Published : 14 May 2020 07:20 PM
Last Updated : 14 May 2020 07:20 PM

குடிப்பது ஆணின் உரிமையா?

கரோனா வைரஸ் பரவலையொட்டி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதைத் தங்களுக்கு நேர்ந்த கடும் பாதிப்பாக நினைத்துக் ‘குடிமகன்’கள் வருந்த, அரசோ பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுவிட்டதென்று கலங்கியது. இதன் விளைவாக, சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் இரு தரப்பினர் வயிற்றிலும் பாலை வார்த்தது. குடிமகன்கள் குடித்துக் களிக்க, அரசுக்கோ ஒரே நாளில் 170 கோடிக்கும் மேல் வருமானம் கிடைத்தது.

‘லட்சக்கணக்கான குடும்பங்களின் அமைதியைக் குலைத்துத்தான் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதில்லை; மத்திய அரசிடமிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய வரிப் பணத்தைப் பெறுவதன் மூலமும் பொருளாதார இழப்பைச் சரிசெய்யலாம்’ என்று நினைத்த பலரது எண்ணத்துக்குச் செயல்வடிவம் கொடுக்கும்விதமாக, மதுக்கடைகளைத் திறந்ததற்கு எதிராகப் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட, டாஸ்மாக் மீண்டும் மூடுவிழா கண்டது. இதை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மது வாங்க வரிசையில் நின்ற பெண்களின் படம் ஊடகங்களில் வெளியாகி, பலருக்கும் பதற்றத்தைக் கூட்டியிருக்கிறது. “பெண்கள் குடிக்கலாமா? காலம் கெட்டுப்போய்விட்டது. இவர்கள் எல்லாம் குடும்பப் பெண்களா?” என்கிற ரீதியில் விமர்சனங்களை அள்ளித் தெளித்தனர்.

ணுக்கு நல்லது, பெண்ணுக்குத் தீயதா?

மதுவுடன் இணைத்துப் பேசப்படும் ஒழுக்கவாதமெல்லாம் இங்கே பெண்களுக்கு மட்டுமே. ஆண்கள் குடிப்பதால் போகாத மானம் பெண்கள் மது அருந்துவதால் கப்பலேறிவிடுகிறதா என்ன? மது, ஆணுக்கு நல்லதையும் பெண்ணுக்குத் தீங்கையும் செய்துவிடும் என நம்புவது நகை முரண். குடித்துவிட்டுத் தன்னிலை தவறி சாலையில் விழுந்து கிடக்கும் ஆணைப் பார்த்துப் பதறாதவர்கள், பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்பதைப் பார்த்ததும் ஏன் பதறித் துடிக்கிறார்கள்? அவர்களின் பதற்றத்தைத் தணிக்கும் முனைப்புடன் ‘ஆதியிலே என்ன நடந்தது தெரியுமா? என் மூப்பனும் மூப்பத்தியும் சேர்ந்தே மது அருந்தினர்’ என்று சங்க இலக்கியச் சான்றுகளோடு களம் இறங்குகிறவர்களின் வாதத்தை நாம் புறக்கணிக்க முடியாது.

ஆணும் பெண்ணுமாக மதுவருந்திய பண்பாட்டுப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் ஏன் பெண்கள் குடிப்பதை மட்டும் இவ்வளவு ஆத்திரத்துடன் விமர்சிக்கிறார்கள்? காரணம், மது அருந்துவது ஆணின் செயல்பாடாகவும் ஆண்மையின் வெளிப்பாடாகவும் காலப்போக்கில் வரித்துக்கொள்ளப்பட்டது. ஆணுக்கு மீசை முளைப்பது எவ்வளவு இயல்பானதோ அத்தகைய இயல்பான செயல்பாடாகத்தான் ஆண்கள் குடிப்பதைப் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். குடிப்பதற்காகவும் குடித்த பிறகும் அவர்கள் செய்யும் வன்முறைகள் எல்லாமே ‘இயல்பு’ என்று நியாயப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

f1

குடிக்கும் ஆணைவிடப் பெண் தன்னளவில் உடல், மனப் பாதிப்புக்கு ஆளாகிறாளே தவிர ஆண்கள் அரங்கேற்றும் கீழ்ச்செயல் எதையும் அவர்கள் செய்வதில்லை. எந்தப் பெண்ணும் குடிப்பதற்குக் காசு கேட்டுக் கணவனை அடிப்பதில்லை. வீட்டுச் செலவுக்கும் குழந்தைகளின் படிப்புக்கும் வைத்திருக்கும் பணத்தைத் திருடிக் குடிப்பதில்லை. குடித்துவிட்டுக் கணவனையும் குழந்தைகளையும் அடிப்பதில்லை. கணவனைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவதில்லை. பிற ஆண்களைக் கேலி செய்வது, தீயிட்டுக் கொளுத்துவது, தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது என்று எந்தவிதமான வன்முறைச் செயலிலும் ஈடுபடுவதில்லை. இருந்தும்கூட இந்தச் சமூகம் பெண்ணை நோக்கித்தான் ஒழுக்கக் கணைகளைத் தொடுக்கிறது. வீதிகள்தோறும் கடைகளைத் திறந்துவைத்து ஆணின் குடியைப் போற்றி வளர்க்கும் செயலுக்குத் துணை நிற்கிறது.

குடும்பத்தைச் சிதைப்பது உரிமையா?

ஆண்கள் குடிப்பது தனி மனித உரிமை சார்ந்தது, அதில் எப்படிப் பிறரது தலையீட்டை அனுமதிக்கலாம் என்று சிலர் கேட்பது நியாயமாகத் தோன்றலாம். நம் சமூகத்தில் குடிக்கும் பழக்கம் பொருளாதாரம் - வர்க்கம் சார்ந்தே பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உயர்தர மது விடுதிகளில் உடலுக்கு அதிக பாதிப்பு இல்லாத மதுவைக் குடிக்கிற மேல் வர்க்கத்து ஆட்களுக்கு ஒப்பீட்டளவில் சிக்கல் இல்லை. குடும்பப் பொருளாதாரத்துக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்கள் ஏற்படுத்தும் பாதிப்பும் குறைவே. ஆனால், நடுத்தர, கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையை மது சூறையாடிவிடுகிறது. வீட்டுப் பொருளாதாரம் அழிவதுடன் பெண்களும் குழந்தைகளும் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தரமற்ற மதுவைக் குடிப்பதால் உடல் - மன நலப் பாதிப்புக்கு ஆளாகும் ஆண்கள், இளம் வயதிலேயே இறப்பதும் நடக்கிறது. குடும்பத்தை நடத்த வேண்டிய ஒட்டுமொத்தச் சுமையும் பெண்களின் தலையில்தான் விடிகிறது. தமிழகத்தில் தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. தனித்து வாழும் பெண்களில் குடிநோயாளிக் கணவனால் கைம்பெண்ணாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமானது. குடும்பத்தைச் சீரழிக்கும் மதுவால் கணவனைப் பிரிந்து வாழும் பெண்களின் எண்ணிக்கையும் கவலை தரும் அளவில் உயர்ந்தபடி இருக்கிறது. இப்படியொரு ‘பெருமைமிகு’ சூழலில்தான் பெண்கள் மது வாங்குகிற படங்களை வைத்துத் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.

அரசியல் தெளிவின்மையே ஆதாரம்

ஆண் என்கிற அகந்தையுடன் குடிபோதையும் சேர்ந்துகொள்கிறபோது ஏற்படுகிற விபரீதங்களையும் வெறியட்டாங்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதலிரண்டு நாட்களிலேயே நிகழ்ந்த வாகன விபத்துகளும் வன்முறைச் சம்பவங்களுமே அதன் தீவிரத்துக்குச் சான்றுகள். “நான் என்ன மத்தவங்களை மாதிரி குடிச்சிட்டுத் தெருவில் விழுந்து கிடக்கிறேனா?” என்று தொடங்கும் நியாயப்படுத்துதல், “மத்தவங்களை மாதிரி வீட்டுக்குக் காசு தராம இருக்கேனா இல்லை பொண்டாட்டிய அடிக்கிறேனா?” என்று நீள்கிறது. இப்படிக் கேட்கிற பலரும் குடிகாரக் கணவனால் பெண்கள் எதிர்கொள்கிற உளவியல் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதே இல்லை.

குடிக்கிற ஆணும் போதையைச் சாதகமாக்கிக் கொண்டு தன்னைவிட எளியவர்களாகத் தான் உருவாக்கி வைத்திருக்கும் மனைவியையும் குழந்தைகளையும் அடிக்கிறார்களே தவிர வலியவர்களிடம் அடங்கித்தான் நடக்கிறார்கள். குடும்ப அமைப்பையே சிக்கலுக்குள்ளாக்கும் டாஸ்மாக் கடைகளையும் தேர்தல் நேரத்தில் மட்டும் மதுவிலக்குக் குறித்துத் தீவிரமாகக் களமாடும் கட்சிகளையும் குறித்து எந்தவிதமான அரசியல் தெளிவும் ஏற்படாமல் எளிய மக்களைப் பார்த்துக்கொள்வதன் வாயிலாகத்தான் இங்கே பலர் பிழைப்பு நடத்த முடிகிறது. மக்களின் சிந்தனையையும் வாழ்க்கையையும் முடக்கி வைத்திருக்கிற சமூக, அரசியல், பொருளாதார காரணிகளைக் குறித்துப் பேசாமல் ஆண் - பெண் ஒழுக்க வரையறைக்குள் மது போன்றவற்றைத் தள்ளுவதன் மூலம் அதிகாரத்தின் கரங்களுக்கு நாம் வலுசேர்த்துக்கொண்டு இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x