Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

முதல்வர் 4: வைஸ்ராய்கள் காலத்தில்தான் வாழ்கிறோமா?

முதல்வரும் பிரதமரைப் போல அமைச்சரவையின் தலைவர் என்ற அடிப்படையில்தான் அதிகாரங்களைப் பெறுகிறார். ஒன்றிய அமைச்சரவையின் ஆலோசனைகளின்படியே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும் என்று கூறுகிறது அரசமைப்புச் சட்டத்தின் கூறு 74. மாநிலத்தில் ஆளுநருக்கு ஆலோசனைகள் சொல்வதற்காக ஒரு அமைச்சரவை இருக்க வேண்டும் என்கிறது கூறு 163. ஆனால், ஆளுநர் தனது விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் விஷயங்களில், அமைச்சரவையின் கருத்துகளை அவர் கேட்க வேண்டியதில்லை. எந்தவொரு விஷயமும் தனது விருப்புரிமை அதிகாரத்தின் அடிப்படையில் முடிவெடுக்கத் தக்கதா இல்லையா என்பதையும்கூட ஆளுநர்தான் முடிவெடுப்பார்.

இத்தகைய சிறப்பு அதிகாரங்களின்படி ஒரு ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் அமைச்சரவையைக் கட்டுப்படுத்த முடியும் எனில், இது எப்படி ஜனநாயகமாகும்? இன்னும் நாம் காலனியாட்சி நடத்திய வைஸ்ராய்கள் காலத்தில்தான் வாழ்கிறோமா? 1920-லேயே மொழிவாரி மாநிலங்களின் தன்னாட்சிக்காகத் தீர்மானங்களை நிறைவேற்றியது காங்கிரஸ் கட்சி. ஆனால், காலனியாதிக்க நோக்கிலான 1935-ம் ஆண்டு அரசுச் சட்டத்தையே புதிய அரசமைப்புக்குள்ளும் தக்கவைத்துக்கொண்டுவிட்டது. அச்சட்டத்தின்படி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிரதிநிதிகளாகவே மாகாண ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். சுதந்திர இந்தியாவில் ஆளுநரின் அதிகாரங்களையும் மாநிலச் சட்டமன்றத்தையும் பற்றிய அரசமைப்புச் சட்டக் கூறுகள் அரசமைப்புச் சட்ட அவையில் விரிவான விவாதங்கள் இன்றி ஜூன் 1, 1949 அன்று ஒரே நாளில் வேகவேகமாக நிறைவேற்றப்பட்டன என்பதை வரலாறு என்றென்றும் சொல்லிக்கொண்டுதான் இருக்கும்.

ஒன்றிய அரசின் முகவர்

மாநில முதல்வரும் பிரதமரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். குடியரசுத் தலைவரும்கூட மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்ல. 35 வயது பூர்த்தியான எந்தவொரு இந்தியக் குடிநபரும் ஆளுநராக நியமிக்கப்படலாம். வரம்பற்ற அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று அவரும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்கு வாய்ப்பில்லை. அவரது பதவிக் காலம் வரையறுக்கப்படவில்லை என்பதோடு, குடியரசுத் தலைவரின் விருப்பப்படியே அது தீர்மானிக்கப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அவர் திரும்ப அழைத்துக்கொள்ளப்படலாம். ஐந்தாண்டு காலப் பதவி என்பது பெயரளவுக்கு மட்டுமே. எனவே, ஆளுநரின் அதிகாரங்கள் என்பது அடிப்படையில் ஒன்றிய அரசின் அதிகாரங்கள்தான். நாம் தேர்ந்தெடுத்து அனுப்புகிற சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் கூடித் தேர்ந்தெடுக்கிற ஒரு முதல்வரையும் அவர் தலைமையிலான அமைச்சரவையையும், ஒன்றிய அரசு தனது முகவரைக் கொண்டு முழுக் கட்டுப்பாட்டில் வைக்கவே முயல்கிறது.

முதல்வரைத் தேர்ந்தெடுக்கிற அதிகாரம் சட்டப்படி ஆளுநரிடம்தான் இருக்கிறது. சட்டமன்றத்தில் ஒரு கட்சியோ அல்லது தேர்தலுக்கு முந்தைய கூட்டணியோ பெரும்பான்மையைப் பெற்றிருந்தால், ஆளுநருக்குத் தனது விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்த வாய்ப்பில்லை. பெரும்பான்மை பெற்றுள்ள கட்சி அல்லது கூட்டணியின் முடிவைத்தான் அவர் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆனால், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபோது ஆளுநர் தனது விருப்புரிமையின்படி முடிவெடுக்க முடியும். 2017-ல் கோவாவிலும் மணிப்பூரிலும் சட்டமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியைத் தவிர்த்துவிட்டு அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார்கள் ஆளுநர்கள். கோவா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, ஆளுநரின் தன்விருப்புரிமையில் தலையிடாத நீதிமன்றம் பெரும்பான்மையை நிரூபிப்பது ஒன்று மட்டுமே தீர்வு என்று கருத்து தெரிவித்தது.

கேரள விவகாரம்

முதல்வரைத் தேர்ந்தெடுக்க மட்டுமல்ல, அவரிடம் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லவும், அவரது தலைமையிலான ஆட்சியை நீக்கவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தைக் கலைக்கவும், குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைக்கவும் ஆளுநர் அதிகாரங்களைப் பெற்றிருக்கிறார். ஒன்றிய அரசுடன் தொடர்புடைய எந்தவொரு பிரச்சினையிலும் மாநில அரசு ஆளுநருக்குத் தகவல் அளிக்க வேண்டியது அவசியமானதாக இருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததைப் பற்றி தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று வெளிப்படையாகவே கண்டித்தார் ஆளுநர். உடனடியாகத் தலைமைச் செயலாளர் அவரைச் சந்தித்து, விதிகளை மீறும் நோக்கம் எதுவும் இல்லை என்று விளக்கம் தர வேண்டியிருந்தது. அப்போதும் அவருக்குத் திருப்தியில்லை. இத்தகைய நடைமுறை சட்டவிரோதமானது, இது குறித்த எந்த விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை, இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்றெல்லாம் அவர் தனது கோபத்தைப் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே வெளிப்படுத்தினார். ஆளுநரின் இத்தகைய போக்கை எதிர்க் கட்சியான காங்கிரஸ் மட்டுமல்ல, பாஜகவைச் சேர்ந்த ஒரே ஒரு பாஜக உறுப்பினரும் கண்டித்தார்.

அடுத்த சில நாட்களிலேயே, கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த பகுதியை வாசித்தபோது, முதல்வரின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் விதத்திலேயே அதை வாசிப்பதாகவும் தனக்கு அதில் உடன்பாடில்லை என்றும் பொறுப்புத் துறப்பு கூறினார் ஆளுநர். ஆட்சி மாற்றத்துக்குப் பின்பான முதலாவது சட்டமன்றக் கூட்டத் தொடரும் ஆண்டின் முதலாவது சட்டமன்றக் கூட்டத் தொடரும் ஆளுநர் உரையோடு தொடங்க வேண்டும் என்பது மரபு. ஆளுநரின் உரையை அமைச்சரவை தயாரிப்பதும் மரபுவழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

வங்கத்தில் உரசல்

1969-ல் வங்க மாநிலத்தில் இதற்கு மாறான மற்றொரு நிகழ்வு. சிபிஐ(மார்க்ஸிஸ்ட்) தலைமையிலான ஐக்கிய முன்னணியின் ஆட்சி கலைக்கப்பட்டு, மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலிலும் அக்கூட்டணியே வெற்றிபெற்றது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் நடந்த முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில் சில பகுதிகளை அவர் படிக்க மறுத்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தூக்கியெறியப்பட்டு, சிறுபான்மையினரின் அரசு அமர்த்தப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் அந்தப் பகுதிகள் அமைந்திருந்ததுதான் காரணம். கூட்டத் தொடரின் நிறைவில், அமைச்சரவை தயாரித்த உரையில் ஆளுநர் சில பகுதிகளை வாசிக்கவில்லை என்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநரின் பத்திரிகையாளர் சந்திப்புகள், மாநில அரசிடம் அவர் விளக்கங்கள் கேட்பது, ஆளுநர் உரை தொடர்பான முரண்பாடுகள் ஆகியவை தமிழகத்துக்குப் புதிதல்ல. 90-களின் தொடக்கத்தில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் இன்றும் அதற்காகவே நினைவுகூரப்படுகிறது. அண்ணாவும் கருணாநிதியும் ஆளுநரின் தலையீடுகளை ஒன்றிய அரசின் பிரதிநிதி என்ற அடிப்படையில் எதிர்த்தனர் என்றால் ஜெயலலிதா அதைத் தனிப்பட்ட பகையாகவே அடையாளப்படுத்திக்கொண்டார். அவரது ஆட்சியில், ஆளுநரின் உரை இல்லாமலேயே ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்தது. ஆளுநர் கலந்துகொள்ளும் விழாக்களை அமைச்சர்கள் புறக்கணித்தனர். சென்னை சேத்துப்பட்டு ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தனக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை என்று ஆளுநர் சென்னா ரெட்டிதான் அந்த யுத்தத்தைத் தொடங்கிவைத்தார். அரசியல் ஆளுமைகளுக்கு இடையிலான பனிப்போராக அது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது என்றாலும், மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கும் தமிழக முதல்வருக்கும் இடையில் சுமுகமான உறவில்லை என்பதுதான் முக்கிய காரணம்.

சென்னா ரெட்டி – ஜெயலலிதா மோதல்

இடைத்தேர்தல் காலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலாளரிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர் சென்னா ரெட்டி. சென்னைப் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தர் பதவிக்கான பரிந்துரைப் பட்டியலை நிராகரிக்கவும் செய்தார். மாநில அரசோ, முதல்வரையே வேந்தராக நியமிக்கும் சட்ட வரைவுக்குத் தயாரானது. அடுத்தடுத்த ஆண்டுகளில் குடியரசு தினத் தேநீர் விருந்துகளைக்கூடப் புறக்கணித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார் ஜெயலலிதா. ஆளுநரைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கையும் வைத்தார்.

ஆளுநர் தன்னிடம் நயமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக முதல்வர் சொன்ன குற்றச்சாட்டு, கட்சித் தொண்டர்களைக் கொந்தளிக்க வைத்தது. ஆளுநரின் வாகனம் திண்டிவனத்தில் சிறைபிடிக்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே, பொருத்தமான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என்று எச்சரித்துவந்தார் சென்னா ரெட்டி. சொன்னதுபோலவே டான்சி வழக்கில் முதல்வர் மீது வழக்கு தொடர அவர் அனுமதியளித்தார். ஆனால், 1996 குடியரசு தின விழாவில் ஆளுநரை முதல்வர் வரவேற்றுப் பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நெருங்கிவந்த தேர்தலும், மாநிலத்தின் நிதிநிலையும் அதற்கான காரணங்கள்.

இன்றும்கூட ஆளுநர்கள் மாநில அரசிடம் சற்றே மென்மையாக நடந்துகொள்கிறார்கள் என்றால், அது நாடாளுமன்ற மரபுகளைப் பின்பற்றும் அடிப்படையிலானதாக இருக்கிறதேயொழிய, அரசமைப்புச் சட்டத்தின் வகைமுறைகளால் அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய பெரும்பான்மையைப் பின்பற்றி, குடியரசுத் தலைவருக்கு எதிராகப் பதவிவிலக்கத் தீர்மானத்தையும்கூட நிறைவேற்ற முடியும். மாநில அரசுக்கு அப்படியொரு வாய்ப்பை அரசமைப்புச் சட்டம் வழங்கவே இல்லை. ஒரு ஆளுநர் தனது எதேச்சாதிகாரத்தின்படி மாநில நலன்களுக்கு எதிராக நடந்துகொண்டார் என்றால், அவருக்கு எதிராக மாநில முதல்வர் பிரதமரிடமோ குடியரசுத் தலைவரிடமோ தனிப்பட்ட முறையில் புகார் கொடுக்கலாமேயொழிய, எதிர்ப்பைச் சட்டரீதியாகக் காட்டுவதற்கு வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. ஆந்திரப் பிரதேச முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரி விஷயத்தில் நடந்ததுபோல வீடியோ காட்சிகளோ அல்லது தொலைபேசி உரையாடல் பதிவுகளோ மட்டும்தான் மாநில அரசுகளின் மாற்று அஸ்திரம்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x