Last Updated : 17 Aug, 2015 09:44 AM

 

Published : 17 Aug 2015 09:44 AM
Last Updated : 17 Aug 2015 09:44 AM

வியத்தகு சென்னை! - ஹாமில்டன் பாலத்தின் கதைகள்

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஹாமில்டன் பாலத்தைப் பற்றிப் பல கதைகள் உண்டு. ‘பார்பர்ஸ் பிரிட்ஜ்’ (Barbar's Bridge) என்றும் அதை அழைப்பர். ஆங்கில அரசின் சில ஆவணங்களிலேயே அது இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஏன் இந்தப் பெயர்?

சென்னையின் கவர்னராக இருந்த லார்ட் ஹாமில்டன் என்பவரின் பெயரில் இது கட்டப்பட்டதாகவும், உள்ளூர் மக்கள் ஹாமில்டன் என்பதை அம்பட்டன் என ஆக்கிவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதுதான் ‘பார்பர்ஸ் பிரிட்ஜ்’ ஆக மொழிமாற்றம் பெற்றது என்பது ஒரு கதை. ஆனால், ஹாமில்டன் என்னும் ஆளுநர் சென்னையில் இருந்ததற்கு எந்தச் சான்றும் இல்லை என்கிறார், சென்னை ஆய்வாளர்களில் முக்கியமானவரான முத்தையா.

இது அடுத்த கதை

ஆங்கிலப் பொறியாளர் ஹாமில்டனிடம் பணிபுரிந்த இந்தியர் ஒருவர், அவரைத் தன் குருவாகவே கருதினாராம். ஹாமில்டன் இறப்பதற்கு முன், தன் குருவான அவரின் நினைவாக அவரிடமிருந்த காம்பஸ் கருவியைக் கேட்டுப்பெற்றாராம். பின்னாளில் அந்த இந்தியரின் மேற்பார்வையில்தான் இந்தப் பாலம் எழுந்ததாம். அதற்குத் தனது குருவின் பெயரை வைக்க வேண்டும் என்ற அவர் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இதைக் குறிப்பிடுபவர் சென்னையின் முன்னோடி ஆய்வாளர்களில் ஒருவரான கர்னல் ஹென்றி டேவிசன் லோ.

சென்னை மயிலாப்பூர் பகுதியையும் ஐஸ் ஹவுஸ் பகுதியையும் நடுவில் ஓடும் கூவம் ஆறு பிரிக்கிறது. இதன் ஒரு பக்கம் படித்த மேல் தட்டு மக்கள். மறு பக்கம் சாமானியர்கள். இந்தப் பாலம் கட்டப்படுவதற்கு முன்பு கூவம் வாய்க்காலின் மயிலாப்பூர் பக்கம் வசித்த வெள்ளையர்கள் இந்த வாய்க்காலின் எதிர்ப் பக்கம் இருந்த திருவல்லிக்கேணி பகுதியிலிருந்து வரும் சவரத் தொழிலாளிகளுக்காகக் காத்திருப்பார்கள்.

அதிகம் தண்ணீர் இல்லாத காலங்களில் இயல்பாக நடந்துவந்த இந்த நிகழ்வு, ஒரு சமயம் ஏற்பட்ட பெருமழையால் பெருகெடுத்தது ஓடிய வெள்ளத்தால் தடைபட்டது. கரையில் வந்து காத்திருந்த ஆங்கிலேயர் ஒருவர் அங்கேயே தூங்கிப்போய்விட்டாராம். வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் நீந்தி வந்த ஒரு சவரத் தொழிலாளி, தன் வாடிக்கையாளரின் தூக்கத்தைக் கெடுக்காமல் தன் கடமையை அலுங்காமல் செய்துவிட்டுத் திரும்பினாராம்.

துயில் கலைந்து எழுந்ததும் இதை உணர்ந்த அந்த ஆங்கிலேயர், அந்த சவரத் தொழிலாளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். அந்தத் தொழிலாளி தனக்கென எதுவும் கேட்கவில்லை. இங்கிருந்து அங்கே வந்துபோக ஒரு பாலம் கட்டித் தருமாறு கேட்டாராம். அப்படிக் கட்டப்பட்ட பாலம் அந்த ஆங்கிலேயரின் பெயரான ஹாமில்டன் என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் சேவை செய்த சவரத் தொழிலாளிக்காக அன்றைய கொச்சை வழக்கில் அம்பட்டன் பாலம் எனத் தமிழிலும் வழங்கப்பட்டதாம். அதன் மொழிபெயர்ப்பாகவே அது பார்பர்ஸ் பிரிட்ஜ் எனவும் அழைக்கப்பட்டதாம். மானுடவியல் ஆய்வாளர் தர்ஸ்டன் இதைக் குறிப்பிடுகிறார்.

இதில் எது உண்மை? அது உங்கள் விருப்பம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x