Last Updated : 25 Dec, 2015 09:33 AM

 

Published : 25 Dec 2015 09:33 AM
Last Updated : 25 Dec 2015 09:33 AM

கடைக்கோடி மக்களுக்கும் கரம் கொடுத்த ‘தி இந்து’ நிவாரண உதவிகள்

‘தி இந்து’ முன்னெடுத்த மழை வெள்ள நிவாரண உதவிக்கு ஏராளமான ஈர இதயங்கள் எண்ணற்ற பொருட்களை அள்ளிக் கொடுத்தனர். இரண்டு வார காலத்துக்கும் மேல் நடைபெற்ற நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் தன்னார்வமாய் பல நூறு இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இணைந்து நின்று செயல் பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது வீடுகளுக்கே தேடிச்சென்று, அவர்களின் கைகளில் நிவாரணப் பொருட்களை தன்னார்வலர்கள் வழங்கினார்கள். வெள்ள பாதிப்பின் துயரத்தில் இருந்து மீள வழி தெரியாமல், எவ்வித உதவிகளும் கிடைக்காமல், தொடர்பு ஏதுமின்றி நின்ற பல்லாயிரம் கடைக்கோடி மக்களைத் தேடிச்சென்று ‘தி இந்து’ நிவாரணப் பொருட்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதிலும்,குறிப்பாக இருளர் சமுதாயத்தினர், மாற்றுத் திறனா ளிகள், திருநங்கைகள், வீடற்று தெருவோரங்களில் வசிப்பவர்கள் என தேடித்தேடி ‘தி இந்து’ அளித்த நிவாரண உதவிகள் நிச்சயம் அவர்கள் மேலெழுந்து வர கைகொடுப்பதாக அமைந்தது.

நோய்நாடி நோய் முதல்நாடி…

மழை வெள்ளத் தாக்குதலில் இருந்து மீண்டு, இப்போதுதான் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம் பித்திருக்கிறார்கள் மக்கள்.

வெள்ளத்தால் எங்கு பார்த்தாலும் பரவிக் கிடக்கும் குப்பைகளாலும், தேங்கி நிற்கும் கழிவு நீராலும் தொற்றுநோய் பரவிவிடுமோ என்ற அச்சம் மக்களிடத்தில் இருந்தது. அதில் இருந்தும் மக்களை காக்கும் முயற்சியில் களமிறங்கியது ‘தி இந்து’.

மழை வெள்ளத்தாலும், சுதாதாரச் சீர்கேட்டாலும் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் மக்களைக் காக்கும் வகையில் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. காலத்தே செய்ய வேண்டிய இந்த அரும் பணியில் நந்தலாலா மருத்துவ சேவை அமைப்பும் இணைந்து களமிறங்கியது.

சென்னையின் 59-வது வார்டைச் சேர்ந்த சத்தியவாணி முத்து நகரின் சமுதாய கூடத்தில் நேற்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 350-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பயன்பெற்றனர்.

மருத்துவர்கள் ராஜீ, விஜயலெட்சுமி, பானு, ராம.தேனப்பன், பிரவீண்ராஜ், யஷ்வந்த் ஆகியோர் இலவச முகாமில் பங்கேற்று சிறப்புச் சிகிச்சையளித்தனர்.

நந்தலாலா அமைப்பைச் சேர்ந்த விக் ஐயர், கிருஷ்ணன், வெங்கட்ராமன் உள்ளிட்ட பலரும் இந்த மருத்துவ முகாமின் பல்வேறு பணிகளை இணைந்து மேற்கொண்டனர். இதயம், நுரையீரல், தோல், கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

மருத்துவ முகாம்

நந்தலாலா மருத்துவ சேவை அமைப்பின் அறங்காவலர் ஜெ.வி.சுகுமார் நம்மிடம் கூறியதாவது:

“நந்தலாலா மருத்துவ சேவை அமைப்பின் நிறுவனர் ஆர்.ஸரஸ்வதி அவர்களின் முன்முயற்சியில் இந்த இலவச மருத்துவ முகாம்களை சென்னையிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் நடத்தி வருகிறோம். தற்போது ‘தி இந்து’வோடு இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்துவதில் மிகுந்த மனநிறைவு அடைகிறோம். இந்த மருத்துவ முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாகவே மருந்துகள் வழங்கப்படுகின்றன. மேலும், பங்கேற்ற அனைவருக்கும் தலா 5 ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகளையும் வழங்கி வருகின்றோம் என்று அவர் கூறினார்.

சென்னை விரைந்து மீண்டெழு வதற்கான பல்வேறு பணிகளில் ‘தி இந்து’வும் மக்களோடு சேர்ந்தே தன் பயணத்தைத் தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x