையோ, நிர்வாகத்தையோ முடிவுகளையோ கட்டுப்படுத்தும் சக்தி எதுவும் தேர்தல் அறிக்கைக்குக் கிடையாது என்றாலும், மக்கள் அரசியல் கட்சிகளைப் பார்த்துக் கேள்வி எழுப்புவதற்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தங்களுடைய பார்வை என்ன என்று மக்களிடம் அரசியல் கட்சிகள் சொல்வதற்குமான ஒரு ஆவணம் அது என்பதாலேயே அது முக்கியத்துவம் பெறுகிறது!

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x