Published : 13 Oct 2015 09:15 AM
Last Updated : 13 Oct 2015 09:15 AM

எழுத்தாளர்கள் எதைத் திருப்பித் தர முடியும்?

மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடுகிறவர்கள், பகுத்தறிவை முன்னிறுத்துகிறவர்கள் வரிசையாக இந்தியாவில் கொலை செய்யப்படுவார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டிருந்தால், அதை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். சாதி-மத மோதல்களில் மனிதர்கள் அழிக்கப்படுகிற தேசம்தான் இது.

ஆனால், அவற்றை எதிர்ப்பதற்கும் பெரும்பான்மைவாதக் கருத்தியல்களோடு முரண்படுவதற்கும் மிகப் பெரிய தத்துவ மரபுகள் வளர்ந்த இந்த தேசத்தில் ஒரு இடம் இருக்கிறது என்று நாம் உறுதியாக நம்பிவந்தோம். வேத மரபு தழைத்தோங்கிய இந்த தேசத்தில்தான் மதத்தை மறுக்கிற சார்வாக மரபும் தழைத்தோங்கியது. செவ்வியல் மரபும் நாட்டார் மரபும் தத்தம் திசைவழிகளில் தம்மை ஸ்தாபித்துக்கொண்ட இடம் இது.

ஆனால், இந்தத் தத்துவ மரபுக்கு எதிராக வேறொரு மத அரசியல் மரபும் இந்த நாட்டில் இருந்திருக்கிறது. அது சமண, பவுத்த மதங்களை ஒழித்து சைவ மதத்தை நிலைநாட்டிய மரபு, நந்தனை எரித்த மரபு, இஸ்லாமிய, ஆங்கில அந்நிய நாட்டுப் படையெடுப்பாளர்கள் இங்கு நடத்திய அரசியல் மற்றும் மதவாத வன்முறைகளின் மரபு. இவை அனைத்தும் அதிகாரத்துக்காக, அரசியலுக்காக, தங்கள் நம்பிக்கைக்குப் புறம்பானவர்களை முற்றாக அழிக்கலாம் எனக் கற்றுத்தந்த மரபு அது.

கலைஞர்கள் - எழுத்தாளர்கள் - ஜனநாயக சக்திகள் இப்போது முரண்படக்கூடிய உரிமையுடன் கூடிய இந்தியத் தத்துவ மரபைச் சார்ந்து நிற்கிறார்கள். மதவாத அரசியல் வேட்கை கொண்ட சக்திகள் பிளவுகள் - அழித்தொழிப்புகளின் வழியே அதிகாரத்தை வேண்டும் தரப்பில் நிற்கிறார்கள். இது ஒரு வரலாற்றுத் தருணம்.

மாற்றுக் குரலுக்கு இடமில்லை

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோர் எதற்காகப் படுகொலை செய்யப்பட்டார்கள்? மாற்றுக் குரல்களுக்கு இனி இங்கே இடமில்லை என்ற தெளிவான எச்சரிக்கையை முன்வைப்பதற்காகவே அந்தக் கொலைகள் நிகழ்த்தப்பட்டன. எம்.எஃப். ஹுசைன் நாட்டை விட்டு வெளியேறி அகதியாக வேறொரு நாட்டில் இறந்தபோதும், ஏ.கே ராமானுஜத்தின் ‘முன்னூறு ராமாயணங்கள்’ கட்டுரை பாடத்திட்டத்தில் இருந்து அகற்றப்பட்டபோதும் வெண்டி டோனிகரின் நூல் திரும்பப் பெறப்பட்டபோதும் நாம் நெருங்கிவரும் அபாயத்தை முழுமையாக உணரவில்லை. பெருமாள்முருகனின் நாவலின் மீது நடத்தப்பட்ட வன்முறை நாடு முழுக்க நடக்கப்போகும் மிகப் பெரிய தாக்குதல்களுக்கான ஒத்திகைகளில் ஒன்று என்பதை நாம் உணரவில்லை.

எம்.எம்.கல்புர்கியின் கொலைக்குப் பின் தேசம் திடுக்கிட்டு விழித்துக்கொண்டது.

பயங்கரமானது மோடியின் மவுனம்

பாஜக.வினர், அவர்களது ஆதரவு அமைப்புகளின் வன்முறைப் பேச்சுகளைவிட பயங்கரமானதாக இருக்கிறது, பிரதமரின் மெளனம். மோடி இந்த விவகாரத்தில் தனக்கு எந்தப் பொறுப்பும் எந்த அதிகாரமும் இல்லாதவர்போல் நடந்துகொள்கிறார். மக்களுக்கு அன்பையும் சகோதரத்துவத்தையும் போதித்துவிட்டு, பசு மாமிச அரசியலை பிஹாரில் யாதவர்களிடம் கொண்டுபோகிறார்.

கல்புர்கியின் கொலையைக் கண்டித்து பிரபல எழுத்தாளர் நயன்தாரா சேகல், தான் பெற்ற சாகித்ய அகாடமி விருதைத் திரும்பக் கொடுத்திருக்கிறார். இதே விஷயத்துக்காக ஏற்கெனவே இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ் தன்னுடைய சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுத்தார். உருதுக் கவிஞர் ரஹ்மான் அப்பாஸும் இந்திக் கவிஞர் அசோக் வாஜ்பாயும் தம் விருதுகளைத் திரும்பக் கொடுத்திருக்கின்றனர். ஆறு கன்னட எழுத்தாளர்களும் சாகித்ய விருதுகளைத் திரும்ப அளித்திருக்கின்றனர். இந்தச் சூழல் இந்தியா இதுவரை காணாத ஒரு காட்சி.

ஜனநாயகத்தைக் காப்பாற்றும் போராட்டம்

சீக்கியப் படுகொலையை எதிர்த்து விருதைத் திருப்பிக் கொடுக்காத நயன்தாரா சேகல் இப்போது திருப்பிக் கொடுப்பது ஏன்? என்று சாதுரியமாகக் கேள்வி எழுப்புகிறார்கள். நயன்தாரா நேரு குடும்பத்தைச் சார்ந்தவர் என்றபோதும் நெருக்கடி நிலையைத் துணிச்சலாக எதிர்த்து நின்றவர். இந்திய மனித உரிமை அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். நாட்டில் எத்தனையோ மதவாத மோதல்கள் நடக்கின்றன. வகுப்புவாதக் கலவரங்

களில் மக்கள் கொல்லப்படுகின்றனர். எழுத்தாளர்களும் சமூகவியலாளர்களும்தான் அரசியல் கடந்து இதற்கு எதிர்வினையாற்றிவந்திருக்கிறார்கள். இப்போதைய சூழல் எதிர்வினையாற்றுகிறவர்களை முற்றாக அழித்தொழிக்கும் சூழல். எதிர்க் குரல்களை மவுனமாக்கும் சூழல். அரசு தன் ஜனநாயகப் பொறுப்புகளை தட்டிக்கழிக்கிறது என்பது மட்டுமல்ல, வன்முறையாளர்களுக்கு அது மறைமுகமாகத் துணை நிற்கும் சூழல். இந்தச் சூழலை எதிர்ப்பது என்பது ஒட்டுமொத்தமான ஜனநாயக அமைப்பையும் அதன் அழிவிலிருந்து காப்பாற்றுகிற போராட்டம்.

இந்தப் போராட்டத்தில் எழுத்தாளருக்குக் கொடுப்பதற்கு இரண்டே இரண்டு விஷயங்கள்தான் இருக்கின்றன. ஒன்று உயிர். மற்றொன்று வாழ்நாள் முழுவதும் உழைத்துப் பெற்ற அங்கீகாரம். இதைக் கொச்சைப்படுத்துகிறவர்கள் இந்தப் போராட்டத்தின் பின்னால் இருக்கக்கூடிய சமூக அரசியல் யதார்த்தம் எதையும் புரிந்துகொள்ளாதவர்கள்.

அறம் தவறிய அரசு

இப்போதைய அரசு மிகத் தெளிவான சித்தாந்த நோக்கங்கள் கொண்ட பாசிச அரசு. இதனோடு உரையாடல்கள் சாத்தியமில்லை. இந்த அரசோடு, கடந்த காலத் தவறுகள் செய்யும் அரசுகளை, அறம் தவறிய அரசுகளை ஒப்பிடக் கூடாது. அந்த அரசுகளை நாம் நிர்ப்பந்திக்க முடியும். இப்போதையை அரசிடம் அது சாத்தியமல்ல. எழுத்தாளர்களின் போராட்டம் இந்தப் பின்புலத்தில்தான் பார்க்கப்பட வேண்டும்.

அதேசமயம், விருதைத் திருப்பிக் கொடுப்பதுதான் ஒரு எழுத்தாளனின் அரசியல் உணர்வுக்கு ஒரு அளவுகோலா என்ற கேள்வியை நாம் எழுப்பிக்கொள்ள வேண்டும். இதுவும் ஒருவகையான நிர்ப்பந்தம்தான். தனது போராட்டத்தின் பாதைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கு ஒரு எழுத்தாளனுக்கு முழுமையான சுதந்திரம் இருக்கிறது. ஆனால், தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் கருத்துரிமை நசுக்கப்படுகிற சமயத்தில், ஜனநாயக உரிமைகள் படுகொலை செய்யப்படுகிற சமயத்தில் எத்தகைய எதிர்வினைகளை ஆற்றியிருக்கிறார்கள்? அதிகாரத்தின் வன்முறைக்கு எதிராக இங்குள்ள சில எழுத்தாளர்கள்தான் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார்கள் என்றபோதும் எந்தச் சமூகப் பிரச்சினையிலும் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்திக்கொள்ளாத எழுத்தாளர்களே அதிகம்.

வன்முறையின் முன் அதிகாரத்தின் மவுனத்தைவிட ஆபத்தானது, சமூகத்தின், வரலாற்றின் மனசாட்சியாக இருக்கும் எழுத்தாளர்களின், கலைஞர்களின் மௌனம். திருப்பிக் கொடுப்பதற்கு விருதுகள் இல்லாமல் இருக்கலாம், அல்லது விருதுகளைத் திருப்பிக் கொடுக்க மனம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த வன்முறைக் கலாச்சாரத்துக்கு எதிராகச் சொல்வதற்குச் சொற்கள் கூடவா இல்லை? நமது உரிமைகளுக்காக யாராவது சில எழுத்தாளர்கள் உயிரைக் கொடுக்கட்டும் என்று விலகி நிற்கும் எழுத்தாளர்களை நோக்கியும் கொலைக் கருவிகள் வருவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.

- மனுஷ்ய புத்திரன்,

கவிஞர், அரசியல் விமர்சகர், உயிர்மை ஆசிரியர்.

தொடர்புக்கு: manushyaputhiran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x