Last Updated : 10 Nov, 2015 10:22 AM

 

Published : 10 Nov 2015 10:22 AM
Last Updated : 10 Nov 2015 10:22 AM

பிஹார் ஓட்டுக் கணக்கு

மகா கூட்டணியின் மூன்று கட்சிகளும் மிகச் சிறப்பாகச் செயல் பட்டது அக்கூட்டணியின் பிரம்மாண்டமான வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்டி யிட்டன. அவற்றில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 71 இடங்களிலும் வென்றிருக்கின்றன. 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 27 இடங்களில் வென்றிருக்கிறது. பிஹாரில் இதற்கு முன்பு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் நான்கே இடங்களை வென்ற காங்கிரஸுக்கு இது மிகப் பெரிய முன்னேற்றம்தான்.

ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தீவிர ஆதரவாளர்கள், கூட்டணிக் கட்சிக ளுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனும் கருத்தும் இந்தத் தேர்தலின் மூலம் தகர்க்கப்பட்டிருக்கிறது. கட்சிகளுக்கு இடையே வாக்குகள் வெற்றிகரமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டது, மகா கூட்டணிக்குப் பெரும் வெற்றியைத் தந்திருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்றதற்குக் கூட்டணிக் கட்சிகள் காரணம் அல்ல. அக்கட்சியின் மோசமான செயல்பாடுகள்தான். 160 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி 53 இடங்களில்தான் வென்றிருக்கிறது. அதாவது, 24.4% வாக்குகள்தான் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கின்றன. மக்களவைத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு விகிதத்தை விட (29.86%) இம்முறை, 5.46% வாக்குகள் குறைந்திருக்கின்றன. மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நடந்திருக்கும் ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவின் வாக்கு விகிதம் குறைந்துவந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிக இடங்களை வென்றிருப்பது ராஷ்ட்ரிய ஜனதா தளம். இரண்டாவது இடத்தில் ஐக்கிய ஜனதா தளம் என்ற நிலையில், பாஜகவுக்குக் கிடைத்திருப்பது மூன்றாவது இடம்தான். பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் மோசமாகத் தோற்றிருக்கின்றன. 40 இடங்களில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி, இரண்டே இடங்களில்தான் வென்றிருக்கிறது. இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி 20 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் வென்றிருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை மிக மோசமான தோல்வி உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சிக்குத்தான். 23 இடங்களில் இரண்டே தொகுதிகளில்தான் அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குள் வாக்குகளைப் பகிர்ந்துகொள்வதில் தோல்வியடைந்தன.

ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் ஜித்தன் ராம் மாஞ்சி என்று இரண்டு தலித் தலைவர்கள் கூட்டணியில் இருந்தாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலித்துகளின் வாக்குகள் கிடைக்கவில்லை. தலித் கட்சிகளுக்குள் ஒத்துழைப்பு இன்மை மற்றும் பரஸ்பர விமர்சனங்கள் ஆகியவை தலித் வாக்காளர்களை அதிருப்தியில் ஆழ்த்தின.

ஐந்து வாரங்கள் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் தாக்க மும் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருந்தது. ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், முதலில் நன்றாக விளையாடத் தொடங்கும் அணி, ஒரு கட்டத்தில் தடுமாறத் தொடங்கி, தொடர்ந்து தவறுகளைச் செய்து இறுதியில் தோல்வியைத் தழுவுவதுபோல், தேர்தல் பிரச்சாரத்தின் ஒவ்வொரு வாரமும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவை இழந்துவந்தது. அதேசமயம், மகா கூட்டணிக்கு ஆதரவு பெருகிவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x