Published : 17 Dec 2015 10:34 AM
Last Updated : 17 Dec 2015 10:34 AM

நிமிடக் கட்டுரை: கொண்டாட்டங்களைக் கைவிட வேண்டுமா, ஏன்?

2004 டிசம்பர் 26 அன்று தமிழகத்தை சுனாமி தாக்கியது. பேரவலத்தின் துயரமும் பேரழிவு குறித்த அச்சமும் எங்கும் குடிகொண்டிருந்த நாட்கள் அவை. சில தினங்களுக்குப் பிறகு, புத்தாண்டு இரவு வந்தது. சென்னை நகரம் ஆழ்ந்த மவுனத்திலும் இருளிலும் ஆழ்ந்திருந்தது. அதனுடைய இறுக்கத்தையும் சுமையையும் தாங்க முடியாமல் தத்தளித்தேன்.

அதை உடைத்துக்கொண்டு வெளியேற வேண்டும்போல இருந்தது. நெருங்கிய சில நண்பர்களை அழைத்தேன். கேக், உணவு வகைகளை ஏற்பாடு செய்தேன். மெழுகுவத்திகளை ஏற்றிவைத்தோம். புத்தாண்டு பிறந்த கணத்தில் ஒருவரையொருவர் தழுவி வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டோம். இதிலிருந்து நாம் மீண்டெழுவோம் என்று கண்ணீருடன் ஒருவரை யொருவர் வாழ்த்தினோம்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மாதிரியான ஒரு மனநிலையில் நின்றுகொண்டிருக்கிறேன். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்துசெய்யப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. சென்னையின் மிகப் பெரிய கலாச்சார நிகழ்வான புத்தகக் காட்சி தள்ளிவைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இவையெல்லாம் வேறெப்போதையும்விட மக்களுக்கு இப்போதுதான் அதிகம் தேவைப்படுவதாக நினைக்கிறேன். பிரார்த்தனைகளும் புத்தகங்களும் சந்திப்புகளும் ஆரத் தழுவிக்கொள்ளுதலும் இப்போதுதான் மிகமிகத் தேவையாக இருக்கிறது.

கொண்டாட்டங்களை ரத்துசெய்வதால் இழப்பு களைச் சந்தித்த மக்களுக்கு என்ன கிடைத்துவிடும்? அப்படி ரத்துசெய்தால்தான் அந்த மக்களோடு நாம் நிற்கிறோம் என்ற அர்த்தமா? இந்தப் பேரழிவு நடந்த சமயத்தில் நாம் கையாலாகாத, செயல்படாத சமூகமாக இருந்திருந்தால் நம் குற்றவுணர்வைத் தணித்துக்கொள்வதற்காகக் கொண்டாட்டங்களைக் கைவிடுவதாகச் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால், எல்லாத் தரப்பினரும் துயருற்ற மக்களுக்காகக் களத்தில் நின்றார்கள்.

ஒருவர் கரங்களை மற்றவர்கள் இறுக்கமாகப் பற்றிக்கொண்டார்கள். இந்த நகரம் தனது பேரன்பின் மூலமாகப் பேரழிவிலிருந்து மீண்டுவரும் காட்சியைத் தேசமே வியந்து பார்த்தது. நாங்கள் யாரும் யாரையும் கைவிடவும் இல்லை, புறக்கணிக்கவும் இல்லை. எனவே, எங்களுக்கு எந்தக் கொண்டாட்டம் தொடர்பாகவும் குற்றவுணர்வு அடைய வேண்டிய அவசியம் இல்லை. கொண்டாட்டங்களை ரத்துசெய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுப்பது என்கிற பேச்சில் எல்லாம் அதிகம் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. கொண்டாட்டங்களில் செலவழியும் பணம் என்பது மழைத் துளியைப் போன்றது. அவற்றை ஒன்றுதிரட்டி ஒரு இடத்துக்குக் கொண்டுசெல்வதற்கான எந்த வழிமுறையும் நம்மிடம் கிடையாது. பிறகு ஏன் நாம் இதுபோன்ற யோசனைகளை முன்வைக்க வேண்டும்?

புத்தாண்டு இரவில் நாம் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் தெருக்களுக்குச் செல்வோம். அவர்களுடன் பேசுவோம். அவர்களோடு இனிப்புகளைப் பரிமாறிக்கொள்வோம். புத்தாண்டை வரவேற்கும் பாடலைப் பாடுவோம். இதிலிருந்தெல்லாம் விடுபட்டு நாம் ஒரு புதிய காலத்தில் நுழைவோம் என்கிற நம்பிக்கையை அவர்களிடம் விதைப்போம். தண்ணீரின் கோரதாண்டவத்தின் நினைவுகள் குழந்தைகளின் மனதில் இருந்து இன்னும் மறையவில்லை. அவர்கள் கண்களில் அச்சம் ஆழமாகப் படிந்திருக்கிறது. புத்தாண்டு இரவில் தண்ணீர் நமக்கு தெய்வம் என்கிற செய்தியை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்!

- மனுஷ்ய புத்திரன், கவிஞர்,
அரசியல் விமர்சகர், உயிர்மை ஆசிரியர்.

தொடர்புக்கு: manushyaputhiran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x