Published : 03 May 2015 08:46 AM
Last Updated : 03 May 2015 08:46 AM

நாட்டை விற்கத் துணிந்துவிட்டது பாஜக!

இன்றைக்கு இந்த நாட்டில் விவசாயிகள் எந்தச் சூழலில் இருக்கிறார்கள் என்பதிலிருந்தே நிலம் கையகப்படுத்தும் மசோதாவைப் பற்றி யோசிக்க வேண்டும்.

வெள்ளம், வறட்சி, இடுபொருட்கள் விலை அதிகரிப்பு, விளைபொருட்களுக்கு நியாய விலை கிடைக்காதது, கந்துவட்டிக் கொடுமை என்று இந்திய விவசாயம் அழிகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 2,96,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தச் சூழலில் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் இப்போது குறைத்துவிட்டனர்.

ஏற்கெனவே, ஒதுக்கிய நிதியில் 14.7 % மட்டுமே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில்தான் நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கொண்டுவரத் துடிக்கிறது பாஜக அரசு. அதாவது, வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் விவசாயிகளிடம், “விவசாயம்தான் நொடித்துவிட்டதே, அதை ஏன் செய்கிறாய்? நிலத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விடு” என்று மறைமுகமாகக் கேட்கிறது.

தன்னுடைய அட்டூழியங்களுக்கெல்லாம் இந்த அரசு சொல்லும் ஒரே பதில் ‘வளர்ச்சி’. கடந்த காலங்களில் ‘வளர்ச்சி’யின் பெயரில் நிலம் கையகப்படுத்தப்பட்ட சம்பவங்களை எடுத்துக்கொள்வோம். 2014-ல் 491 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக 45,635 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் 56.64% நிலம் பயன்படுத்தபடவே இல்லை. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) சொல்லும் விவரம் இது.

இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உருவாக்கப்பட்ட தொழில்களுக்கு சுமார் ரூ. 83,104.76 கோடி வரிச் சலுகை அளிக்கப் பட்டது. ஆனால், நிலம் ஒதுக்கிய அளவுக்கு, வரிச் சலுகை அளித்த அளவுக்குப் பொருளாதார, தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என்பது கண்கூடு.

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை தேசத்தின் நெடுஞ்சாலை மற்றும் இருப்புப் பாதைக்கு இருமருங்கிலும் ஒவ்வொரு கிலோ மீட்டர் நிலத்தை தொழில் வளாகங்களுக்காக கையகப்படுத்தலாம் என்கிறது புதிய சட்டம். இதன்படி நாட்டின் மூன்றில் ஒரு பகுதி விவசாய நிலம் பறிக்கப்படும்.

ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 11 நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ. 6,309 கோடி கடன் வாங்கியுள்ளன. இப்படிக் கடன் வாங்கினால் - கடனைத் திருப்பி அளிக்காத பட்சத்தில் வங்கிகள் அந்த நிலத்தை மீட்டு விற்க முடியாது. அந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லை என்றால், அது வாராக்கடன்தான். இப்படியாகக் கடந்த காலத்தில் நிலம் கையகப்படுத்தியதன் மூலம் தனியார் நிறுவனங்கள் எவ்வளவு பலன் அடைந்திருக் கின்றன தெரியுமா?

இதற்குக் கண் முன் உதாரணமாக இருக்கிறது, ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா நிறுவனம். அந்த நிறுவனத்துக்கும் அது சார்ந்த ஐந்து நிறுவனங்களுக்கும் தடையில்லா மின்சாரம் கொடுத்தது அரசு. ஒரு ஏக்கர் நிலம் ரூ. 8 லட்சம் என்ற விலைக்கு வாங்கி அதை ரூ. 4 லட்சத்துக்கு நோக்கியாவுக்குக் கொடுத்தது மாநில அரசு. முதல் ஐந்தாண்டுகளுக்கு முழுமையான வரி விலக்கு; அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 50% வரி மட்டுமே. தவிர, மத்திய அரசுக்கு அந்த நிறுவனம் கட்டிய ரூ.850 கோடி மதிப்புக்கூட்டப்பட்ட வரியை மாநில அரசு திருப்பிக் கொடுத்தது.

தமிழகத்தில் அந்த நிறுவனம் செய்த முதலீடு ரூ. 650 கோடி. அதன் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 1,50,000 கோடி. கடைசியில் என்ன ஆனது? இழுத்து மூடிவிட்டுப் போய்விட்டார்கள். தமிழகத்துக்கு என்ன லாபம்? சுமார் 25,000 தொழிலாளர்கள் வேலை இழந்ததுதான் மிச்சம்.

இப்படித்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களைத் தாரைவார்க்கத் துடிக்கிறார்கள். இதில், பெரிய கொடுமை என்னவென்றால், மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த சட்டத்தில் நில உரிமையாளர்களுக்குச் சாதகமாக இருந்த சில அம்சங்களையும் நீக்கியிருப்பது. இது சர்வாதிகாரத்தின் உச்சம்.

முந்தைய சட்டத்தின்படி ஒரு நிலத்தைக் கையகப்படுத்தும்போது சமூகத் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். அதாவது, குறிப்பிட்ட நிலத்தைக் கையகப் படுத்தும்போது, அதனால் சமூகத்தில் பாதிப்புகள் ஏற்படுமா என்று ஆய்வு செய்ய வேண்டும். பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே கையகப்படுத்தலாம். உதாரணத்துக்கு, தமிழக டெல்டாவில் நிலத்தை எடுத்தால் அது விவசாயத்தை, நெல் உற்பத்தியைப் பாதிக்கும். அப்படி எனில், நிலத்தை எடுக்கக் கூடாது. ஆனால், இந்தப் புதிய சட்டத்தில் சமூகத் தாக்க மதிப்பீட்டை நீக்கிவிட்டார்கள்.

பழைய சட்டத்தின்படி தனியாருக்காக நிலம் எடுத்தால் 80% நில உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்; அரசு மற்றும் தனியாருக்குக் கூட்டாக நிலம் எடுத்தால் 70% நில உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். இப்போது எந்த ஒப்புதலும் தேவையில்லை. 1894-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைவிடக் கொடுமையாக இருக்கிறது, மோடி கொண்டுவர நினைக்கும் இந்தச் சட்டம். சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவை விற்கத் துணிந்துவிட்டது பாஜக அரசு.

- ஜி. ராமகிருஷ்ணன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்.
தொகுப்பு: டி.எல். சஞ்சீவிகுமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x