Published : 08 Nov 2015 11:51 AM
Last Updated : 08 Nov 2015 11:51 AM
சாதிச்சோம்ல!
மொத்தம் 65,000 வாக்குச் சாவடிகள். ஆனால், இரண்டே சாவடிகளில்தான் மறுதேர்தல் நடத்தப்பட்டது. இது ஒரு சாதனை என்றார் தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா. பிஹாரில் நிச்சயம் இது ஒரு சாதனைதான்!
சாத்தானும் மந்திரவாதியும்!
போகிற இடம் எல்லாம் “என்னையும் ‘சாத்தான்’ என்று சொல்லிவிட்டார் மோடி; எல்லா பிஹாரிகளையும் இழிவுபடுத்தி விட்டார்” என்று பேசிக்கொண்டே போனார் லாலு. சாமியார் ஒருவருடன் நிதிஷ் இருக்கும் படத்தை வெளியிட்டு, “நிதிஷ் மந்திரவாதி” என்று பேசிக் கொண்டே போனது பாஜக.
மாடு அதை நாடு!
நாடு முழுக்க மாடு சர்ச்சை பரவியதன் பின்னணியில் பிஹார் தேர்தலுக்கு முக்கிய இடம் உண்டு. கிராமப்புறப் பொருளாதாரத்தைப் பிரதானமாகக் கொண்ட பிஹார் சமூக வாழ்வில் மாட்டுக்கு முக்கிய இடம் உண்டு. மாட்டிறைச்சி சர்ச்சை தொடர்பாக எங்கும் வாய் திறக்காத மோடி, பிஹாருக்குப் போய் லாலுவையும் நிதிஷையும் இதை வைத்து வலிய வம்புக்கு இழுத்தார். “மாட்டிறைச்சி உண்பதை ஆதரிப்பவர்கள் இந்துக்களைக் கேவலப்படுத்துகிறார்கள்” என்று ஆரம்பித்த இந்த மாட்டு அரசியல், கடைசியில் பாஜக வெளியிட்ட மாடு விளம்பரத்தில் முடிந்தது. “முதல்வர் அவர்களே, இந்தியர்கள் ஒவ்வொருவராலும் வழிபடப்படும் பசுவை உங்கள் தோழர்கள் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். பதில் இல்லையென்றால், ஓட்டு இல்லை” என்றது கடைசி நாள் வாக்குப்பதிவின்போது பாஜக வெளியிட்ட விளம்பரம்!
கிங் மேக்கர் ராகுல்?
காங்கிரஸுக்கும் இந்தத் தேர்தல் முக்கியம். ஒருகாலத்தில் பிஹாரை ஆண்ட கட்சி இப்போது நிதிஷ் கூட்டணியில் வெறும் 41 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. ஆனால், அந்த 41-ல் ஜெயிப்பதே கஷ்டம்தான் எனும் நிலை. “காங்கிரஸுக்கு 41 இடங்கள் கொடுத்ததன் மூலம் மறைமுகமாகத் தேர்தலுக்கு முன்பே எங்களுக்கு 41 இடங்களை ஒதுக்கிவிட்டார் நிதிஷ்” என்று நக்கலடித்தார் மோடி. ஆனால், ஒருவேளை நிதிஷ் ஜெயித்தால் அதில் ராகுலுக்கு முக்கியமான பங்கு உண்டு.
ஜனதா குடும்பத்திலிருந்து முலாயம் சிங் வெளியேறியதுபோலவே, லாலுவும் வெளியேறியிருக்க வேண்டியது. நிதிஷ், லாலு இருவருடனும் பேசிய ராகுல், கூட்டணியிலிருந்து விலகினால் லாலு தனிமைப்பட்டுவிடுவார் என்று எச்சரித்தார். கடுப்புடன் தொகுதிப் பங்கீட்டில் வழிக்கு வந்தார் லாலு. அதனாலேயே ராகுல் பங்கேற்ற கூட்டங்களைத் தவிர்த்தார்!
தேர்தலின் பெரும் குண்டு!
பிஹார் தேர்தலில் இரு கூட்டணிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுக் குண்டுகளை வீசிக்கொண்டன. பெரிய குண்டு பாஜக வீசியதுதான். சுடச்சுட தேர்தல் நடந்துகொண்டிருந்தபோதே, வெளியான பரபர காணொளி ஒன்று நிதிஷ் தரப்புக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. நிதிஷின் அமைச்சர் அவதேஷ் குமார் குஷ்வாஹா, ஒப்பந்ததாரர் ஒருவரிடமிருந்து ரூ. 4 லட்சம் லஞ்சம் பெறுவதான காணொலிக் காட்சிதான் அது. அமைச்சர் இது போலி காணொலி என்றார். ஆனால், நிதிஷ் ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டார். ஆனால், சேதாரம் என்னவோ சேதாரம்தான்!
அம்மோடியோவ்!
தேர்தலுக்காக அமித் ஷா பாட்னாவிலேயே மாதக் கணக்காகக் கிடந்தார். 76 கூட்டங்களில் பேசினார். மத்திய அமைச்சர்கள் குறைந்தது 10 பேர் எப்போதும் பிஹாரில் சுற்றிக்கொண்டிருந்தனர். ராஜ்நாத் சிங் மட்டும் 50 கூட்டங்களில் பேசினார். இதெல்லாம் ஆச்சரியம் அல்ல. பிரதமர் மோடி 31 கூட்டங்களில் பேசினார். ஒரு பிரதமர் மாநிலத் தேர்தல் ஒன்றுக்காக இவ்வளவு பேசியது இங்குதான் இருக்கும் என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார்கள் பாஜகவினர்!
மாப்ள யார்ப்பா?
எல்லாம் சரி, யாரப்பா மாப்பிள்ளை? இதுதான் லாலு கலாய். பாஜக கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பிரச்சாரத்துக்குப் போன இடங்களில் எல்லாம் தாளித்துவிட்டார் லாலு. முதல் இரு கட்ட வாக்குப்பதிவுகள் வரை எல்லா இடங்களிலும் மோடி படங்களை வைத்து பாஜக சமாளித்தது. அப்புறம் என்ன நினைத்தார்களோ, ஆங்காங்கே உள்ளூர் தலைகளை இறக்கிவிட்டுவிட்டார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT