Last Updated : 23 Sep, 2020 03:19 PM

 

Published : 23 Sep 2020 03:19 PM
Last Updated : 23 Sep 2020 03:19 PM

இடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின் வியூகம் வெற்றி பெறுமா?

தேர்தல் களத்தில் தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் எந்த அஸ்திரத்தையும் பயன்படுத்துவார்கள் அரசியல் தலைவர்கள். தற்போது, அவர்களுக்கே வழிகாட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கும் தேர்தல் வியூக நிறுவனங்கள், இதன் அடுத்தகட்டத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்கின்றன.

மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜிக்குப் பரம வைரிகளாக இருக்கும் இடதுசாரிகளை, திரிணமூல் காங்கிரஸுக்கு இழுக்கும் வேலைகளில் பிரசாந்த் கிஷோரின் 'ஐ-பேக்' நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் இதைத்தான் உணர்த்துகின்றன.

சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் பணிகளைப் புகழ்வது, பின்னர் ‘தங்கள் சேவை நாட்டுக்குத் தேவை’ எனும் பாணியில் பேசி, திரிணமூல் காங்கிரஸில் சேர நேரடியாகவே அழைப்பு விடுப்பது என்று வலைவிரிக்கிறார்கள் 'ஐ-பேக்' ஆட்கள்.

பணம், பதவி, இத்யாதி

இடதுசாரித் தலைவர்களை 'ஐ-பேக்' நிறுவனத்தினர் அணுகுவது இப்படித்தான்:

'ஐ-பேக்' நிறுவனத்தின் சார்பாகப் பேசுவதாகக் காட்டிக்கொள்ளாமல், ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில் பேசுவதாகவே பேச்சை ஆரம்பிப்பார்கள். பிற்பாடுதான், இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கே தெரியவரும். அவர்களின் பொருளாதார நிலை குறித்து விசாரிப்பது, திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துவிட்டால் நிறைய பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டுவது என்று அடுத்தடுத்து அஸ்திரங்கள் இறக்கப்படும். கட்சிப் பதவிகள், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, அமைச்சர் பதவிக்கான உத்தரவாதம் என ஆர்வத்தைத் தூண்டும் அனைத்து அஸ்திரங்களும் இதில் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள்.

தேவேஷ் தாஸ், லக்ஷ்மி காந்தா ராய், பனமாலி ராய், மமதா ராய் என 10-க்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலேயே இப்படியான அழைப்புகள் சென்றதாம். இதுவரை முக்கியமான இடதுசாரித் தலைவர்கள் யாரும் கட்சி மாறியதாகத் தெரியவில்லை. ஆனாலும், கடந்த சில மாதங்களில் 300-க்கும் மேற்பட்ட இடதுசாரி உறுப்பினர்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்திருப்பது கவனிக்கத்தக்க விஷயம்.

2014 மக்களவைத் தேர்தலில், மோடி அலைக்கு மத்தியிலும் மேற்கு வங்கத்தில் இரண்டே இரண்டு இடங்களைத்தான் பாஜகவால் கைப்பற்ற முடிந்தது. 2019 மக்களவைத் தேர்தலிலோ 40.3 சதவீத வாக்குகளுடன் 18 இடங்களில் வென்று திரிணமூல் காங்கிரஸாரை அக்கட்சி திகைப்பில் ஆழ்த்தியது. திரிணமூல் காங்கிரஸின் வாக்கு சதவீதம் முந்தைய தேர்தலைவிட 3.5 சதவீதம் அதிகரித்திருந்தாலும், 12 தொகுதிகளை இழந்தது மம்தாவுக்குக் கடும் ஏமாற்றத்தைத் தந்தது.

திரிணமூல் காங்கிரஸின் வளர்ச்சியால் செல்வாக்கை இழந்துவந்த இடதுசாரிகளில் பலர், அந்தத் தேர்தலில் பாஜக பக்கம் சாய்ந்ததும் இந்தப் பின்னடைவுக்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. பாஜகவினருக்கு அமைப்பு ரீதியான பலம் இல்லாத பல இடங்களின் வாக்குச் சாவடிகளில் இடதுசாரித் தொண்டர்களும் ஆதரவாளர்களும் பாஜகவினருக்குத் துணை நின்றனர். இது பாஜகவின் கணிசமான வெற்றிக்கு வழிவகுத்தது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்று மம்தா நினைக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் ‘ஐ-பேக்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட மம்தா, பின்னடைவுகளுக்குக் காரணமான விஷயங்களைச் சரிக்கட்ட வேண்டிய அவசியத்தை பிரசாந்துக்கு உணர்த்தி இருந்தார். மேற்கு வங்கத்தில் படுவேகமாக வளர்ந்துவரும் பாஜகவைத் தடுத்து நிறுத்துவது எனும் புள்ளியில்தான் இருவரும் இணைந்தார்கள்.

பிம்பத்தை மாற்றும் முயற்சி

மத அடிப்படையில் பாஜக ஏற்படுத்தும் அழுத்தம் ஒரு புறம் என்றால், உம்பன் புயல், கரோனா நிவாரணப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகார்கள் மறுபுறம் திரிணமூல் காங்கிரஸுக்குக் கெட்ட பெயரை உருவாக்கியிருக்கின்றன. இது தொடர்பாக, தனது கட்சியினரைப் பகிரங்கமாக எச்சரிக்க வேண்டிய அளவுக்கு மம்தா கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்கிறார்.

கிராமப் பகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ்காரர்களின் அடாவடிப் போக்கும், முறைகேடுகளும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் பாஜக தீவிரம் காட்டுகிறது. இதையடுத்து, நற்பெயர் கொண்ட தலைவர்களைக் கட்சியில் இணைத்துக்கொள்வது இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உதவும் என்று மம்தா தரப்பு கருதுகிறது. பாஜகவுக்குச் செல்வாக்கு அதிகரித்திருக்கும் பகுதிகளில் இந்த அணுகுமுறை கைகொடுக்கும் என்பது பிரசாந்தின் நம்பிக்கை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருந்தாலும், ஊழல் கறைபடியாதவர்கள் எனும் பிம்பம் கொண்ட மார்க்சிஸ்ட் தலைவர்கள் இன்னமும் மக்களின் அபிமானம் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களைத் தங்கள் பக்கம் கொண்டுவருவது பலன் தரும் என்று திரிணமூல் காங்கிரஸ் நம்புகிறது.

பிரசாந்தின் வெற்றி தொடருமா?

2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்குத் துணை புரிந்தததுதான் பிரசாந்த் கிஷோருக்குப் பெயர் வாங்கித்தந்தது. அதன் பின்னர், 2015 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றிக்கு உதவியது, 2017 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைய வழிவகுத்தது, 2019-ல் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் மகத்தான வெற்றிக்கு வியூகம் அமைத்துத் தந்தது, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அரியணையைத் தக்கவைக்க துணை நின்றது என்று பிரசாந்தின் பெயர் சொல்லும்படியான வெற்றிகள் அவருக்கான நற்பெயரைத் தக்கவைத்திருக்கின்றன.

தமிழகத்தில் திமுகவும் அவரது ‘ஐ-பேக்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு பல்வேறு விதத்தில் காய் நகர்த்தி வருகிறது. இணைய வழியில் உறுப்பினர்களைச் சேர்ப்பது வரை திமுகவுக்குப் பல்வேறு வியூகங்களை ‘ஐ-பேக்’ வகுத்துத் தருகிறது.

எனினும், பிரசாந்தின் எல்லா வியூகங்களும் வெற்றியை ஈட்டியதாகச் சொல்ல முடியாது. 2017-ல் காங்கிரஸுக்காக உத்தரப் பிரதேசம், பஞ்சாப் என இரு மாநிலங்களில் ‘ஐ-பேக்’ வேலை செய்தாலும், பஞ்சாபில் மட்டும்தான் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத்தர முடிந்தது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 7 இடங்கள்தான் கிடைத்தன.

தற்போது, இடதுசாரிகளை இழுக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டிருப்பதைத் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலர் ரசிக்கவில்லை. ‘நேர்மையான தலைவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் இதுபோன்ற ஆசை வார்த்தைகளுக்கு மசிந்துவிடுவார்களா?’ என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பிரசாந்தின் ஆலோசனையின் பேரில் கட்சிக்குள் அமைப்பு ரீதியாக மாற்றங்கள் செய்யப்பட்டதும் மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் திமுகவிலும் இதுபோன்ற அதிருப்தி நிலவவே செய்கிறது.

சுதாரித்துக்கொள்ளும் பாஜக

இதற்கிடையே திரிணமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குச் சென்றவரும், ஒருகாலத்தில் மம்தாவின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்பட்டவருமான முகுல் ராய்க்கு பாஜகவில் தகுந்த மரியாதை கிடைக்கவில்லை என்று ஒரு தகவல் பரப்பப்பட்டது. இதன் மூலம் முகுல் ராய்க்கும் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷுக்கும் இடையில் மோதலை உருவாக்கத் திட்டமிடப்படுவதாகவும், இதன் பின்னணியில் பிரசாந்த் இருப்பதாகவும் பாஜக தரப்பு சொல்கிறது.

திரிணமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய பிப்லப் மித்ரா, சமீபத்தில் மீண்டும் தாய்க் கட்சிக்குத் திரும்பியதன் பின்னணியிலும் பிரசாந்த் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாஜக எம்.பி.க்கள் பலர் திரிணமூல் காங்கிரஸுக்குத் தாவலாம் எனும் தகவல் பரவியதை அடுத்து, “அப்படியெல்லாம் இல்லை. எங்கள் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது” என்று பாஜக தலைவர்கள் அவசர அவசரமாக மறுப்பு தெரிவிக்க வேண்டிவந்தது.

பிரசாந்தின் வியூகங்களைப் பிற கட்சிகள் உணர்ந்து சுதாரித்துக்கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் களம் மேலும் பல திருப்பங்களுடன் களை கட்டும் என்பது உறுதி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x