Last Updated : 27 Jun, 2014 09:37 AM

 

Published : 27 Jun 2014 09:37 AM
Last Updated : 27 Jun 2014 09:37 AM

கருத்துக் கணிப்பின் அரசியல்

கருத்துக் கணிப்பு என்பது பித்தலாட்டமே என்கிறார் பிரெஞ்சு சமூகவியல் அறிஞர் பூர்தியு.

பொதுவாக, மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களுடைய அபிப்பிராயங்கள் என்ன என்பதைத் தெரிவிக்கப் பல சாதனங்கள், ஊடகங்கள் இருக்கின்றன; கட்சித் தொண்டர்கள் போன்றோரும் இருக்கின்றனர். இவற்றில் இன்று மிகவும் பரவலாகப் பேசப்படுவது: கருத்துக் கணிப்பு. பெரும்பாலும் தேர்தல் சமயங்களில் அடிபடும் இந்தக் கருத்துக் கணிப்பு எந்த அளவுக்கு உண்மையைப் பிரதிபலிக்கிறது என்றோ, அது யாரால், எந்த உள்நோக்கங்களுடன் நடத்தப்படுகிறது என்றோ யாரும் கேள்வி எழுப்புவது இல்லை.

மிகவும் நாசூக்காகச் சமூகத்தைப் பாதிக்கும் இந்தச் செயல்பாட்டைப் புறவய நோக்குடன் ஆராயும் சமூகவியலாளர்களும் மிக அரிதாகவே இருக்கிறார்கள். பொதுவாக, சமூகவியல் ஆய்வு என்கிற துறையே போதுமான அளவு ஆழமாகவோ பரவலாகவோ இங்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இல்லாத ஒன்று

1972-ல் வட பிரான்ஸின் அர்ராஸ் நகரத்தில் நடந்த ஒரு க‌ருத்தரங்கில் ‘மக்கள் கருத்து என்பது இல்லாத ஒன்று' என்ற சர்ச்சைக்குரிய தலைப்பில் பியர் பூர்தியு என்ற சமூகவியலாளர் ஆற்றிய சுவாரசிய‌மான உரையில், கருத்துக் கணிப்பை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, இதுதான் மக்கள் கருத்து என்ற ஒன்றை முன்வைப்பதில் உள்ள குறைபாடுகள்பற்றிப் பேசுகிறார். ஆழமான சமூகவியல் ஆய்வுக்கு நல்ல உதாரணமாக இதைப் பார்க்க முடிகிறது.

கருத்துக் கணிப்பின் பயனையும் அது செயல்படும் விதத்தையும் மேலெழுந்தவாரியாகச் சாடாமல் ஆழமாக ஆய்கிறார். கருத்துகளைச் சேகரிக்கும் செயல்பாட்டின் பின்னால் பூடகமாக மூன்று கருதுகோள்கள் இருப்பதாக அவர் சொல்கிறார். முதலாவதாக, எல்லோரிடமுமே குறிப் பிட்ட ஒரு கருத்தை உருவாக்குவதற்கான ஆற்றலோ அறிவோ நாட்டமோ இருக்கக்கூடும் என்ற கருதுகோள். எல்லோரும் சமம் என்ற பொதுவான ஜனநாயகக் கோட்பாட்டை மேற்சொன்ன விஷயத்துடன் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் இருந்தால், இந்தக் கருதுகோள் எந்த அளவுக்குத் தவறானது என்பது புரியும் என்கிறார்.

இரண்டாவது, எல்லாவிதக் கருத்துகளுக்கும் சமமான மதிப்பீடு இருக்கிறதென்று நம்பும் கருதுகோள். பிரச்சினை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர், அதைப் பற்றித் தீவிரமாகச் சிந்திப்பவர், அதுகுறித்துச் சற்றும் அக்கறை கொள்ளாத வர் என்பதான பல கோணங்களிலிருந்து பெறப்படும் கருத்துகளைக் கொண்டு ஒரு கூட்டல் கணக்கைப் போல, எடுக்கப்படும் முடிவு எப்படி அர்த்தமுள்ளதாக இருக்க முடியுமென்று பூர்தியு வியக்கிறார்.

மூன்றாவது கருதுகோள்: எல்லோரிடமும் அதே கேள்விகள் கேட்கப்படுவதன் மூலம் பிரச்சினைகள் இவைதான் என்பதில் எல்லோரிடையேயும் உடன்பாடு இருக்கிறது; அதாவது, நியாயமாகக் கேட்கப்பட வேண்டிய கேள்விகள்தான் இவை என்று எல்லோரும் நினைக்கிறார்கள் என்ற கருதுகோள். தன்னுடைய உரையில் இந்த மூன்று கருதுகோள்களுமே உண்மை நிலைக்குப் புறம்பானவை என்று வாதிடும் பூர்தியு, இந்தச் செயல்பாட்டின் பல கூறுகளையும் அலசுகிறார். அதற்கு அவர் பிரான்ஸ், அல்ஜீரிய நாடுகளிலிருந்து உதாரணங்களைக் கொடுத்தாலும், அவற்றுக்கு இணையான நிகழ்வுகளையும், நிலைகளையும் நம் நாட்டிலும் பார்க்கலாம்.

ஆளும் வர்க்கத்தினரின் உத்திகள்

மக்களைச் சந்தித்து, அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டு, அவர்களுடைய அபிப்பிராயங்களை அறிந்து கொள்வது என்பது தார்மிக அடிப்படையில் மிகவும் நியாயமான செயல்பாடுதான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதைச் செய்பவர்கள் நடுநிலையோடும் முழுமையாகவும் உள்நோக்கம் எதுவுமின்றிச் செய்கிறார்களா என்பதே கேள்வி. உதாரணமாக, அரசின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய கருத்துக் கணிப்பில், அதைக் குறித்த கருத்தைத் தெரிவிப்பவர்களிடம் அதற்குத் தேவையான தரவுகள் இருக்கின்றனவா? பதிலளிப்பவரின் சமூகப் பின்னணி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறதா? கருத்தைக் கோரும் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள பதில்களின் மாற்றுத் தேர்வுகளில் எல்லா சாத்தியக்கூறுகளும் அடக்கமா?

இவை போன்ற பல கேள்விகளை எழுப்பும் பூர்தியு, ‘வேறுபாடுகள்: ரசனைகுறித்த மதிப்பீட்டின் மீதான சமூகவியல் விமர்சனம்’ (1979) என்ற தன்னுடைய புத்தகம் மூலமாக உலக அளவில், பண்பாட்டு அம்சங்களில் ஒருவருடைய ரசனைகுறித்த மதிப்பீடுகள் அவருடைய சமூகத் தளத்தைச் சார்ந்து இருப்பதோடல்லாமல், அவரை அந்தத் தளத்திலேயே நிறுத்தி அடையாள‌ப்படுத்துகிற செயல்பாடுகள் என்பதை மிக விரிவாக, ஆழமாக விளக்கியிருக்கிறார்.

அல்ஜீரியாவில் - அது பிரெஞ்சுக் காலனியாக இருந்தபோதும், சுதந்திரம் அடைந்த பிறகும் - தன்னிடம் பயிற்சி பெற்ற உதவியாளர்களுடன் சேர்ந்து அவர் மேற்கொண்ட கள ஆய்வுகளின் பலனாக, சமூகத்தின் பல்வேறு தளங்களில் உள்ள மக்களிடையே காணப்படும் உறவுகளின் பல பரிமாணங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

வரலாறு சமூகத்தில் ஏற்கெனவே உருவாக்கியுள்ள படிநிலைகளை மாற்றாமல் வைத்திருப்பதற்கு ஆளும் வர்க்கத்தினர் கையாளும் உத்திகளுக்கு ஊடகங்கள் துணைபோகும் அபாயத்தைப் பல புத்தகங்கள் மூலமாகவும், உரைகள் மூலமாகவும் உணர்த்தியிருக்கிறார்.

மாற்றம் விரும்பாத உத்தி

ஒரு சமூக யதார்த்தத்தைப் பற்றிப் பொதுப்படை யாகப் பேசுவதோ, அதீதமாக எளிமைப்படுத்துவதோ பிரச்சினையின் உண்மை நிலையை மறைத்து விடுகிறது. உதாரணமாக, பாமர மக்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றிப் பேசும்போது, இவை போன்ற எளிமைப்படுத்துதல்கள் அர்த்தமற்றவையாக ஆகின்றன. குடும்ப ஒழுக்க நெறிகள், தலைமுறைகளுக்கு இடையேயும், ஆண்கள், பெண்களுக்கு இடையேயும் உள்ள உறவுகள் போன்றவற்றில் சமூகத்தின் மற்ற பிரிவினர்களைவிட அதிகக் கட்டுப்பாடும், மரபின் பிடியும் இவர்களிடையே காணப்படுகின்றன.

மாறாக, சமூகப் படிநிலைகளைப் பாதுகாக்க அல்லது மாற்ற விழையும் அரசியல் அமைப்புகள்பற்றியோ, அவற்றின் செயல்பாடுகள் பற்றியோ கேட்கப்படும்போது இவர்கள் அடிப்படையில் பெரும் மாற்றங்களை விரும்புகிறார்கள். ஆகவே, ஒரே ஒரு வாக்கியத்தில் பாமர மக்கள் மாற்றங்களை வரவேற்கிறார்கள் என்றோ இல்லை என்றோ சொல்வது சரியும் இல்லை, தவறும் இல்லை என்கிறார் பூர்தியு. அண்மையில் பிரான்ஸ் நாட்டில், தன்பாலின உறவாளர்களிடையே திருமணச் சட்டத்தைச் சட்டரீதியாக அங்கீகரிக்கும் விவகாரத்தில் இவை போன்ற முரண்பாடுகள் தென்பட்டது குறிப்பிடத் தக்கது.

மக்கள் கருத்தை அறிய விரும்பும் ‘கருத்துக் கணிப்பு' பற்றிய அவருடைய முடிவுரையில் பூர்தியு சொல்கிறார்: “கருத்துக் கணிப்பு செய்பவர்களும் அவர்களின் முடிவுகளை அப்படியே தங்களுக்காகப் பயன்படுத்துபவர்களும் மறுவிசாரணைக்கு இடமின்றி ஒப்புக்கொண்டுவிடும் மக்கள் கருத்து என்பது உண்மையில் இல்லாத ஒன்று என்பதே என்னுடைய கருத்து.”

- வெ. ஸ்ரீராம்,
பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர்,
இருமுறை செவாலியே விருது பெற்றவர்.
தொடர்புக்கு: ramcamussss@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x