Last Updated : 02 Jun, 2016 08:42 AM

 

Published : 02 Jun 2016 08:42 AM
Last Updated : 02 Jun 2016 08:42 AM

ஆமை வேகத்தில் பழங்குடி நலன்

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வுரிமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாக நடந்துகொள்கின்றன

நரிக்குறவர் இனம் உள்ளிட்ட சில சமூகங்களைப் பழங்குடிகளாக அறிவிக்கலாம் என்று மத்திய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அதிகாரபூர்வமாக உத்தரவு வெளிவர மேலும் சில காலம் பிடிக்கலாம். இந்த அறிவிப்பின் பின்னணியில் நடந்த சம்பவங்கள் விவாதிக்கப்பட வேண்டியவை.

இந்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ள சாதியினர் மற்றும் பழங்குடியினரில் மேலும் ஒரு பிரிவினரைச் சேர்ப்பதற்கோ, நீக்குவதற்கோ இந்திய அரசியல் சாசனத்தின் சட்டக்கூறுகள் 341(2)-ம் 342(2)-ம் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கின்றன. மாநில அரசு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.

தாமதமும் குளறுபடிகளும்

தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடியினரின் பட்டியலில் குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினரையும் நரிக்குறவரையும் ஈரோடு மாவட்ட மலையாளி இனத்தவரையும் சேர்க்க வேண்டும் என்று முறையே 1978, 1982, 1990 ஆண்டுகளில் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு தமிழ்நாடு அனுப்பியது. இதன் மீது பல்வேறு நினைவூட்டல் கடிதங்களையும் அடுத்தடுத்து வந்த முதலமைச்சர்கள் அனுப்பியிருந்தனர். ஆனால், மத்திய அரசு சுமார் 20 ஆண்டுகள் கழித்து 2000 ஏப்ரல் 3-ல் இந்த அனைத்துப் பரிந்துரைகளையும் திருப்பி அனுப்பியது. மேற்படி இன மக்களின் வாழ்வியல் சூழல் குறித்த ஆய்வறிக்கை இணைக்கப்படவில்லை. எனவே, மேற்படி இன மக்களின் நாகரிகம், பண்பாடு, பொருளாதார நிலை, தனித்தனியான குணங்கள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. தமிழக அரசு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தமிழ்நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்துக்கு இந்த ஆய்வினை மேற்கொள்ளுமாறு 2001 செப்டம்பர் 17-ல் உத்தரவிட்டது.

அப்போதைய பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜக்கா பார்த்தசாரதி தலைமையிலான குழு, விரிவான ஆய்வை மேற்கொண்டு 2004-ல் அறிக்கையை அளித்தது. ஆனால், இந்த அறிக்கை மீதான பரிந்துரையை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பாமல் தமிழக அரசு கிடப்பிலே போட்டுவிட்டது. 2006 ஆகஸ்ட் மாதம்தான் மத்திய அரசுக்கு தமிழக அரசின் பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரை பழங்குடியினர் நல அமைச்சகத்துக்கு அனுப்புவதற்குப் பதிலாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துக்கு தவறாக அனுப்பப்பட்டுவிட்டது என்பதை நாங்கள் 2006 நவம்பர் மாதம் டெல்லி சென்று பழங்குடியினர் நல அமைச்சகத்தை அணுகியபோதுதான் தெரிந்துகொண்டோம்.

உரிமை கொண்டாடல்

மீண்டும் தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் - பழங்குடியினர் நலத் துறைச் செயலாளரைச் சந்தித்துப் பேசினோம். அதன் பிறகுதான் 2006 டிசம்பர் 4-ல் பழங்குடியினர் நல அமைச்சகத்துக்கு இந்தப் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்குப் பிறகும், 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் நரிக்குறவர் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அதிகாரபூர்வமாக உத்தரவு வெளிவர மேலும் சில காலம் பிடிக்கலாம்.

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வுரிமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் எவ்வளவு அலட்சியமாக மத்திய, மாநில அரசுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். தமிழக அரசும் கடிதம் அனுப்பியதோடு கடமை முடிந்தது என்று இருந்திருக்கிறது. இப்போது, ஆளாளுக்கு எங்களால்தான் இது நடந்தது என்று உரிமை கொண்டாடுகின்றனர்.

இல்லாத பழங்குடி இனம்

தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பட்டியலில் மலையாளி கவுண்டர் என்ற பிரிவும் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது ஈரோடு மாவட்ட மலையாளி. மலையாளி என்ற பிரிவினர் தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண்.25-ல் உள்ளனர். 1950-லிருந்து மலையாளி என்றுதான் சான்றிதழ் பெற்றுவருகின்றனர். தமிழகப் பழங்குடியினர் மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் இந்தப் பிரிவினர்தான்.

தமிழ்நாட்டில் தற்போது 36 பிரிவினர் பழங்குடி பட்டியலில் உள்ளனர். 37-வதாக நரிக்குறவரையும் 38-வதாக மலையாளி கவுண்டரையும் சேர்க்கப்போகிறார்களா? ஏற்கெனவே வரிசை எண் 25-ல் உள்ள மலையாளி என்ற பிரிவை மலையாளி கவுண்டர் என்று மாற்றப்போகிறார்களா? அல்லது மலையாளி கவுண்டர் என்பது புதிய பிரிவினரா? இதற்கான விளக்கத்தை மத்திய அரசும், தமிழக அரசும் அளிக்க வேண்டும். மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக இந்தக் குழப்பம் தெளிவாக்கப்பட வேண்டும். மலைவாழ் மக்கள் மத்தியில் பணியாற்றிய என்னுடைய 25 ஆண்டு கால அனுபவத்தில் மலையாளி கவுண்டர் என்ற பிரிவு தமிழ்நாட்டில் இல்லை.

கேரள மாநில மலையாளிக்கும் தமிழக மலையாளி என்ற பழங்குடிப் பிரிவினருக்கும் வித்தியாசம் காணப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசால் இது செய்யப்பட்டிருந்தால் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஈரோடு என்ற ஒரு வார்த்தையைச் சேர்ப்பதற்கு பதிலாக, கவுண்டர் என்று சேர்ப்பது தவறான நபர்கள் போலியாகச் சான்றிதழ் பெற்று பழங்குடி மக்களுக்கான உரிமைகளையும், உதவிகளையும் வேறு சமூகத்தவர் பெறவே உதவும். எனவே, தமிழக அரசு உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டுசென்று

‘மலையாளி கவுண்டர்' என்னும் பெயர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் பற்றி?

தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது போக, தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டு மத்திய அரசின் வசம் நிலுவையிலுள்ள குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், குறவன் இனத்தின் உட்பிரிவினர், ஈரோடு மாவட்ட மலையாளி ஆகிய பிரிவினரையும் காலந்தாழ்த்தாமல் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசும் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள புலையன் இன மக்களும் பழங்குடியினர்தான் என்று தமிழ்நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநராக இருந்த டாக்டர்.மகேஸ்வரன் 2012-ம் ஆண்டே தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளார். ஆனால், தமிழக அரசு அதை இன்னும் மத்திய அரசுக்கு அனுப்பாமல் வைத்துள்ளது. தமிழக அரசு இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, அவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்.

- பெ.சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்,

தொடர்புக்கு: pstribal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x