Last Updated : 07 Apr, 2015 09:37 AM

 

Published : 07 Apr 2015 09:37 AM
Last Updated : 07 Apr 2015 09:37 AM

பீஷ்மரே... ஒதுங்கி நில்லும்!

பெங்களூரு பாஜக தேசியச் செயற் குழுக் கூட்டத்தின் இறுதி நாளன்று உரையாற்றுவதற்கு அத்வானி மறுத்துவிட்டார் என்று ஒரு செய்தியும், உரையாற்றுவதற்கு அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று இன்னொரு செய்தியும் தெரிவிக்கின்றன. எப்படியும் அவர் பேசவில்லை. அத்வானிக்கு ஏமாற்றமோ, இல்லையோ... இன்றைய பாஜகவைத் தாங்கிக் கொண்டிருக்கும் பலரும் அவரைப் பார்த்து வந்தவர்கள் - ஏமாற்றத்தோடும் வருத்தத் தோடும் சென்றதைப் பார்க்க முடிந்தது.

இன்றைய பாஜக முழுக்க முழுக்க மோடி - ஷாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கலாம். ஆனால், இன்றைக்கு பாஜகவைக் கீழே தாங்கி நிற்கும் பலரும் அத்வானியைப் பார்த்து கட்சிக்குள் வந்தவர்கள்தான், மோடி உட்பட.

1980 ஏப்ரல் 6-ல் தொடங்கப்பட்ட பாஜகவின் 35 ஆண்டுகளாகப் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் அத்தனையிலும் உடன் பயணித்தவர் அத்வானி. சியாமா பிரசாத் முகர்ஜி, வாஜ்பாய் ஆகியோருடன் இணைந்து பாஜகவை நிறுவியவர். அத்வானியின் வழிகாட்டுதலால் உயர்ந்த இடத்தை அடைந்தவர்களில் மிக முக்கியமானவர் மோடி. குஜராத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார் என்று மோடியைத் தேர்வுசெய்தவர் அத்வானிதான். அத்வானி நடத்திய ரத யாத்திரையை முன்னின்று ஏற்பாடு செய்ததன் மூலம், மோடியின் செல்வாக்கு உயர்ந்தது. 2001-ல் கேஷுபாய் பட்டேலுக்குப் பதிலாக, குஜராத் முதல்வராக மோடியை அமரவைத்ததும் அத்வானிதான். குஜராத்தில் 2002-ல் நடந்த மதக் கலவரத்துக்குப் பின்னர், கட்சிக்குள் மோடி மீது அதிருப்தி எழுந்தபோதும் அவருக்குத் துணை நின்றது அத்வானிதான்.

அத்வானியின் அடையாளமே அவருடைய பேச்சுதான். பாஜக வரலாற்றில் அத்வானி இரு செயற்குழுக்களில் பேசவில்லை. ஒன்று, அவர் பங்கேற்காத கோவா செயற்குழு - மோடி பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட இடம். இரண்டாவது, பெங்களூரு செயற்குழு - பங்கேற்றும் ஒதுக்கப்பட்ட இடம்.

பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்த பாஜக தேசியச் செயற்குழுக் கூட்டத்தின் தொடக்க நாளன்றே, அத்வானியை ஒதுக்கும் பணிகள் முறைப்படி நடந்தேறின. செயற்குழுக் கூட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். விளக்கேற்றும் வரிசையில் அத்வானிக்கு அளிக்கப்பட்ட இடம் நான்கு. அதேபோல், தனக்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர முயன்ற அத்வானியைத் தடுத்துவிட்டு, அதில் தனது வலதுகரமாகத் திகழும் அமித் ஷாவை அமரவைத்துவிட்டார் மோடி. பாஜகவின் நீண்ட நாள் உறுப்பினர்கள் எவருக்கும் இதெல்லாம் உவப்பானதாக இல்லை.

வழியே இல்லாத வழிகாட்டும் குழு

மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், தேசிய முன்னணி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் ஒரு அரிய காட்சியைப் பார்த்து இந்தியா அசந்து நின்றது. “இங்கு பேசிய அத்வானிஜி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினார். அதை அவர் பயன்படுத்தி யிருக்கக் கூடாது. கட்சி இத்தனை பெரிய வெற்றியை அடைவதற்கு நரேந்திர மோடி உதவி செய்தார் என்று அத்வானி கூறிவிட்டார்” என்று கூறிய மோடி தலை கவிழ்ந்து விசும்பினார். அழுதார். பலருக்கும் குருவை மிஞ்சிய சிஷ்யர்களின் கதை மனதுக்குள் ஓடின. அமைச்சரவையில் அத்வானிக்கு இடம் இருக்காது என்பது தெரிந்தாலும், அடுத்த குடியரசுத் தலைவராக அத்வானி அமரவைக்கப்படலாம் என்று அவரவருக் குள்ளேயே ஆறுதல் அடைந்துகொண்டனர்.

சில மாதங்களில் ‘மார்கதர்ஷக் மண்டல்’ எனும் வழிகாட்டும் குழு உருவாக்கப்பட்டு, அதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் அத்வானி சேர்க்கப்பட்டார். அக்குழுவில் மோடியும் ராஜ்நாத் சிங்கும் இருக்கிறார்கள் என்றாலும், அந்த அமைப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை. இன்றுவரை அந்த அமைப்பின் சார்பில் எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை. எனில், அந்த வழிகாட்டும் குழு எந்த அளவுக்குத் தீவிரமாகச் செயல்படுகிறது என்று நாம் தெரிந்துகொள்ளலாம்.

இந்த விவகாரம் பாஜகவைத் தாண்டியும் இப்போது பேசப்படுவதாக மாறியவுடன், “அத்வானி பாஜகவின் மூத்த தலைவர். அவர் எப்போது எங்கு வேண்டுமானாலும் பேசலாம்” என்று அருண் ஜேட்லியும், நிர்மலா சீதாராமனும் விளக்கமளித்திருக்கிறார்கள். “ஒரு கூட்டத்தில் பங்கேற்கும் அத்தனை பேரும் பேச முடியுமா?” என்ற கேள்விகளெல்லாமும் முளைக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஆயிரத்தில் ஒருவரா அத்வானி?

வெ. சந்திரமோகன் தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x