Last Updated : 27 Feb, 2016 09:16 AM

 

Published : 27 Feb 2016 09:16 AM
Last Updated : 27 Feb 2016 09:16 AM

ரயில்வே பட்ஜெட்: பயணம் சரிதானா?

ரயில்வே பட்ஜெட்டில் திட்டமிடலே மிகவும் மேம்போக்காக இருக்கிறது



ரயில்வேயின் முக்கியமான வருமானம், பயணிகள் கட்டணமும் சரக்குக் கட்டணமும்தான். அன்றாடச் செலவுகளும் தேய்மான நிதியும் ஓய்வூதிய நிதியும் அதிலிருந்துதான் செய்யப்படுகிறது. மொத்த வருமானத்தில் மொத்தச் செலவை கழித்தால் வருவதே நிகர வருமானம். அது 2015-16 நிதியாண்டில் ரூ.19,897 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2015-16 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரயில்வே தனது லாபத்திலிருந்து பங்கீடாக ரூ.10,000 கோடியைக் கொடுத்துள்ளது. அதற்குப் பிறகு மீதம் இருப்பதுதான் ரயில்வேயின் லாபம் என்கிறார்கள்.

ரயில்வேயின் மொத்த வரவு ரூ.100 என்றால், 2014-15- ல் இது ரூ.92.5. 2015-16 நிதியாண்டில் இது ரூ.90.2. கடந்த நிதியாண்டில் கூடுதல் வருமானம் எதிர்பார்க்கப்பட்டது. அது வரவில்லை. எனவே, செலவில் 4.2% வெட்டி ரூ.5,000 கோடியை மிச்சப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

லாபம் அதிகரிக்கும்

100 ரயில் வண்டிகள் ஓட்டினால் அவற்றில் பயணிகள் வண்டிகள் 65. சரக்கு வண்டிகள் 35. ஆனால், பயணிகள் மூலம் வருமானம் 35%தான். சரக்குகள் மூலம் வருமானம் 65%. இதனால் ரயில்வேக்கு நிகர இழப்பு ரூ. 21,000 கோடி என்று ரயில்வே ஆவணங்கள் சொல்கின்றன.

இப்படிப்பட்ட இழப்பை ஈடுகட்ட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரயில்வேக்கு மானியம் அளிக்கின்றன. இந்திய ரயில்வேக்கு மத்திய அரசு மானியம் அளிப்பதில்லை. எனவே, ரயில்வே தனது கட்டணங்கள் மூலம்தான் இந்த இழப்பை ஈடு செய்கிறது.

இழப்பை ஈடுகட்டுவதற்காகத்தான் கட்டண உயர்வு, அரை டிக்கெட் முறையை ரத்து செய்வது, தட்கல் முறையில் டிக்கெட் எடுப்போருக்கான குறைந்தபட்சக் கட்டணம் அதிகரிப்பு, பயணத்தை ரத்துசெய்வோருக்கான குறைந்தபட்சப் பிடித்தத்தை இரட்டிப்பாக்குவது, கட்டணத்தை மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கும் ரயில்களை விடுவது போன்று பயணிகளிடம் பணத்தைப் பறிக்கும் பாதையில் இந்த் அரசு வேகமாகப் பயணிக்கிறது.

ரயில்வே வருமானம்

பொதுவாக, பட்ஜெட்டின் முக்கிய அம்சம், வளர்ச்சிக்கான முதலீடு. புதிய பாதைகள், அகலப் பாதைகள், இரட்டைப் பாதைகள், மின்சாரமயம், பாதுகாப்புகளை மேம்படுத்துதல், பயணிகளுக்கான வசதிகள் அதிகரிப்பு என எல்லாவற்றுக்கும் முதலீடு தேவை. ரயில்வேயின் வருமானத்திலிருந்து மட்டும் இவ்வளவு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது. எனவே, இதுவரை ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் ரயில்வே வளர்ச்சி செயல்படுத்தப்பட்டது. 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2012 - 2017) ரூ. 7.19 லட்சம் கோடிக்கு ரயில்வே திட்டமிட்டது. ஆனால், மத்திய திட்டக் குழு அதனை 5.19 லட்சம் கோடியாக வெட்டிச் சுருக்கியது. இப்போதோ திட்டக் குழுவே இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. இந்த நிதியை ரயில்வே மூலமாகவும் மத்திய அரசின் ஆதரவாலும் கடன் பத்திரங்களை ரயில்வே வெளியிட்டும் தனியார் பங்களிப்பு மூலமாகவும் திரட்டலாம் என்று திட்டமிடப்பட்டது.

அந்தத் திட்டப்படி 2012-13 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.3.12 லட்சம் கோடி முதலீடு செய்திருக்க வேண்டும். ஆனால், திரட்டப்பட்டது வெறும் ரூ.1.73 லட்சம் கோடிதான்.

இந்தச் சூழலில், ரயில்வே துறைக்கான ஒரு புதிய ஐந்தாண்டுத் திட்டத்தை அமைச்சர் அறிவித்தார். அதில் 2015 முதல் 2019 வரை ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றார்.

இதன்படி, முதல் ஆண்டான 2015-16 நிதியாண்டில் ரூ.8.6 லட்சம் கோடியில் 5-ல் ஒரு பங்கு ரூ. 1.73 லட்சம் கோடிக்குத் திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.1 லட்சம் கோடிக்குத்தான் திட்டமே தீட்டினார். அதிலும் ரூ.59 லட்சம் கோடிதான் பட்ஜெட்டுக்குள்ளேயிருந்து ஒதுக்கப்படும் நிதியில் செலவு செய்யப்படும். மற்றவை பட்ஜெட்டுக்கு வெளியேயிருந்து திரட்டப்பட வேண்டும் என்ற நிலை.

மத்திய அரசின் பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான ஆதரவு நிதியாக ரூ.40,000 கோடியும் ரயில்வேயின் சொந்த நிதி திரட்டல் மூலம் ரூ.17,665 கோடியும் கடன் பத்திரங்கள் மூலம் ரூ.41,000 கோடியும் காப்பீட்டு நிறுவனங்களின் கடன் மூலமும் தனியார் பங்களிப்பு மூலமும் வரும் என்று அமைச்சர் அறிவித்தார்.

ஆனால், வந்தது ரூ.10,600 கோடிதான். மத்திய அரசின் பட்ஜெட் ஆதரவில் ரூ.12,000 கோடியை மத்திய அரசு வெட்டிவிட்டது. ரயில்வே வருமானம் ரூ.5,000 கோடியாகக் குறைக்கப்பட்டது. எனவே, 1 லட்சம் கோடி ரூபாய் திட்டத்துக்கு ரூ.53 ஆயிரம் கோடிதான் நடைமுறையில் கிடைத்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையை மத்திய அரசு தலையிட்டுதான் மாற்ற முடியும். ரயில்வே துறையில் அரசுதான் முதலீடு செய்ய வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. ஆனால், கொடுப்பதாக ஒப்புக்கொண்ட தொகையைக்கூடக் கொடுக்காமல் வெட்டிக் குறைக்கும் மனநிலையில் மத்திய அரசு உள்ளது.

தள்ளாடும் தமிழகத் திட்டங்கள்

இதனால் நாடு முழுவதும் ரயில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் புதிய பாதைகளுக்கு ரூ.6,662 கோடி தேவை. அதற்காக இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது வெறும் ரூ.110 கோடிதான். அகலப் பாதைத் திட்டங்களுக்கு ரூ.2,800 கோடி தேவை. ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ.243 கோடி. மதுரை கன்னியாகுமரி இரட்டைப் பாதைத் திட்டங்கள் உட்பட, அகலப் பாதைத் திட்டங்களுக்குத் தேவை ரூ.5,000 கோடி. ஆனால், போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. மதுரை - மணியாச்சி தூத்துக்குடி இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கு ரூ.670 கோடிதான் ஒதுக்க்கப்பட்டுள்ளது. தேவைக்கும் ஒதுக்கீட்டுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. போதுமான நிதி ஒதுக்கப்படாதவரை தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்கள் நிறைவேறப்போவது இல்லை. அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் 2016-17- ம் நிதியாண்டுக்கு ரூ.1.21 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் எனச் சொல்லியிருக்கிறார். அந்த முழுத் தொகையும் எந்தெந்த வழிகளில் வரும் என்று பட்ஜெட்டில் வெளிப்படையாகச் சொல்லவில்லை. மீண்டும், போன ஆண்டில் சொன்னதைப் போலவே மத்திய அரசின் பட்ஜெட் ஆதரவு ரூ. 40,000 கோடிகள் என்கிறார். போன ஆண்டு தர வேண்டிய ரூ.40,000 கோடிகளிலேயே இன்னமும் ரூ.12,000 கோடியை மத்திய அரசு தராத நிலையில், இந்த வருடம் அமைச்சர் எதிர்பார்க்கிற ரூ.40,000 கோடியையும் மொத்தமாக மத்திய அரசு தரும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? எனவே, ரயில்வே பட்ஜெட்டில் திட்டமிடலே மிகவும் மேம்போக்காக இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

மத்திய அரசு தனியார் மய மோகத்தைக் கைவிட்டு விட்டு அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளைப் போல் ரயில்வே துறைக்குத் தேவையான நிதியை முதலீடு செய்து, அதனைச் சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம்தான் ரயில்வே துறையில் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும்.

- ஆர்.இளங்கோவன் செயல்தலைவர், தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்,

தொடர்புக்கு: elangavandreu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x