Published : 29 Oct 2021 03:09 AM
Last Updated : 29 Oct 2021 03:09 AM

கடவுள் மறுப்பைக் கைவிடுகிறதா திராவிட இயக்கம்?

மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் துரை வையாபுரி, பெரியார் திடலுக்குச் சென்று வாழ்த்துப் பெற்றுள்ளார். ‘விடுதலை’ நாளேட்டின் முதல் பக்கத்தில் வெளியான புகைப்படத்தில் வைகோவுக்கு அருகில் கி.வீரமணியும் துரை வையாபுரிக்கு அருகில் அன்புராஜும் நின்றுகொண்டிருந்த காட்சியே வாரிசுகளைக் களத்தில் இறக்குவது குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டது. ஆம், அது இன்று திராவிட இயக்கத்தில் எல்லோரும் ஏற்றுக்கொண்ட நடைமுறையாகிவிட்டது. திமுகவில் உதயநிதி என்றால், அதிமுகவில் ப.ரவீந்திரநாத். இன்னும் எடப்பாடியார் மட்டும்தான் விதிவிலக்காக இருக்கிறார். அவரும் விரைவில் மாறிவிடக்கூடும். வாரிசு அரசியலுக்கு எதிராகக் கடுமையாகக் குரல்கொடுத்த வைகோவே அதை அனுமதித்தாகிவிட்ட பிறகு யாரைத்தான் குற்றம்சாட்ட முடியும்?

வைகோவுடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட துரை வையாபுரி, வலதுசாரி அரசியலுக்கு எதிராக முற்போக்கு அரசியலை முன்னெடுப்போம் என்று கூறியிருக்கிறார். வாரிசுகள் யாரையும்விட அவரது மொழியில் தெளிவும் துலக்கமும் இருக்கிறது. ‘பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும்’ என்று அவரது வார்த்தைகள் மரபான பெரியாரியர்களிடையே சற்றே அதிர்ச்சியை அளித்துள்ளன. ஆனால், இரண்டாண்டுகளுக்கு முன்னால், சென்னையில் நடந்த மதிமுக மாநாட்டில், கி.வீரமணி முன்னிலையிலேயே வைகோ முன்வைத்த கருத்தைத்தான் துரை வையாபுரி இன்று ஒற்றை முழக்கமாக்கியிருக்கிறார்.

ட்ரோஜன் குதிரை

பெருந்திரளான மக்கள் கடவுள் நம்பிக்கையாளர்களாக இருக்கும் நிலையில், கடவுள் மறுப்பைப் பேசி வலதுசாரிகளுக்கு வாய்ப்பளித்துவிடக் கூடாது என்று அந்த மாநாட்டு மேடையில் கேட்டுக்கொண்டார் வைகோ. இந்துத்துவ அமைப்புகள் மக்களின் கடவுள் நம்பிக்கையை ட்ரோஜன் குதிரைகளாக்கி திராவிட இயக்கத்தை வீழ்த்தப்போகின்றன என்று எச்சரித்தார். ட்ராய் நகரத்தின் மீது கிரேக்கர்கள் நடத்திய படையெடுப்பைத் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக விரிவாக வர்ணித்து, திராவிடக் கட்சிகளின் வியூகத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். எத்தனை மேடைகளில் ஏறினாலும் கி.வீரமணி கடவுள் மறுப்புக் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டார். ஆனால், அன்று வைகோ பேசியதன் உட்கருத்தை கி.வீரமணி ஏற்றுக்கொண்டார் என்பதை அவரது சமீபத்திய புத்தகத்துக்கு ‘ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை’ என்று தலைப்பு வைத்திருப்பதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

மரக் குதிரை வியூகத்தை முறியடிக்கவே தான் காஞ்சி கோயிலுக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கும் சென்றதாக அந்த மேடையில் குறிப்பிட்டார் வைகோ. எல்லோரும் கோயிலுக்குப் போவோம் என்று பகிரங்க அழைப்பையும் அவர் விடுத்தார். நாற்பதுகளில் பேசியதை அண்ணா அறுபதுகளில் பேசவில்லையே என்று அந்த அழைப்புக்கான காரணத்தையும் அவர் விளக்கினார். கலிங்கப்பட்டியிலுள்ள பழைமையான பிள்ளையார் கோயிலுக்கும் தனது பாட்டனார் கட்டிய பெருமாள் கோயிலுக்கும் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து குடமுழுக்கு செய்திருப்பதையும் குறிப்பிட்டார் வைகோ.

கோயில்களுக்குச் சென்றதை வியூகம் என்றே அடையாளப்படுத்தினார் வைகோ. அவரது மகன் வையாபுரியோ தனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று பகிரங்கப்படுத்திக்கொண்டிருக்கிறார். கருணாநிதியும் வைகோவும் கடவுள் மறுப்பாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டாலும் அவர்களது குடும்பத்தினர் நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அது கொள்கை முரண்பாடில்லை. அதுவே இயல்பானதும்கூட.

பெரியாரும் அண்ணாவும்

கடவுள் மறுப்பை ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்த பெரியாரும் அண்ணாவும்கூடத் தங்களது கொள்கையைக் குடும்பத்தினரிடத்தில் நடைமுறைப்படுத்த இயலாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். நாகம்மையாருக்கு முதல் குழந்தை பிறந்து இறந்த நிலையில், அடுத்த குழந்தைப் பேற்றுக்காக வேண்டிக்கொண்டு ராமேஸ்வரத்துக்கு அழைத்துப்போனதை பெரியார் பின்பு வானொலி பேட்டி ஒன்றில் நினைவுகூர்ந்துள்ளார். அவர் அதை மறைக்கவும் இல்லை. மறைப்பதற்குரிய விஷயமாக அதைக் கருதவும் இல்லை. கடவுள் மறுப்புக் கொள்கையை அவர் பின்னாளில்தான் வெளியிட்டார் என்றாலுமேகூட இளம்வயதிலிருந்தே அவர் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்தான்.

அண்ணா முதல்வராக இருந்தபோது, 1968 அக்டோபர் 3 அன்று திருத்தணி ஆலயத்தின் மலைப் பாதையைத் திறந்துவைக்கச் சென்றபோது முருகனைத் தரிசித்தார். திருத்தணி முருகன்தான் அவரது குடும்பத்தின் குலதெய்வம். விரும்பிச் செல்லாவிட்டாலும், அவரது உடல்நிலை கருதிக் குடும்பத்தினர் வற்புறுத்தியதால் சென்றிருக்கலாம். தேர்தல் பாதையை ஏற்காத பெரியாரும் தேர்தல் பாதைக்கு வந்தாலும் கொள்கையிலிருந்து வழுவவில்லை என்று சொன்ன அண்ணாவுமே தமது கடவுள் மறுப்புக் கொள்கையைக் குடும்பத்தவர்களிடம் நடைமுறைப்படுத்த இயலாதபோது, தேர்தல் வெற்றியையே பிரதானமாகக் கருதும் இன்றைய திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் மீது குற்றம் சுமத்திவிட முடியாது. கடவுள் மறுப்புக் கொள்கை என்பது உலகு தழுவிய கொள்கையாக ஒருபோதும் இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப்போவதும் இல்லை. வாழ்வின் கவலைகளையும் மனச்சுமைகளையும் இறக்கிவைக்க மாற்றுவழிகளைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் இருக்கும்வரை, அந்த இடத்தைக் கடவுள்தான் ஆக்கிரமித்திருப்பார்.

நாத்திகத் தீவிரவாதம்

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கணேசன் எழுதிய ‘திமுகவின் இலட்சிய வரலாறு’ புத்தகத்தில் அண்ணா கடவுள் மறுப்புக் கொள்கையைக் கைவிட்டதற்கான காரணத்தை இப்படி விளக்கியிருக்கிறார்: ‘நாத்திகக் கொள்கை தீவிரவாதக் கொள்கை. தனிமனிதன் தன் வாழ்வில் தீவிரவாதியாக இருக்கலாம். ஆனால், அதையே பொதுக் கொள்கையாக்க முடியாது. அப்படி ஆக்கினால், நாலு தீவிரவாதிகளைக் கொண்ட கட்சியாக இருக்க முடியுமே தவிர, பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக உருப்பெற முடியாது.’ ‘தீவிரவாதம்’ என்ற சொல்லைத் தற்போதுள்ள ‘பயங்கரவாதம்’ என்ற பொருளில் எல்.கணேசன் பயன்படுத்தவில்லை; அதீதப் போக்கு என்ற பொருளிலேயே பயன்படுத்தியுள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

திராவிட இயக்கத்தின் திசைவழியை மாற்றியவர் பெரியார். அவரால் திராவிட இயக்கம் பலம்பெற்றிருக்கிறது. எனினும், அவர் மட்டுமே திராவிட இயக்கம் அல்ல. நட்பு முரண்பாடுகளும் அங்கு உண்டு. அதேபோல, பெரியாரைத் திராவிட இயக்கத்துக்குள்ளேயே சிறைப்படுத்திவிடவும் முடியாது. கடவுள் மறுப்பையும் பிராமணிய எதிர்ப்பையும் தாண்டி, தன்னுடைய பகுத்தறிவுச் சிந்தனைகளால் உலகளாவிய சிந்தனையாளராய் நிற்பவர் அவர். பெரியார் முன்னிறுத்திய கடவுள் மறுப்புக் கொள்கையோ, தேர்தல் பாதையைத் தவிர்த்த அரசியலோ எல்லோருக்கும் பொதுவானதும் அல்ல. ஒரு தரப்பினர் மட்டுமே அவரை முழுவதுமாகப் பின்பற்ற முடியும். அவர்களிலும் ஒரு பகுதியினரே, அவரை அடிபிறழாது தொடர முடியும்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x