Last Updated : 11 Jul, 2016 09:38 AM

 

Published : 11 Jul 2016 09:38 AM
Last Updated : 11 Jul 2016 09:38 AM

ராவ்கள் மற்றும் மோடிகள் வரலாறு!

வரலாற்றை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நினைவு கூர்வது முக்கியமானது. எனினும், உலக மயமாக்கலின் 25-வது ஆண்டை வெள்ளி விழா என்று சிலாகிக்க ஏதும் இல்லை.

எனக்கு நரசிம்ம ராவ் இப்படித்தான் ஞாபகத்துக்கு வருகிறார். மைனாரிட்டி அரசாக இருந்தும் ஐந்து வருடங்கள் ‘சாமர்த்திய’மாக ஆட்சியில் நீடித்தவர் அவர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற நடத்திய குதிரை பேரத்திலிருந்து, பாபர் மசூதி இடிப்புக்குப் பச்சைக்கொடி காட்டியது வரையிலான அவரது போக்குகளின் உச்சம், அவரது நந்தியால் வெற்றி. நந்தியால் தொகுதியில் உள்ள பல வாக்கு மையங்களில் மொத்த வாக்காளர்களைவிட அதிகமான ஓட்டுகள் பெற்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதை எப்படி மறப்பது, என்னவென்று எழுதுவது?

நரசிம்ம ராவ் எழுதிய சுயசரிதையின் தலைப்பு ‘இன்சைடர்’ (உள்ளாள்). அவர் காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக இருந்தபோது பல அரசியல் கட்டுரைகளை ‘இன்சைடர்’ என்கிற புனைபெயரில் ‘மெயின் ஸ்ட்ரீம்’ என்ற ஆங்கில அரசியல் இதழில் எழுதிவந்தார். அக்கட்டுரைகளின் ஆசிரியர் யார் என்பது பலருக்கும் அந்நாட்களில் புரிபடவில்லை. அவற்றை ஆராய்ந்து, நரசிம்ம ராவ்தான் புனைபெயரில் அந்தக் கட்டுரைகளை எழுதிவந்தார் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார் பத்திரிகையாளர் என்.ராம். ஒரு கட்சியின் உயர்நிலைக் குழுவில் இருந்துகொண்டே அக்குழுவின் முடிவுகளை புனைபெயரில் கட்டுரையாக விவாதிக்கும் ‘சாமர்த்தியம்’ நரசிம்ம ராவுக்கு மட்டுமே சாத்தியம்.

மறைக்கப்பட்ட ராவின் முகம்

நரசிம்ம ராவின் பல முகங்களை மறைத்துவிட்டு, தாராளமயமாக்கலின் தந்தை என்று இன்றைக்குப் பலர் அவரைப் பாராட்டிக் கொண்டாடுவது அறியாமை அல்லது புரட்டு என்றே சொல்ல வேண்டும். ராவ் மட்டும் அல்ல; வாஜ்பாய், மோடி இவர்கள் எல்லோரின் வரலாறுமே இப்படிப்பட்டதுதான். ‘சாமர்த்திய’ வரலாறு.

இந்தியாவை முழுமையாகத் தம் வசப்படுத்த ஏகாதிபத்தியம் நெடுநாட்களாகக் காத்திருந்தது. ராவ் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தபோது, ‘சாமர்த்திய’மாக அதைச் செய்துகொடுத்தார். மத்திய அரசு தொழில் முதலீடுகளில் தனியார் மயக்கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்த ஆரம்பித்தது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் சொற்கள் அரசின் தாரக மந்திரமாக்கப்பட்டு, முதலீட்டாளர்களுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் பட்டுக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. இதே காலகட்டத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் நடந்த புரட்சியும் உடன் சேர இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கொல்லைப்புறமாக மாறியது. இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்தியாவில் தனியார்மயமாக்கல் பெருமளவில் சட்டத் தைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டே உள் நுழைக்கப்பட்டது என்பதுதான். தனியார்மயமாக்கல் தொடர்பான கொள்கை அறிவிப்புகள் பொது மேடைகளில் பெரிய அளவில் வந்தனவே ஒழிய, நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் அதற்கான விவாதங்கள் ஒலிக்கவில்லை. விஷயம் அதோடு முடியவில்லை. சட்டம் இயற்றும் மன்றங்கள் சரியாகச் செயல்படாதபோது, மக்களின் கடைசி நம்பிக்கை சட்டத்தைப் பாதுகாக்கும் நீதிமன்றங்கள்தான்.

தனியார்மயம் விரோதம் இல்லையா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தலைப்பு வரிகளில், இந்தியா ஒரு ‘சோஷலிஸ குடியரசு’ என்று போடப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் என்ன? அரசின் நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது அரசமைப்புச் சட்டத்துக்கு நேர் விரோதமானது இல்லையா? இப்படியான கேள்விகளோடு ‘பால்கோ’ நிறுவனத் தொழிலாளர்கள் போட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் போனது. உச்ச நீதிமன்றம் என்ன செய்தது தெரியுமா? வழக்கைத் தள்ளுபடி செய்தது. “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது” என்று அறிவித்தார்கள் நீதிபதிகள்.

மேலும், அரசமைப்புச் சட்டத்திலுள்ள சோஷலிஸம் என்ற வார்த்தையைக் கேலி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டது: “சோஷலிஸம் என்பது நம்முடைய சரித்திரத்திலிருந்து கிடைத்த கவர்ச்சிகரமான வார்த்தையாக இருக்கலாம். அரசமைப்புச் சட்டத்தின் தலைப்பு வரிகளிலும் காணப்படலாம். இந்தியச் சமூகம், இன்றியமையாத கூறாக சோஷலிஸத்தை மணம் புரிந்துள்ளது என்ற கருத்தாக்கம், மத்திய அரசு 1990-களின் ஆரம்பத்தில் கடைப்பிடிக்கத் தொடங்கிய தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவால் உதிரத் தொடங்கியுள்ளது.” (உ.பி. மாநில வெண்கலப் பொருட்கள் நிறுவனம் வழக்கு, 2006).

மேலும் அதே தீர்ப்பில் குறிப்பிட்டது: “உலக மயமாக்கலினால் நாட்டின் பொருளாதார, சமூகக் காட்சிகளில் தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை விளக்கும்போது மாறிவரும் பொருளாதாரக் காட்சிகளை மனதில் கொண்டு யதார்த்தமான பார்வையுடன் நீதிமன்றம் செயல்பட வேண்டும்.”

பிறகு உச்ச நீதிமன்றம் இப்படியும் சொன்னது: “நிர்வாக அதிகாரிகள் விமான நிலையங்களில் மதுக் கடைகளைத் தொடங்க எண்ணிவருகின்றனர். இதன் மூலம் சமூகம் பொதுவில் மது அருந்தும் கலாச்சாரத்தைப் பெருநகரங்களில் ஏற்றுக்கொண்டுவிட்டது. எனவே, நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பழைய தத்துவங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காமல், மாறிவரும் காட்சிகளைக் கணக்கில்கொண்டு, யதார்த்தத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும்!”

உச்ச நீதிமன்றத்தின் பச்சைக்கொடி

உச்ச நீதிமன்றம் உலகமயமாக்க லுக்கும் தனியார்மயமாக்கலுக்கும் பச்சைக்கொடி காட்டியதோடு மட்டும் அல்லாமல், வெவ்வேறு தரு ணங்களில் அதன் போக்குக்கும் சென்றது என்று சொல்லலாம். மதுக் கடைகளில் மாலை நேரங்களில் பெண்கள் மது விற்பனையாளராக இருப்பதைத் தடை செய்த டெல்லி அரசின் உத்தரவை 2007-ல் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதற்கு ஒருபடி மேலே போய் 2013-ல் மராட்டிய அரசு மதுக் கடை பார்களில் பெண்களின் நடனங்களைத் தடைசெய்யும் சட்டத்தையும் ரத்துசெய்தது. சட்டம் இயற்றும் மன்றங்களும் சட்டத்தைப் பாதுகாக்கும் மன்றங்களும் உலகமயமாக்கலை வாரி அணைத்துக்கொண்டபோது மக்கள் நிலை என்னவானது? முதலாளிகள் பார்வையிலிருந்து அல்ல; தொழிலாளர்கள் நிலை மூலமாகவே அதை நாம் அறிய முடியும்.

இன்றைக்குத் தொழிலாளர் வர்க்கத்தின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், அவர்கள் நேரடித் தொழிலாளர்கள் அல்ல. அதாவது, தொழிலாளர்கள் எனும் அங்கீகாரம்கூட அவர்களுக்கு இல்லை. எல்லா நிறுவனங்களிலும் நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, மறைமுகத் தொழிலாளர்களான ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுவருகிறது. அயல் பணி ஒப்படைப்பு முறையிலான தொழிலாளர்களின் எண்ணிக்கை, நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஏறத்தாழ பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு அரசுத் துறை நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்துவதன் காரணம், குறைந்த கூலியில் அதிக வேலை என்பதோடு, அவர்கள் ஒன்று திரண்டு, சங்கம் அமைத்துத் தங்கள் உரிமைகளுக்காகப் போராட மாட்டார்கள் என்பதும்தான்!

தொழிலாளர்களுக்குப் பொருந்தா சட்டங்கள்

‘ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை சம்பந்தப்பட்ட அரசுகள் தடை செய்தால், அந்தத் தொழிலில் அதுவரை ஈடுபட்ட தொழிலாளர்களை பொதுத் துறை நிறுவனங்கள் நேரடித் தொழிலாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று ‘ஏர் இந்தியா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை (1997) உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு ‘ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா’ வழக்கில் ரத்து செய்தது (2001). இன்றைக்குப் பல கோடித் தொழிலாளர்களுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்கள் பொருந்துவதில்லை. அவர்களுக்குத் தொழிலாளர்கள் எனும் அடிப்படைத் தகுதிக்கான உரிமைகள்கூட இல்லை.

இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் தவிடுபொடியாக்க தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்தி அமைக்கப்போகிறோம் என்கிறது இன்றைய மோடி அரசு. பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் பல தொழிலாளர் சட்டங்கள் முதலாளிகளின் வேண்டுகோளின்படி திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

மோடி ராஜஸ்தான் அரசைத் தனது தனியார்மயமாக்கலின் சோதனைச் சாலையாகச் செயல்படுத்திவருகிறார். அங்குள்ள பாஜக தலைமையிலான தொழிற்சங்க அமைப்புகளே இச்சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்துப் போராடிவருகின்றன. அதையும் மீறி, பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தங்களால் இன்றைக்குத் தொழிலாளர் சட்டங்களிலுள்ள முக்கியமான பிரிவுகள் திருத்தங்களின் மூலம் மாற்றி அமைக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகமயமாக்கலின் வெள்ளிவிழா ஆண்டைப் பாராட்டி வசனம் எழுதுபவர்கள் எல்லாம், தொழிலாளர் துறையையும் அதற்கான சட்டங்களில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களையும் நினைத்துப் பார்த்தால், அவர்களுக்கு உலகமயமாக்கலின் குரூரம் புரியும்.

நரசிம்ம ராவ் ஏற்றிப் பிடித்த தீச்சட்டியை நரேந்திர மோடி கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தய வீரர்போல் ஓடி வருவதையும் பின்னாளில் ஒரு கும்பல் ‘சாமர்த்தியம்’ கருதிப் புகழலாம். ஆனால், ராவ்கள், வாஜ்பாய்கள், மோடிகளின் ‘சாமர்த்தியம்’ தேசம் கொண்டாடக் கூடிய வரலாறு அல்ல. மக்களின் கடைக்கோடி மனிதன் அந்த வரலாற்றைக் கண்ணீரினூடேதான் பார்ப்பான்!

- கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x