Last Updated : 29 Dec, 2015 09:06 AM

 

Published : 29 Dec 2015 09:06 AM
Last Updated : 29 Dec 2015 09:06 AM

ஊனமாக்கப்பட்டுவரும் ஊராட்சிகள்

இந்திய கிராமங்கள் எப்போதுமே கூறுபோட்ட பல பிரிவுகளாகவும், அதிலும் தலித் மக்களை காலனிகளில் ஒதுக்கிவைத்த அமைப்புகளாகவுமே இருக்கின்றன. ஆகையால், கிராமங்களுக்கு அதிகாரம் அளிப்பது என்கிற கனவும் நடைமுறையில் ஆதிக்க சாதிகளைப் பலப்படுத்தும் போக்கிலேயே கலந்தது.

அரசமைப்புச் சட்டம் வருவதற்கு முன்பு அவ்வமைப்புகள் ஜில்லா போர்டுகளாகவும், அதன் பிரதிநிதிகள் நிலப்பிரபுக்களாகவும் இருந்தனர். ஊர் கணக்குகளைக் கவனிக்கும் மணியக்காரர் பதவிகளும் வாரிசு அடிப்படையிலேயே அமைந்தன. சட்டமன்றங்களையும், நாடாளுமன்றங்களையும் பற்றித் தெளிவாக வரையிட்ட அரசமைப்புச் சட்டம், உள்ளாட்சிகள் மற்றும் கிராம நிர்வாகம் பற்றிய சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை மாநிலச் சட்ட மன்றங்களுக்கே வழங்கியது. ஊராட்சிச் சட்டம் முதன்முறையாக தமிழ்நாட்டில் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில், 1958-ல்தான் கொண்டுவரப்பட்டது. எனினும், அங்கீகார பங்கீட்டைப் பரவலாக்காத அச்சட்டம் மறுபடியும் கிராம ஆதிக்க சக்திகள் பலப்படவே வழிவகுத்தது.

ஊராட்சிகளின் வருவாய் ஆதாரங்கள் மிகவும் சொற்பமானது. கிராம நிர்வாகம் மூன்றாகப் பிரிவுபட்டிருந்தது. கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய்த் துறையின் கீழும், கிராம சேவகர்கள் (ஊர் நல அலுவலர்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சிகளின் துறையின் கீழும், சுகாதார ஊழியர்கள் சுகாதாரத் துறையின் கீழும், ஆசிரியர்கள் கல்வித் துறையின் கீழும் பணியாற்றினர். வெவ்வேறு அதிகார மட்டங்களின் கீழ் பணியாற்றிய ஊழியர்களால் கிராம வளர்ச்சி மீது அக்கறையற்றுப் போனது. பலமான ஊழியரமைப்புகள் ஊராட்சிகளுக்கான அதிகாரப்பரவலை எதிர்த்தன.

1958-ம் வருட தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பலமுறை திருத்தப்பட்டது. மாநில அரசுகள் பல்வேறு வழிகளில் வேட்பாளர்களது தகுதியிழப்பு நடவடிக்கைகளையே மேற்கொண்டன. வெள்ளையர் ஆட்சியிலிருந்த பல மூடநம்பிக்கைகளும் தகுதியிழப்புகளாக அறிவிக்கப்பட்டன. உதாரணமாக, தொழுநோயாளி ஒருவர் ஊராட்சிகளில் பதவி வகிக்க முடியாது என்ற சட்டப்பிரிவு இன்றும் பல மாநிலங்களில் உள்ளன. 2008-ல் ஒடிஷா மாநில நகராட்சியொன்றில் போட்டியிட்ட வேட்பாளர் தீரேந்திர பந்துவா தொழுநோயாளி என்ற காரணத்தால் தகுதியிழப்பு செய்யப்பட்டார். தகுதியிழப்புப் பிரிவை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு 2008-ல் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஊராட்சிகளில் ஊதியம் பெறும் ஊழியர்கள் அவ்வமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளை வகிக்க முடியாது என்று கூறுவதிலாவது ஓரளவுக்கு அர்த்தம் உண்டு. தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் ஒன்றின்படி மத்திய, மாநில அரசு ஊழியர்களும், அவ்வரசுகள் ஏற்படுத்திய பொதுத் துறை நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களும் ஊராட்சித் தேர்தல்களில் நிற்பது தடை செய்யப்பட்டது. நெய்வேலி மற்றும் பாரத மிகுமின் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் நிறுவனங்களே அமைத்த நகரியங்களில் வசிக்க வேண்டியிருந்தது. பெரும்பான்மையான ஊழியர்கள் நகரியங்களில் வசித்தாலும் அவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் வாக்களிக்கலாமேயொழிய, பதவிகளுக்கு போட்டியிட முடியாதென்பது அர்த்தமற்ற செயல். பெரும்பான்மையான வாக்காளர்களைத் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்த சட்டத் திருத்தங்கள் ஊராட்சிகளின் ஜனநாயகத்தன்மையையே கேள்விக்குட்படுத்தின. இப்படிப்பட்ட மக்கள் விரோத சட்டத்திருத்தங்களை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களால் தள்ளுபடிசெய்யப்பட்டது வேதனைக்குரியது.

ஊராட்சித் தேர்தலில் நிற்கும் உரிமையானது சட்டத்தின் அடிப்படையால் அளிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளின் ஆதாரப்படி தேர்தலில் நிற்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்று நீதிமன்றங்கள் கூற ஆரம்பித்ததே இதற்கான முக்கியக் காரணம். ராஜீவ் காந்தி பிரதமரானபோது கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத்திருத்தம் (1992, 73 மற்றும் 74-வது) ஊராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக அங்கீகாரம் வழங்கியது. அகில இந்திய ரீதியில் பட்டியலின மற்றும் தொல்குடியினருக்கும், பெண்களுக்கும் இவ்வமைப்புகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வமைப்புகளின் அதிகார வரையறைகள் 11 மற்றும் 12-வது அட்டவணைகளில் கூறப்பட்டன. இன்றுவரை ஊழியர் அமைப்புகளின் எதிர்ப்பினால் அதிகாரம் பரவலாக்கப்படவில்லை. ஆரம்பப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாடு ஊராட்சிகளின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. தமிழ்நாட்டில் 1994-ல் இயற்றப்பட்ட புதிய ஊராட்சி சட்டத்தின் நிலைமையும் இதுவே.

தலித் பிரதிநிதிகளின் நிலை

அரசமைப்புச் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்ற பின்னரும் ஊராட்சிகள் அதிகாரப்பரவலாக்கப்பட்ட அமைப்புகளாக எழுச்சி பெறவில்லை. பட்டியலின மக்கள் தேர்தலில் நிற்பதற்கு தடைச் சுவர்கள் எழுப்பினர். வேட்பாளர்கள் கொலை செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலவளவு, நாட்டார்மங்கலம், பாப்பாபட்டி, கீரிப்பட்டி கிராமங்களின் தேர்தல்களில் 20 வருடங்கள் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இன்னும் பல கிராமங்களில் தலித் ஊராட்சிப் பிரதிநிதிகள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். ஆதிக்க சாதிகளின் தூண்டுதல்களின்பேரில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள், மாவட்ட ஆட்சியரின் பதவி நீக்கும் அதிகாரங்கள் மூலம் ஊராட்சி அமைப்புகள் கேலிக்குரியவை ஆக்கப்படுகின்றன.

அரியானாவில் 1994-ல் கொண்டுவரப்பட்ட ஊராட்சிகள் சட்டத்தில் விசித்திரமான சில சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 2002-ம் வருடம் கொண்டுவரப்பட்ட புதிய ஊராட்சிகள் சட்டத்தில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் தகுதியிழப்பு செய்யப்பட்டனர். இதன் மூலம் அரியானாவில் பல குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் தேர்தலில் நிற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் 2003-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி பெண்களுக்கு சமூகத்தில் எந்தவிதப் பங்குமில்லாதபோது அவர்களைப் பழிவாங்கும் செயலென்று கூறப்பட்ட வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதேபோன்ற ஊராட்சி சட்டங்கள் ஆந்திரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஒடிஷாவிலும் நடைமுறையில் உள்ளன.

விசித்திரமான விதிகள்

அரியானா ஊராட்சிச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தங்களின் மூலம் மேலும் தகுதியிழப்புக் காரணங்கள் சில சேர்க்கப்பட்டன. பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள், கூட்டுறவுக் சங்கம் மற்றும் மின்சார வாரியத்திடம் சேவைக்கட்டணம் செலுத்தாதவர்கள் அனைவரும் தேர்தல்களில் நிற்க தடை செய்யப்பட்டது. உச்சகட்டமாக, ‘செயல்படும் கழிப்பறை’ வீட்டில் வைத்திருக்காதவர்களும் தேர்தலில் நிற்க முடியாதென்று அரியானா அரசு கூறிவிட்டது.

இந்தியாவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் 22-வது வரிசையிலுள்ள அரியானா மாநிலம் இப்படிப்பட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது கேலிக்குரியது. அம்மாநிலத்தில் ஓரளவு கல்வியறிவு பெற்றோர் 76% மட்டுமே உள்ளனர். அதிலும் பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டும் கணக்கிலிட்டால் 59% பேர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். இப்புதிய சட்டத்திருத்தத்தின்படி அம்மாநிலத்தில் 1.65 கோடி வாக்களிப்பவர்களில் 54 லட்சம் பேர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். அதிலும் பெண்களும், பட்டியலின மக்களும்தான் அதிக விழுக்காட்டில் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளனர். பட்டியலின மக்களில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர்கள் உள்ளாட்சி உறுப்பினராக (பாஞ்ச்) மட்டுமே ஆக முடியும். தலைவர்களாக (சர்பாஞ்ச்) ஆகமுடியாது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது பொதுவெளியில் மீண்டும் ஊராட்சிகள் பற்றிய விவாதத்தை துவக்கி வைத்துள்ளது.

கல்வி ஒரு தகுதியா?

தமிழ்நாட்டில் கடந்த 70 வருடங்களில் ஆண்ட ஆறு முதல்வர்கள் கல்வி நிலையங்களில் முறையாகப் பயிலாதவர்கள். அவர்கள் நிர்வாகத்தை ஆளவில்லையா என்ன? 1954 முதல் 1962 வரை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காமராஜர் ஆரம்பப் பள்ளியில் மட்டுமே பயின்றவர். அவர் ஆட்சியைத்தானே இன்றைக்கும் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று கொண்டாடுகிறோம்! இங்கே சுட்டிக்காட்ட வேண்டிய இன்னொரு விஷயம், உள்ளாட்சி உறுப்பினர்களுக்குக் கல்வித்தகுதி நிர்ணயிக்கும் அரசுகள் ஏன் இன்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கல்வித்தகுதி நிர்ணயிக்க முற்படுவதில்லை என்பது!

குடியரசுத் தலைவருக்கான தகுதி!

அரசமைப்பு சட்டத்தில் மிகக்குறைந்த தகுதி விதிக்கப்பட்டுள்ள பதவி மாநிலத்தின் ஆளுநர் பதவிதான். 35 வயது கடந்த எந்த இந்தியக் குடிமகனையும் ஆளுநராக நியமிக்க முடியும். குடியரசுத் தலைவராகவும் அதே தகுதிகள்தான் கூறப்பட்டுள்ளன. மேலும், குடியரசுத் தலைவர் நல்ல புத்தி சுவாதீனத்துடனும், திவாலாகாதவராக இருக்க வேண்டுமென்றும் கூடுதலாக இரண்டு நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. இன்று பலரும் இப்பதவிகளுக்கு கல்வித்தகுதிகள் வேண்டுமென்று கூறினாலும் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை அறியாதவர்களாகவே இருப்பர்.

அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்களிலுள்ள மேலவைகளுக்கு பட்டதாரி தொகுதிகளிலிருந்து சிலர் தேர்ந்தெடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்தொகுதியில் வாக்காளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பட்டதாரி தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் பட்டதாரியாக இருக்க வேண்டுமென்பது கட்டாயமில்லையென்று 1972-ல் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. வாக்காளர்களுக்குள்ள தகுதி நிர்ணயிப்பு வேட்பாளர்களுக்குப் பொருந்தாதென்று கூறிய அத்தீர்ப்பு இன்னும் விசித்திரமானது.

இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் இன்றைக்கு பாஜக அரசுகள் சில தங்கள் மாநிலங்களை ஊராட்சி சட்டங்களின் சோதனைச் சாலைகளாக மாற்றியுள்ளன. பெரும்பான்மையான மக்கள் மேற்கூரையின்றி வாழும் இந்நாட்டில் ‘செயல்படும் கழிப்பறை’ வைத்திருப்பவர் மட்டுமே ஊராட்சித் தேர்தலில் நிற்கலாமென்று நிர்ணயிப்பது மீண்டும் பழைய ஜில்லா போர்டுகள் போல சொத்து வைத்திருப்பவர்கள் மட்டுமே தலைவர்களாகலாம் என்று சொல்வதற்கு இணையானது. இதே வார்த்தைகள் மின் கட்டணம் செலுத்தாதவர்களைத் தகுதியிழப்பு செய்வதற்கும் பொருந்தும்.

இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் ஊராட்சித் தேர்தலில் நிற்பதும், வாக்களிப்பதும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையுரிமை என்று நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளாமையின் விளைவே!

- கே. சந்துரு, மேனாள் நீதிபதி,

சென்னை உயர்நீதிமன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x