Published : 26 Feb 2016 09:07 AM
Last Updated : 26 Feb 2016 09:07 AM

அது அந்தக் காலம்!

தகுதியே இல்லாதவரைத் தலைவர் என்றும் ஒழுக்கம் இல்லாதவரை உத்தமர் என்றும் அழைப்பது அரசியல் மேடை நாகரிகம் என்றாகிவிட்டது. சொந்தக் கட்சிக்காரர்களை நாற்காலி போட்டு அமரவைத்துவிட்டுப் பரப்புரை செய்கிறார்கள் இப்போதைய கூட்டங்களில். அப்போதெல்லாம் திரைப்படத்துக்கு அடுத்த பொழுதுபோக்காக அரசியல் மேடைகள் இருந்தன. விடலைப் பையன்களாக இருந்தாலும் மாலை 7 மணிக்கே பொதுக்கூட்ட மேடைகளை மொய்த்து, முதல் வரிசையில் அமர்ந்து, சூடு பறக்கும் பேச்சுகளைக் கேட்டு மெய்மறந்திருக்கிறோம். அரசியல் ஆர்வம் அப்படித்தான் தொற்றியது.

திரைப்படங்களில் சோ பேசிய அரசியல் நெடி வீசும் வசனங்களாலும், தினமணி கதிரில் அவர் எழுதிய ‘மை டியர் பிரம்மதேவா’ கடிதங்களாலும் அரசியல் ஞானஸ் நானம் பெற்றேன்.

பிறந்தது ராணிப்பேட்டையில் என்றாலும், பழைய வடார்க்காட்டில் பல ஊர்களில் வசித்தோம். குடியாத்தத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடக்கும் குளக்கரைக்குப் பக்கத்திலேயே வீடு. ஓரிடத்தில் பெருங்கூட்டமாகப் பெரியவர்கள் நின்றிருந்தார்கள். 5 வயதுச் சிறுவன் என்பதால், கால்களுக்கிடையில் நுழைந்து உள்ளே பார்த்தேன். ‘மாடு மாடு மாடு, அதைப் போடு போடு போடு’ என்று ‘மாமா மாமா மாமா- ஏமா ஏமா ஏமா’ மெட்டில் பானையைத் தம்பிடிக் காலணாவால் தட்டிக்கொண்டே ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். சுற்றியிருந்தவர்கள் ரசித்துச் சிரித்தனர். அவ்வப்போது கருப்பு, சிவப்புத் துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார். திமுக ஆதரவாளரான அவர், காங்கிரஸ் கட்சியின் சின்னமான இரட்டைக் காளையைப் போட்டுத்தள்ளச் சொல்கிறார் என்பது புரியவில்லை. வீட்டுக்கு வந்து அதைச் சொன்னேன். ‘அங்கல்லாம் ஏன் போனே, உனக்கென்ன ஊர் வம்பு?’ என்று வைதார்கள்.

காமராஜர் அண்ணாச்சி

1967 பொதுத் தேர்தல் சமயத்தில் ஆர்க்காட்டுக்குக் குடிபெயர்ந்தோம். வேலூர் டர்னிங் என்ற இடத்தில் சுவரில் எலும்பும் தோலுமான ஏழையின் வயிற்றில் இருந்து ஒரு காங்கிரஸ்காரர் (வட இந்திய சேட்டு போலத் தோற்றம்) மீட்டர் கணக்கில் குடலை உருவிப்போட்டு, ‘உனக்கு ஏன் பசிக்கிறது, இதை எடுத்துவிட்டால் சரியாகிவிடும்’ என்பார். அப்போது அரிசி பற்றாக்குறை. ரேஷனில் மக்கள் கால்கடுக்க நின்றதால் காங்கிரஸ் மீது வெறுப்பு வந்தது. அதைத் திறமையாகப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். தெருவில் என் வயதையொத்த சிறுவர்கள் கையில் திமுக கொடி ஏந்தி, ‘காமராஜர் அண்ணாச்சி, காபி விலை என்னாச்சி?’, ‘பக்தவத்சலம் அண்ணாச்சி, பருப்பு விலை என்னாச்சி?’ என்று கோஷம் போட்டுச் செல்வார்கள். ‘கத்தரிக்காய் கடலைப் பருப்பு கூட்டு, காமராஜரை உள்ள தள்ளிப் பூட்டு’ என்ற கொள்கை முழக்கங்களும் உண்டு! ‘ஒரு ரூபாய்க்கு 3 படி லட்சியம், ஒரு படி நிச்சயம்’ என்று அண்ணா வாக்குறுதி தந்தார். ஒரு படி என்பது பட்டணம் படி, அதாவது 2 லிட்டர்.

காமராஜரைப் பற்றி துக்ளக்கில் சோ எழுதியது, தினமணி கதிரில் சாவி எழுதியதையெல்லாம் படித்துவிட்டு, குடித்தனக்கார மாமாவிடம் பேசியபோது, காங்கிரஸ் கட்சியின் சிறப்பைச் சொல்லி, ‘எல்லாம் நாசமாயிண்டிருக்கு’ என்று வருத்தப்படுவார்.

1971 பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ், திமுக கூட்டணி. திருவண்ணாமலையில் ப.உ. சண்முகத்தை (திமுக) எதிர்த்து தியாகி அண்ணாமலைப் பிள்ளையை காமராஜர் நிறுத்தியிருந்தார். ப.உ.ச. எங்கள் பள்ளியின் பழைய மாணவர், கவர்ச்சியாக இருப்பார். தியாகியைப் பார்த்தாலோ பரிதாபமாக இருக்கும். 2 கட்சிகளின் கூட்டங்களுக்கும் செல்வோம். திமுக கூட்டங்களுக்கு நாற்காலி, மேஜை எல்லாம் பக்கத்தில் உள்ள திமுக தொண்டர்களுடைய வீடுகளிலிருந்து வரும். திமுக கூட்டங்களுக்கு நிறையப் பேர் வருவார்கள். டியூப்லைட்டுகள் அதிகம் இருக்கும். கூட்டம் தொடங்க 2 மணி நேரத்துக்கு முன்னாலேயே நாகூர் ஹனீபா பாடல்களைப் போடுவார்கள். ‘எங்கே சென்றாய், எங்கே சென்றாய்…’ என்று அண்ணாவைப் பற்றி பாடிய பாடல் போடுவது குறைந்து, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே…’ அதிகமாகியிருந்த நேரம்.

கழகத்தின் கிளைக் கழகச் செயலாளர்கூட தொண் டையை அடைத்துக்கொண்டோ, கரகரத்துக் கொண்டோ அண்ணா, கலைஞர் பாணியில் பேசுவார்கள். தமிழில் ‘க'வுக்கு ‘க' போட்டும் எதுகை மோனையுடனும் பேச்சு நடை இருக்கும். ‘நமது ஆருயிர் அண்ணன் ஆங்காங்கே தேர்தல் பொதுக்கூட்டங்களில் பேசிக்கொண்டிருப்பதால் வரத் தாமதம் ஆகிறது, வந்துகொண்டிருக்கிறார்’ என்று அரை மணிக்கு ஒரு முறை கூட்டம் கலையாமல் பார்த்துக்கொள்வார்கள்.

காங்கிரஸ் மேடைகளில் காய்கறிக் கடையில் நடக்கும் உரையாடல் போலவும் பங்காளியிடம் சண்டை போடுவதைப் போலவும் பேசுவார்கள். ‘3 படி அரிசி போடுவேன்னு சொன்னியே போட்டியா, இம்பாலா கார்ல போறதும் கல்வெட்டு திறக்கறதும்தான் நடக்குது; மக்களை யாராவது பாக்கறாங்களா?’ என்று பரிதாபமாகக் கேட்பார்கள். காங்கிரஸ்காரர்கள் கோவையாகவோ, மக்களை ஈர்க்கும்படியாகவோ நகைச்சுவையாகவோ பேச மாட்டார்கள். சென்னையிலிருந்து வரும் டி.என். அனந்தநாயகி, விநாயக மூர்த்தி, சின்ன அண்ணாமலை போன்றவர்கள் மட்டுமே விதிவிலக்கு.

சிவாஜியின் உருக்கம்

காங்கிரஸ் கட்சிப் பிரச்சாரத்துக்கு சிவாஜி வந்தார். காவி கலரில் வேட்டி, சட்டை. சபரிமலைக்குப் போக மாலை போட்டிருந்தார். சினிமாவில் கடைசி சீனில் அடி வாங்கிய பிறகு உருக்கமாகப் பேசுவதைப் போலத்தான் மேடையிலும் பேசினார். இன்னொரு கூட்டத்தில் காமராஜர் நள்ளிரவு 1 மணிக்கு மேல் வந்தார். கோயிலுக்குப் பக்கத்தில் பாத்திரக் கடைத் தெருவில் கூட்டம். அவரைப் பார்த்ததும் கூட்டம் எழுந்து மேடை நோக்கி முண்டியடித்துச் சென்றது. கூட்டத்துக்கு ஏற்பாடுகள் சரியில்லை என்று மேடையிலேயே கடிந்துகொண்டார் காமராஜர். ‘காங்கிரஸ் இருந்தபோது உங்களுக்குத் தேவையானதைச் செய்தது, இப்போ நடக்கிற ஆட்சியை நீங்க பாக்கறீங்கல்ல, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்க’ என்று தனிக் குடித்தனம் போன மகனுக்கு அளவோடு அட்வைஸ் செய்யும் அப்பாவைப் போலப் பேசினார்.

கருணாநிதியின் பிரவசனம்

“திருவருணை என்ற இந்த ஊரின் தலபுராணத்தை உங்களுக்கு நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன். சிவனுடைய அடியையும் முடியையும் காண விஷ்ணுவும் பிரம்மாவும் பன்றியாகவும் அன்னப்பட்சியாகவும் வடிவெடுத்துச் சென்றார்கள். நெடு நேரம் சென்றும் காண முடியவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவைப் பார்த்த பிரம்ம தேவன், நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டார். சிவனின் தலையிலிருந்து என்று தாழம்பூ பதில் சொன்னது. உடனே பிரம்மன், சிவனிடம் சென்று முடியைக் கண்டுவிட்டேன் என்றார். எப்படி என்று சிவன் கேட்டார், இதோ உங்கள் தலையிலிருந்த தாழம்பூ என்று காட்டினார். பொய் சொன்னதற்காக உனக்கு பூலோகத்தில் கோயிலே இல்லாமல் போகக் கடவது என்று சபித்துவிட்டு, இனி தாழம்பூவைச் சூடுவதில்லை என்று சூளுரைத்தார். காமராஜர், பிரம்ம தேவனைப் போல சோஷ லிசத்தைக் கண்டுவிட்டதாகக் கூறுகிறார். அவருக்குத் தமிழ்நாட்டில் தொகுதிகளே இல்லாமல் செய்யுங்கள் என்பதையே என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன்” என்று பேசினார் முதல்வர் கருணாநிதி. ஆன்மிகவாதிகள்கூட உள்ளுக்குள் பொருமிக்கொண்டே ‘என்ன சமத்காரமாகப் பேசுகிறார் பார்’ என்று கருணாநிதியைப் பாராட்டினார்கள். அந்தத் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் தோற்றது.

காமராஜரின் பக்தர்களான என் போன்ற சிறுவர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமும் தாங்க முடியாமலிருந்தது. எங்களுடைய வீட்டில் குடியிருந்த பெரியவர்கள் இதைக் கவனித்துவிட்டு, ‘படிக்கிற பசங்களுக்கு எதுக்குடா அரசியல், படிச்சு முன்னுக்கு வர்றதைப் பாருங்க, கருணாநிதியோ காமராஜரோ உங்களுக்குக் கஞ்சி ஊத்தப் போறதில்லை’ என்று கண்டித்தார்கள்.

ஜனதா வெற்றி

அதற்குப் பிறகு தேர்தலில் ஆர்வம் ஏற்பட்டது 1977-ல். நெருக்கடி நிலை விலக்கப்பட்டு நடந்த அத்தேர் தலில் வட மாநிலங்களில் ஜனதா அலையால் ஆட்சி மாறியது. இந்திரா காங்கிரஸ் படுதோல்வி கண்டது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு சேலம் செகண்ட் அக்ரகாரம் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில் அருகில் நன்றி அறிவுப்புப் பொதுக்கூட்டம். திமுக, மார்க்சிஸ்ட் தலைவர்கள் பேசினர். காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்து நின்ற வலது கம்யூனிஸ்ட் கட்சியை மார்க்சிஸ்ட் தலைவர் அர்த்தனாரி வாத்தியார், உமி தின்ற நாய் என்று உவமைப் படுத்தியபோது கூட்டத்தில் எழுந்த சிரிப்பலை அடங்கப் பல நிமிடங்கள் ஆனது. முதுகலைப் பட்ட வகுப்பில் இருந்தபோது ஜனதா கட்சி உடைந்து பிறகு ஆட்சியையும் இழந்தபோது காமராஜரை நினைத்துக்கொண்டு அழுதேன். ஒவ்வொரு தேர்தலிலும் மிகுந்த நம்பிக்கையோடு ஒருவரை ஆதரித்துப் பிறகு ஏமாறும் கோடிக்கணக்கான வாக்காளர்களில் நானும் ஒருவன்.

கண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா, கருகத் திருவுளமோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x