Last Updated : 12 Sep, 2018 09:32 AM

 

Published : 12 Sep 2018 09:32 AM
Last Updated : 12 Sep 2018 09:32 AM

2 மினிட்ஸ் ஒன்லி- 9

‘அட இது சுவாரஸ்யமா இருக்கே!’  என்று  நினைக்கிற அளவுக்கு ஓர் ஆட்டோக்காரரை பற்றி இந்த வாரம் எழுதலாம்னு இருந்தேன். அதுக்கு இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு சம்பவம் மனதை ரொம்ப நெகிழ்ச்சியாக்கிடுச்சு. அதை முதல்ல இங்கே சொல்லி விடுகிறேன்.

கேரள கனமழை வெள்ளப் பாதிப்புக்கு இந்தியா முழுவதிலும் இருந்து உதவிங்க வந்து சேர்ந்துக்கிட்டே இருக்கு. மக்கள் கொஞ்சம் கொஞ்சமா மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, மனிதநேயமுள்ள பலர் பக்கபலமா நிக்கிறாங்க. அதில் ஒரு பங்களிப்பா, ரெண்டு நாட்களுக்கு முன் திருவனந்தபுரம் பகுதியில் இருக்கும் 200 பள்ளி மாணவர்கள் ஒண்ணுசேர்ந்து செய்த சம்பவம் என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் 2 பள்ளிக்கூடத்தைத் தேர்வு செய்து, அங்கே 10-வது படிக்கிற மாணவ  -  மாணவிகளுக்கு அந்த 200 பேரும் நோட்ஸ் எழுதிக் கொடுத்திருக்காங்க.  ஒரு வாரம் பள்ளிக்கு போகலைன்னா எவ்ளோ நோட்ஸ் எழுத வேண்டியிருக்கும்னு நமக்கே தெரியும். அதோட அது எவ்வளவு பெரிய கஷ்டமான வேலைன்னும் புரியும். சமயத்துல அழுகையே வந்துடும்.

நெகிழ வைக்கும் செயல்பாடு

அந்த மாதிரி சூழல்ல 200 பசங்க தங்களுக்கு கிடைக்கிற ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைக்கூட பார்க்காம  காலையில இருந்து மாலை வரைக்கும் உட்கார்ந்து எழுதிக் கொடுத்திருக்காங்க. இதையே வீட்டுல இருக்குற ஒரு அம்மா,  தன்னோட பையனுக்கோ, பொண்ணுக்கோ செய்யறது ஆச்சர்யப்படுற விஷயமல்ல. முகம் தெரியாத  சின்னப் பசங்க வந்து செய்தது எவ்ளோ பெரிய விஷயம். அதோட, இப்போ அந்த 2 பள்ளிக்கூடத்தோட நின்னுடாம இன்னும் பல பள்ளிக்கூடங்களுக்கு போகப் போறோம்னு சொல்லியிருக்காங்க. இந்த நிகழ்வு அவ்வளவு நெகிழ்ச்சியா நினைக்க வைக்குது.

சின்ன வயதிலேயே உதவணும்கிற விதை அந்த குழந்தைங்களுக்குள்ள விழுந்திருக்கு. இது நாளைக்கு அவங்கள இன்னும் பல பாசிட்டிவ் விஷயங்களை கையில் எடுக்கணும்னு நினைக்க வைக்கும் என்கிற மனிதநேயமிக்க ஒரு  விஷயமாத்தான் தோணுது.

ஞாபகம் வருதே...  ஞாபகம் வருதே...

இதை  இங்கே எழுதும்போது என்னோட சின்ன வயதில் நடந்த ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. என்னோட தாத்தா 1919-ல பிறந்தவர்.  நான் நாலாங் கிளாஸ்  படிக்கும்போது ஸ்கூல் லீவ் விட்டதும் என்னை, என் தங்கச்சியை எல்லாம் அழைச்சிக்கிட்டு கும்பகோணம் போய்டுவார். அங்கே ஒரு வாரத்துல இருந்து 10 நாட்கள் வரைக்கும் இருப்போம்.  அந்தப் பகுதியில இருக்குற கோயில்களுக்கெல்லாம் போவோம். அப்போ, என் தாத்தோவோட பேச்-மேட் தாத்தா ஒருத்தரும் கூட இருப்பார். அவரும் தன்னோட பேரப் பசங்களை அழைச்சிட்டு வந்துடுவார். எல்லாருமா சேர்ந்து பஸ்ல கும்பகோணத்தைச் சுத்தி இருக்குற ஒவ்வொரு கோயிலுக்கா போய்ட்டு வருவோம்.

என் தாத்தாவோட நண்பர்  இந்த மாதிரி டிராவல் போகுறப்போ எல்லாம் கையில களிமண் பந்து வைத்திருப்பார். நேரம் கிடைக்கும் போது எங்கக்கூட விளையாடத் தான் இதைக் கொண்டு வர்றார்னு நான் நினைச்சுக்கிட்டேன். ஆனா, அவரோ பஸ் ஏதாவது ஒரு ஊர்  நிறுத்தத்துல நிக்கும்போது  ஒரு களிமண் பந்தை எடுத்து வெளியே வீசுவார். எதுக்கு இப்படி செய்யறார்னு அப்போ எனக்கு கேட்கணும்னு தோணவே இல்லை.

’விதை தாத்தா’

எட்டாவது படிக்கும்போது அதே மாதிரி தாத்தாவோட ஒரு முறை கும்பகோணத்துக்குப் போனேன். அப்போதான் அந்த நண்பர் தாத்தா நினைவுக்கு வந்தார். உடனே எங்க தாத்தாகிட்ட போய், ‘‘உன்கூட ஒரு தாத்தா வருவாரே. எதுக்கு அவர் எப்பவும் களிமண் பந்தை வெளியில எடுத்து போட்டுக்கிட்டே இருந்தார்?’’னு  கேட்டேன். அதுக்கு என் தாத்தா, ‘‘அது வெறும் களிமண் பந்து இல்ல பேராண்டி. விதைப் பந்து. அந்தக் களிமண் உருண்டைக்குள்ள விதைங்க இருக்கும்.  கீழே தூக்கிப் போடுற அந்தப் பந்து, என்னைக்காவது ஒரு நாள் முளைத்து செடியாவோ, மரமாவோ வளரும். நாலு  பேருக்கு பயனா இருக்கட்டுமேன்னு அவர் செய்தார்!’’னு சொன்னார்.

எனக்குள்ள ஆழமா பதிந்த விஷயம் இது. அந்தத்  தாத்தா,  களிமண் விதைப் பந்து வீசின அந்த ஊர்களுக்கு எல்லாம் திரும்ப போவாரான்னும் அவருக்குத் தெரியாது. அந்தத்  தாத்தாவை நான் பார்த்த காலகட்டத்துல அவருக்கு எப்படியும் 70 வயசுக்கும் மேல இருக்கும். அந்த டைம்ல, இன்னும் எத்தனை வருஷங்களுக்கு உயிரோட இருக்கப் போறோம்னும் அவருக்குத் தெரியாது. ஆனா,  தனக்கு பயன்படலைன்னாலும் இது மரமா வளர்ந்தா யாரோ ஒருவருக்கு, ஏதோ ஒரு உயிருக்கு பயனா இருக்கும்னு இப்படி ஏதோ ஒண்ணை அவர் நினைத்திருக்கலாம். அதனாலத்தான் அதைத் தொடர்ந்து செய்திருக்கார். அவரோட அந்த மனிதநேயத்தை என்னன்னு சொல்வது.

ஜன்னலுக்கு வெளியே...

கேரளாவுல 200 பசங்க ஒண்ணு சேர்ந்து செய்த அந்த விஷயமும், பஸ்ல பயணிக்கும்போதெல்லாம் பத்துல இருந்து பதினைந்து  விதைப் பந்துகளைக் கையில் வைத்துக்கொண்டு, ஜன்னலுக்கு வெளியே தூக்கிப்போட்டுக்கிட்டே இருந்த இந்த தாத்தாவும் ஒரு அழுத்தமான செய்தியை சொல்றதாத்தான் தோணுச்சு.  பலனை எதிர்பாராமல் ஒரு விஷயத்தை செய்தா போதும். கண்டிப்பா காலப்போக்குல அதுக்கு பலன் கிடைக்கும்கிறதுதான்.

எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்க டாக்டர் ஆகணும், இன்ஜினீயர் ஆகணும்னு எல்லாம் நான் நினைக்கிறதே இல்லை. ‘நல்ல பசங்க’ன்னு பேர் வாங்கினா போதும்னு தோணுது. அதைத்தான் அவங்கக்கிட்டயும் நான் சொல்லி வைக்கிறேன்.

வீட்டுல இருக்குற ஒரு குழந்தையை தினமும் எழுப்பி பல் தேய்க்கச் சொல்லிக் கொடுப்போம்.  ஐந்தாவது, ஆறாவது படிக்கிற ஸ்டேஜுக்கு வந்ததும் பசங்க தானாவே பல் தேய்க்க ஆரம்பிப்பாங்க. அப்படியே அது வாழற காலம் முழுக்க தொடரும். இந்த மாதிரி நல்ல விஷயத்தை குழந்தைக்கிட்ட விதைச்சுட்டா போதும். அந்த எண்ணம் வாழ்க்கை முழுக்க அவங்கக் கூடவே இருக்கும்.

அடுத்த வாரம்... ஆட்டோக்காரரோட வர்றேன். அதுவும் ஆட்டோவுலயே வர்றேன்.

- நிமிடங்கள் ஓடும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x