Published : 08 Feb 2016 09:32 AM
Last Updated : 08 Feb 2016 09:32 AM

தலைவா... நீ தெய்வம்!

நேரு - காந்தி குடும்பம் மட்டுமே காங்கிரஸ் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தியது தவறு



மதம், அரசியல், கலை என அத்தனையிலும் அநேகங்களை ஆராதிக்கும் தேசத்தைச் சேர்ந்தவர்கள் நாம். இனக் குழுக்களின் நாயகர்கள், குறுநிலத் தலைவர்கள் இப்படித் தனித்துவமான பல அம்சங்களைக் கொண்ட சமூகம் நம்முடையது. நம்மைச் சுற்றிலும் அநேக கடவுளர்களையும் கடவுளாக உயர்த்திப் பிடிப்பவர்களையும் வைத்திருக்கப் பிரியப்படுபவர்கள் நாம். இத்தகைய இந்திய உளவியலைத்தான் ஒட்டுமொத்த இந்தியாவே பிரதிபலிக்கிறது. இதற்குச் சிறந்த உதாரணம், இந்திய நாட்காட்டி. பண்டிகை நாட்களைப் போல அல்லவா அவை பல தலைவர்களின் இறப்பையும் பிறப்பையும் சிவப்பு வண்ணத்தில் சுட்டிக்காட்டுகின்றன!

பல தசாப்தங்களாக அக்டோபர் 31 என்றாலே தேசியவாதிகளுக்கு சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாள்தான் நினைவுக்கு வரும். காந்தியடிகள் உட்பட சக தேச விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரால் வாழ்த்தப்பட்டவர் அவர். அதிலும் 1946 முதல் 1949 வரை படேல் துணைப் பிரதமராகப் பதவிவகித்தபோது டெல்லியில் அவருடைய பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சாமந்திப் பூக்களும், நண்பர்கள், தொண்டர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் வாழ்த்துரைகளும் அவரை அலங்கரித்தன. ஆனால், 1950-ல் படேல் மரணமடைந்த பிறகு நாளேட்டிலிருந்து அவர் மறைந்துபோனார். அடுத்த மாதத்தில் வந்த ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14 அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.

காங்கிரஸின் கடவுள்கள்

இது நவம்பர் 14 என்ற ஒரு தினத்தோடு நின்றுவிடவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் காந்தி மற்றும் நேருவின் உருவச் சிலைகள் மளமளவென இந்தியா முழுவதும் நிறுவப்பட்டன. அவர்களின் மீது வைத்திருந்த பெருமதிப்பு காரணமாகத் தொடங்கிய இந்தப் போக்கு, நாளடைவில் ஒரு பகட்டாக மாறிப் போனது. இதனால் முச்சாலை சந்திப்புகளிலும், தெரு முனைகளிலும், சிறு மண்டபங்களிலும், மொட்டை வெயிலில் தூசு தும்பைச் சேகரித்துக்கொண்டு போக்கு வரத்தை மரித்துக்கொண்டும் நின்றன காந்தி மற்றும் நேருவின் உருவச் சிலைகள். வீதிகளுக்கும், நகர்ப் புறங்களுக்கும், குடியிருப்புக் காலனிகளுக்கும், நிறுவனங் களுக்கும் அவர்களுடைய நாமம் சூட்டப்பட்டன. இருவரின் விருப்பத்துக்கு மாறாக அவர்கள் அரசியல் கடவுளர்களாக மாற்றப்பட்டார்கள். அவர்களுடைய பிம்பம் தூக்கிப்பிடிக்கப்பட்டன. இந்தியாவின் எந்த முனைக்குச் சென்றாலும், இவர்களுடைய உருவச் சிலைகளைத் தரிசிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தப் போக்கை நீண்டகால மாக ஒருவரும் கண்டிக்கவில்லை. ஆனால், 1970-களின் மத்தியில் காங்கிரஸின் கடவுளர்களுக்கு முதன்முறையாக எதிர்ப்புக் கிளம்பியது.

எதிர் கலாச்சாரத்தின் பிறப்பு

காங்கிரஸை ஆராதிக்கும் போக்குக்கு எந்த ஆண்டில், எந்தத் தேதியில் சவால் விடப்பட்டது என்பதை யாரும் துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், இந்திரா காந்தியின் அடக்குமுறையும் எதேச்சதிகாரத்தில் அவர் 1975-ல் அமல்படுத்திய நெருக்கடிநிலையும் எதிர்ப்புக்காக விதைகளைத் தூவின. படேலின் நூற்றாண்டு பிறந்த நாளும் அதே ஆண்டில் வந்தபோதும் ‘இந்திராதான் இந்தியா/ இந்தியாதான் இந்திரா’ எனும் அலை அதை மூடிமறைத்துவிட்டது.

இதன் விளைவாக ஒரு புதிய எதிர்ப்பு அலை உரு வானது. பகத் சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் மகிமை அடையாளம் காணப்பட்டன. இத்தகைய எதிர் கலாச்சாரம் எழ நிச்சயமாக அரசியல் காரணங்கள் இருந்தன. வரலாற்றுத் தவறைத் திருத்திக்கொள்ளவும், போதாமையைப் பூர்த்திசெய்வதற்குமான முயற்சி அது.

பழிவாங்கும் எதிர் கலாச்சாரம்

ஆனால், சமீபகாலமாக நம்முன் நிறுத்தப்படும் எதிர் கலாச்சாரப் பிம்பங்கள் யாவும் பழிவாங்கும் செயல்களே! கடந்த காலத் தவறுகளைத் திருத்த முயற்சிக்காமல் எல்லா வற்றையும் ஸ்தம்பிக்க வைக்கும் செயல்திட்டம்தான் நடந்தேறுகிறது. திடீரென படேல் விஸ்வரூபம் எடுத் திருக்கிறார். அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்னும் முனைப்பைவிடவும் நேரு மீதான அபிமானத்தை அழித்தொழிக்க வேண்டும் என்பதுதான் இதற்கான அடிப்படை நோக்கம். படேல் மட்டுமல்லாமல் நேதாஜி, அம்பேத்கர், லால் பகதூர் சாஸ்திரி, நரசிம்ம ராவ், ஜெயபிரகாஷ் நாராயண் உள்ளிட்ட பல தலைவர்களை இன்று தூக்கிப்பிடிக்கின்றனர் இந்துத்துவவாதிகள். அவர்களுடைய ஒரே குறிக் கோள் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வது மட்டுமே. நேரு காலத்துக்குப் பின்னர் காங்கிரஸினால் கைவிடப்பட்ட தலைவர்களை இந்துத்துவம் போலித்தனமாகத் தூக்கிப்பிடிப்பதைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். அதே சமயம், காங்கிரஸ் ஒரு கசப்பான உண்மையை ஏற்க வேண்டும். படேலை அநியாயமாக அவர்கள் கைவிடவேதானே இந்துத்துவம் அவரைத் தத்தெடுத்துக்கொண்டது. அடுத்த ஆண்டும் நவம்பர் 14 வரும். தேசத்தின் முதல் பிரதமருக்குச் சம்பிரதாய மரியாதையை மத்திய அரசு செய்துவிடும். ஆனால், காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?

நவம்பர் 14 அன்றோ அல்லது அதனை ஒட்டியோ காங்கிரஸ் தலைவரும் துணைத் தலைவரும் தங்கள் குடும்பத்தைவிடவும் காங்கிரஸ் மூத்தது மற்றும் பெரியது என்பதை அறிவிக்க வேண்டும். வெறும் நேரு - காந்தி குடும்பம் மட்டுமே காங்கிரஸ் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தியது தவறு எனவும் ஒப்புக்கொள்ள வேண்டும். தங்கள் குடும்பத்தைத் தவிரவும் காங்கிரஸ் அல்லாத தலைவர்களும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை அறிவிக்க வேண்டும். இதைச் செய்தாலே அவர்கள் தேசத்துக்கு மிகப் பெரிய சேவை புரிந்ததாக அர்த்தம். ஒரு படி மேலே சென்று நேரு-காந்தி மட்டுமல்ல, எந்த அரசியல்வாதியையும் வழிபடும் மடத்தனத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என அறிவித்தார்களேயானால், அது அவர்கள் வரலாற்றுக்குச் செய்யும் தொண்டாகப் போற்றப்படும்.

மகாத்மாவினால் ஆதாயம்

ஐந்து, பத்து, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என அத்தனை இந்திய நாணயங்களிலும் மகாத்மா காந்தியடிகளின் உருவப்படத்தை அச்சிடத் தொடங்கியதற்குக் காரணம், அவர் மீதான அபரிமிதமான பக்தியாக இருக்கலாம். அந்த இடத்தில் மகாத்மாவைத் தவிர, எவரையும் பதிக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை என்பதே நிதர் சனம். ஒருவிதமான ஆதாயத்துக்காகத்தான் மகாத்மாவின் முகம் நாணயத்தின் வெற்றிடத்தில் நிரப்பப்பட்டது. இனியும் மகாத்மாவை இப்படிச் சுரண்ட வேண்டாமே! இனி வரும் காலத்திலாவது கடவுளர்களாக மாற்றப்பட்ட மாமனிதர்களை விடுத்து, இந்தியாவின் அரிய தாவரங்களை, கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் படங்களைப் புதிய நாணயங்களில் அச்சிடலாமே!

அஞ்சல் தலை, நாணயம் ஆகியவற்றை அதிகாரத்தின் அடையாளங்களாகவே அரசு பாவிக்கிறது. ஆகவேதான் அவற்றில் முந்தைய ஆட்சியாளர்களின் நினைவுகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய பதிவை ஏற்படுத்தும் முயற்சி காலந்தோறும் நடந்தேறியிருக்கிறது. அரசுக்கும் அரசு முத்திரைகளுக்கும் இடையில் உள்ள அதிகாரத் தொடர்பைப் புரிந்துகொள்ள ஒருவர் நாணய ஆராய்ச்சியாளராகவோ, அஞ்சல் தலை ஆய்வாளராகவோ அல்லது தொல்பொருள் ஆய்வாளராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. “உலக நாடுகள் அத்தனை யும்விட இந்தியாவில்தான் அரசியலில் நாயக வழிபாடு உச்சத்தில் இருக்கிறது. ஆன்மிகத்தில் மோட்சத்துக்கான வழி பக்தியாக இருக்கலாம். ஆனால், அரசியலில் பக்தியோ அல்லது நாயக வழிபாடோ சர்வாதிகாரத்துக்குத்தான் இட்டுச்செல்லும்” என 29 நவம்பர் 1949-ல் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் சொன்னார். எத்தனை தீர்க்கதரிசனமான வார்த்தைகள் அவை!

- கோபாலகிருஷ்ண காந்தி, வரலாறு மற்றும் அரசியல் பேராசிரியர், அசோகா பல்கலைக்கழகம். ஹரியாணா.

தமிழில்: ம.சுசித்ரா © ‘தி இந்து’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x