Published : 02 Aug 2017 09:36 AM
Last Updated : 02 Aug 2017 09:36 AM

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ரேஷன் கிடைக்கும்?

த்தாண்டுகளுக்கு முன்பு வரை, தமிழகத்தின் விவசாயக் கிராமங்களில் யாரும் ரேஷன் கடைக்குப் போய் அரிசி வாங்க மாட்டார்கள். சர்க்கரையும் மண்ணெண்ணெயும் மட்டுமே வாங்குவார்கள். அரிசியை விலைகொடுத்து வாங்குவதே குடியானவனுக்குக் கௌரவக் குறைச்சல் என்ற எண்ணம்தான் காரணம். விவசாயக் கூலிகளும்கூட, தாங்கள் கூலியாக வாங்கிய நெல்லை ஆண்டு முழுவதற்கும் உணவுக்காகச் சேமித்து வைத்துக்கொள்வார்கள். எனவே, அவர்களும்கூட ரேஷன் கடையில் அரிசி வாங்குவது அபூர்வம்தான். இலவசமாகவே கொடுத்தாலும் வரிசையில் நின்று உணவைப் பெறுவதற்கு விவசாயிகளின் சுயமரியாதை இடம்கொடுக்காது. எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை. இப்போது விவசாயி, விவசாயக் கூலி என்று எல்லோருமே நியாயவிலைக் கடை திறப்பதற்கு முன்பே நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தால் பெருவிவசாயி. எனவே, அவருக்கு நியாயவிலைக் கடையில் சலுகை விலையில் அரிசி கிடைக்காது என்கிறது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம். நிலம் இருந்தாலும் நீர் இல்லை. பயிரிட்டாலும் பலன் வந்து சேருவதில்லை. வறட்சி என்பது எப்போதாவது வரும் என்ற நிலைமாறி, தொடரும் துயரமாகிவிட்டது. உணவளிக்கும் விவசாயியே கையில் பையோடு நியாயவிலைக் கடையில் நிற்கவேண்டிய நிலை. தற்போது உயிர் வாழ்வதற்கான கடைசி வாய்ப்பும்கூட அவனுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்குத் தனிச் சலுகையா?

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், இச்சட்டத்தின்படி, வருமான வரி, தொழில் வரி செலுத்துவோர், 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் கொண்ட குடும்பங்கள் அரசுப் பணியாளர்கள், அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்களைக் கொண்ட குடும்பங்கள் இனிமேல் நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்க முடியாது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே இருந்த நடைமுறை தொடரும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்களை அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் ஆளாக்கிவிடக் கூடாது என்ற அமைச்சரின் நோக்கம் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால், பழைய நடைமுறை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தொடரும் என்று அவரால் உறுதியளிக்க முடியுமா? ஒருபோதும் முடியாது என்பதுதான் உண்மை. இச்சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டிருப்பது தனிப்பட்ட சலுகை. தற்காலிகமானது. இதை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசு நிறுத்திக்கொள்ளலாம். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு வழங்கப்பட்ட சலுகையைப் போலத்தான் இதுவும். முன்னுரிமைப் பட்டியலில் இருப்பவர்களுக்கு மட்டுமே மத்திய அரசு மானியம் வழங்கும், மற்றவர்களுக்கான செலவு மாநில அரசின் சொந்தப் பொறுப்பு என்பது தற்போதைய நிலை. மாநில அரசின் வரி வருமானங்கள் அடுத்தடுத்து குறைக்கப்பட்டுவரும் நிலையில், உணவு மானியங்கள் மட்டுமல்ல, எந்தவொரு சமூகநலத் திட்டத்தையும் மாநில அரசு நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். அப்போது இயல்பாகவே இத்திட்டமும் முடிவுக்கு வந்துவிடும். மத்திய அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்கியிருப்பது சலுகைதான். விதிவிலக்கு அல்ல.

ஜெயலலிதாவின் கோரிக்கை என்ன ஆனது?

மத்திய அரசின் இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டபோதே இவ்விஷயத்தில் மாநில அரசுகளின் அதிகாரத்தை விட்டுக்கொடுத்தாகிவிட்டது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, கிராமப்புறங்களில் 75%-ம் நகர்ப்புறங்களில் 50%-ம் மட்டுமே உணவு தானியங்களை வழங்க முடியும். தமிழ்நாடு வெகுவேகமாக நகரமயமாகிவரும் மாநிலம். எனவே, தமிழ்நாட்டுக்கு இதுவரை கிடைத்துவந்த பயன்களை இச்சட்டம் நிச்சயம் குறைத்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அதன் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்தவர் ஜெயலலிதா. அச்சட்டத்தைத் தவிர்க்கவே முடியாது என்ற நிலையிலும்கூட 3 ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகள் தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் மோடியிடம் வேண்டுகோள் வைத்தார். மத்திய அரசுக்கு அவர் கொடுத்த அழுத்தத்தால்தான் இந்தச் சலுகை தற்போது தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், ஜெயலலிதா கோரியபடி 10 ஆண்டு கால விதிவிலக்கு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அடுத்த 3 ஆண்டுகளில் உணவு தானியங்களை வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிடும். அதற்குப் பதிலாக பயனாளிகளுக்கு நேரடியாக தானியங்களுக்குப் பதிலாக அதற்குரிய தொகை வங்கிக் கணக்கில் வந்து சேரும் என்பதுதான் இந்தச் சட்டத்தின் முக்கியமான நோக்கம் என்பது அமைச்சர் சொல்லாமல் விட்ட தகவல்.

பறிபோன மாநில உரிமை

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு மன்மோகன் சிங் காலத்திலேயே முயற்சிகள் நடந்தன. அப்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது என்று குற்றம்சாட்டப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுகவும் சரி, மோடியின் ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவும் சரி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்தே வந்திருக்கிறார்கள். கருணாநிதியும் ஜெயலலிதாவும் தீவிரமாக எதிர்த்து நின்ற சட்டத்தை இன்று எடப்பாடி பழனிசாமி அறிவிக்கையின் வழியாக முன்னெடுத்துச் செல்கிறார். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களில் நிபந்தனையே இல்லாமல் தானாக வலியப்போய் ஆதரவு வழங்கும் பழனிசாமி, உணவு வழங்கல் தொடர்பாக மத்திய அரசிடம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டார். மக்களவையில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருந்தும்கூட, மாநில உரிமைகளை உறுதிசெய்துகொள்ளும் அரிய வாய்ப்புகளைக் கைநழுவ விட்டுவிட்டார்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களை மிரட்டித்தான் மத்திய அரசு பணிய வைத்திருக்கிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வறுமைக்கோட்டுக்கு மேலே வாழும் குடும்பத்துக்கான அரிசியின் விலையை ரூ. 8.30-லிருந்து ரூ.22.54 ஆக மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து அச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் பணியவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வறுமைக்கோட்டினைத் தீர்மானிக்கும் முறையே கடும் விமர்சனத்துக்குரியது. கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் தனிநபருக்குத் தேவையான குறைந்தபட்ச உணவின் அடிப்படையில்தான் நாம் வறுமைக்கோட்டை அளவிட்டுக்கொண்டிருக்கிறோம். ஐநாவின் மனித வளக் குறியீட்டெண் பின்பற்றும் வறுமைக்கோட்டுக்கான அளவீடுகளுடன் ஒப்பிட்டால் மத்திய அரசு, வறுமையை மறைப்பதில் எவ்வளவு முயற்சியெடுத்துக்கொள்கிறது என்பது புரியும். நாடெங்கும் வேலையில்லாத் திண்டாட்டம். கிடைக்கும் வேலையும் நிலையில்லாதது எனும்போது வருமான வரி, தொழில் வரி அடிப்படையில் முன்னுரிமையைத் தீர்மானிப்பதும் நியாயமானது அல்ல. ஏதாவதொரு வகைப்பாட்டில் அனைவரையுமே உள்ளடக்கி மேற்கொண்டு இந்6தப் பயனை இனிமேல் யாருமே பெற முடியாத சூழலை உருவாக்கவே இந்த முன்னுரிமைப் பட்டியல்.

உணவுச் சந்தைப் பாதுகாப்பு

உணவு, எரிபொருள், வேதியுரங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானியங்களைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது. அதை மிகவும் தீவிரமாகச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது. அதன் ஒரு பகுதிதான் காஸ் சிலிண்டர்களுக்கு மானியம் குறைப்பு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்ற வரையறை எல்லாமும். பயனாளிகள் இந்தச் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், வாங்கிய பொருட்களை கள்ளச் சந்தையில் விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் இதற்குச் சரியான பதில் இல்லை. அப்படிச் செய்பவர்களின் எண்ணிக்கை, பயன்பெறுபவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் பொருட்படுத்தக்கூடியதும் அல்ல. சலுகை விலையில் அரிசி கிடைக்குமா என்று வரிசையில் காத்திருப்பவனுக்குத் திருடன் என்ற முத்திரையைக் குத்த அரசே முனைவது உண்மையை மறைக்கும் முயற்சி.

ரேஷன் கடைகளில் இலவசமாகவும் சலுகை விலையிலும் வழங்கப்பட்டுவந்த தானியங்கள், விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுபவை. உணவுக்கான மானியம் வங்கிக் கணக்குக்கு மாறுகிறபோது, விவசாய விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வதையும் நிறுத்திவிடும். உணவும் எரிபொருளும் மனிதனின் தவிர்க்க முடியாத தேவைகள். உலகம் முழுவதும் சந்தை, பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே விற்பனைக்கு உரியது என்று லாபக் கணக்கு போடுபவர்களுக்கு உணவு என்பது எந்நாளும் தேவை குறையாத நிலையான சந்தை. அதை நோக்கியே முதலாளிகளும், அரசுகளும் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது சாமானியர்களிடத்தில் எழுகின்ற ஒரே கேள்வி இதுதான்: ‘தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் ரேஷன் கடையில் எல்லோருக்கும் உணவு தானியங்கள் கிடைக்கும்?’

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x