Last Updated : 03 Aug, 2015 08:59 AM

 

Published : 03 Aug 2015 08:59 AM
Last Updated : 03 Aug 2015 08:59 AM

சசிபெருமாளின் தியாகத்துக்கு இங்கே மதிப்பு ஏதும் உண்டா?

டாஸ்மாக், தமிழக உழைப்பாளிகளை ஒட்டுமொத்தமாக அழித்துக்கொண்டிருக்கிறது.

நேற்று காலை பேருந்துக்காக நின்றிருந்தபோது அருகே ஒரு மாந்தோட்டத்துக்குள் லுங்கியைத் தூக்கிக் கட்டிய ஒரு நடுத்தர வயது மனிதர் கையில் ஹெல்மெட்டுடன் சென்றார். அவர் கையிலிருந்தது ஒரு பக்கெட் என்று நினைத்த நான், கூர்ந்து பார்த்தேன். ஹெல்மெட்டை வைத்து, அதன் உள்ளிருந்து இரண்டு ரம் புட்டிகளை எடுத்தார். கீழே குந்தி அவற்றைத் திறந்து நேரடியாகவே வாயில் விட்டுக்கொண்டார். தண்ணீர்கூட இல்லை. தொட்டுக்கொள்ளவும் ஒன்றும் இல்லை. நேராக மடக் மடக். ஐந்தே நிமிடம். ஒருமுறை குமட்டிய பின் அருகே நின்ற ஏதோ ஒரு இலையைப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு வந்து என் அருகே நின்ற ஸ்கூட்டரை எடுத்தார்.

பழக்கமான காட்சிதான். ஆனால், தொடர்ந்து தொந்தரவு செய்தது. போன வருடம் அம்பாசமுத்திரம் பகுதி கிராமங்களுக்குச் சென்றபோது, வீடுவீடாக ஆண்கள் சும்மா இருப்பதைக் கண்டேன். பெண்கள் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தனர். “அந்தாளுக்கு பத்து மணி வெயிலடிச்சா அப்றம் கண்ணு நிக்காது சாமி. தலைசுத்தி விழுந்திரும். அதனால வேலைக்குப் போறதில்ல” என்றார்கள். குடிப்பழக்கம். குடிக்கப் பணம்? “அது எதுனா சம்பாரிக்கும். அப்றம் நம்மகிட்ட பிச்சுப்பிடுங்குறதுதான்.” கண் பஞ்சடைந்து, கன்னம் குழிந்து அமர்ந்திருந்த குடிநோயாளிகளால் ஆனவையாக இருந்தன கிராமங்கள். வளமான நிலம் பெரும்பாலும் தரிசாகக் கிடந்தது. சாலையோரம் என்றால், ‘பிளாட்’ போடப்பட்டு விற்பனைக்குக் காத்திருந்தது.

சாராயக் காசில்தான் அரசியலே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து இலவசங்களும் ‘டாஸ்மாக்’ கின் உபயம். அவற்றிலுள்ள ஊழலே அரசியலின் கொண்டாட்டம். டாஸ்மாக், தமிழக உழைப்பாளிகளை ஒட்டுமொத்தமாக அழித்துக்கொண்டிருக்கிறது. மிகக் கேவலமான ரசாயனங்கள் இங்கே மது என்ற பெயரில் விற்கப்படுகின்றன. விற்பனைத் தொகை ஒரு சாதனைபோலவே வெளியிடப்படுகிறது / உள்வாங்கப் படுகிறது. காலையிலேயே குடிக்க டாஸ்மாக் வாயிலில் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். பல கோடித் தொழிலாளர்கள் உள்ள இந்த மண்ணில், உழைப்பதற்கு இன்றைக்கு ஆள் கிடைக்கவில்லை. பிஹாரிலிருந்தும் வங்காளத்திலிருந்தும் வர வேண்டியிருக்கிறது.

இந்தப் பெரும் ஒடுக்குமுறையை, சுரண்டலை இங்கே எவரும் பேசுவதில்லை. மது பழந்தமிழர் பண்பாடு என்று ஒரு கூட்டம் ஜல்லியடிக்கிறது. கவிதை என்று நாலைந்து உடைந்த வரிகளை எழுதிவிட்டு, குடித்துக் கூத்தாடுகிறது இன்னொரு கூட்டம். புரட்சி வரட்டும் என்று இன்னொரு கூட்டம். தமிழ்த்தேசியம், திராவிடம் எதற்கானாலும் டாஸ்மாக்தான் கொண்டாட்டப் பிரதேசம். தமிழகத்தின் எந்தப் பொதுவெளியிலும் இன்று பெண்கள் தனியாகச் செல்ல முடியாத நிலையை குடி உருவாக்கியிருக்கிறது. சுற்றுலாத்தலங்களில், பொதுவெளிகளில் எங்கும் குடியர்கள் அனைத்து நெறிகளையும் மீறி ஆட்டம் போடுகிறார்கள். குடி என்றும் இங்கே இருந்தது. சமண, பவுத்த மதங்களால் அது ஒரு சமூகத் தீமை என ஆழமாக நிறுவப்பட்டிருந்தமையால், அது கட்டுக்குள் இருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குடியை ஒரு வணிக அமைப்பாக ஆக்கினார்கள். கள்ளுக்கடை என்ற நிறுவனம் உருவாகி, ஒருங்கிணைந்த முறையில் உழைப்பாளிகள் சுரண்டப்படலானார்கள். கள்ளுக்கடை ஏலம் என்பது அரசின் முக்கியமான வருமானம் என பிரிட்டிஷார் கண்டுகொண்டனர். பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய அக்காலக் கதைகளில், கள் கிராமங்களில் போடும் ஆட்டத்தின் சித்திரத்தைக் காணலாம். பெரும்பாலும் அடித்தள மக்களையே அது சுரண்டியது. குடி, இந்தி யாவின் அடித்தள மக்களின் வாழ்க்கையை, கிராமப் பொருளியலைச் சூறையாடுவதைக் கண்ட காந்தி, அதற்கு எதிரான போராட்டத்தை சுதந்திரப் போரின் மையமான செயல்திட்டங்களில் ஒன்றாக முன்வைத்தார்.

இந்தியாவில் சமணர்களின் காலத்துக்குப் பின் குடிக்கு எதிரான ஒரு நாடளாவிய பேரியக்கம் என்பது காந்தியின் கள்ளுக்கடை மறியல் போராட்டம்தான். இந்தியா முழுக்க குடிக்கு எதிரான ஒரு பெரிய விழிப் புணர்வை அது உருவாக்கியது. ஆனால், சுதந்திர இந்தியாவில் உருவாகிவந்த அரசுகள், பிரிட்டிஷாரின் அந்த சுரண்டல் திட்டத்தைத் தங்களுக்குச் சாதகமான தாகக் கண்டுகொண்டனர். அதிலிருந்த கொள்ளை லாபத்தைக் குறிவைத்தனர்.

இன்று குடிக்கு எதிரான குரல் என்பது, படித்த ‘யூத்து’களுக்கும் படிக்காத பாமரருக்கும் கேலிக்குரியது. ஆயினும் இன்றும் காந்திய யுகத்தின் குரல்கள் குடிக்கு எதிராக எழுந்தபடியேதான் உள்ளன. மக்களோ ஊடகங்களோ ஆதரிக்காத நிலையில், காந்தியப் பிடிவாதத் தின் வெளிப்பாடாகவே அவ்வெதிர்ப்பு நிகழ் கிறது. நம் சமூகத்தில் சாகாது துடிக்கும் மனசாட்சியின் குரல் அது. எத்தனை நசுக்கப்பட்டாலும் உயிரோடிருக்கும் வல்லமை காந்தியத்துக்கு உண்டு என்பதற்கான ஆதாரம்.

சசிபெருமாளின் இறப்புச்செய்தி மனம் வலிக்கச் செய்தது. இங்கே அருகே மார்த்தாண்டத்தில் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, சரிந்து விழுந்து இறந்திருக்கிறார். அவர் விரும்பிய மரணம். அவரது வாழ்க்கையின் முழுமை. ஆனால், அவரது குரல் எவர் மனசாட்சியுடனும் பேசவில்லை. அதற்கான காலம் கனியவில்லை. இந்த நாட்டின் அறிவுஜீவிச் சூழலில் ஊடகங்களால் சசிபெருமாளின் தியாகம் கவனிக்கப்படாமலே போய்விடத்தான் வாய்ப்பு அதிகம். சசிபெருமாளை திருப்பூர் அறம் அறக் கட்டளை விழாவில் நேரில் சந்திக்கவும் வணங்கி ஆசிபெறவும் வாய்ப்பு கிடைத்தது. அதிகம் பேசாத எளிய மனிதர். தன் வாழ்க்கையின் இலக்கென்ன என வகுத்துக்கொண்டவர். செயல்மூலம் காந்தியை அறிந்த வர். காந்தியை அறிய சிறந்த வழி அதுவே. அதன் மூலம் காந்தியாகவே ஆகிவிடுதல். காந்தியாகவே நான் கண்ட சசிபெருமாளுக்கு அஞ்சலி!

- ஜெயமோகன், எழுத்தாளர், ‘விஷ்ணுபுரம்’, ‘காந்தி இன்று’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x