Last Updated : 18 Jun, 2019 09:48 AM

 

Published : 18 Jun 2019 09:48 AM
Last Updated : 18 Jun 2019 09:48 AM

மழைநீர் சேகரிப்பு: வீட்டுக்கும் உதவும்... விவசாயத்துக்கும் உதவும்!

மழைநீர் சேகரிப்புக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே முன்னுதாரணமாக விளங்கியவர் மழைநீர் பொறியாளர் திருவாரூர் வரதராஜன். இன்று அவர் இல்லை. அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக காவிரிப் படுகையில் மரம் வளர்ப்பும், மழைநீர் சேகரிப்பும் மக்களிடம் ஓரளவேனும் நடைமுறையில் இருக்கிறது.

‘தண்ணீர் பிரச்சினை என்பது அறியாமை. இயற்கை நமக்கு அளவில்லாத் தண்ணீரைக் கொடுத்திருக்கிறது. கொடுத்துக்கொண்டும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதனின் அறிவும் அறிவியலும் பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது.

ஆனால், அதைச் செயல்படுத்தும் அளவுக்கு நம்மிடம் பொறுமை இல்லை என்பது மட்டும்தான் இப்போதைய பிரச்சினை’ என்றார் வரதராஜன். கொஞ்சம் முதலீடும், எதிர்காலம் குறித்த அக்கறையும் இருந்தால் குடிநீர்ப் பற்றாக்குறையே ஏற்படாது என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார் அவர்.

சிறு முதலீடு...  நூறாண்டு லாபம்!

மழைநீர் சேகரிப்புக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த வரதராஜன், அதற்காக அரசு வேலையை உதறிவிட்டு, தன் வீட்டையே மழைநீர் ஆராய்ச்சி மையமாக மாற்றினார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட  வீடுகளில் மழைநீர் சேகரிப்புத்தொட்டிகளை அமைத்துத்தந்தார். 1,000 சதுர அடி மேற்பரப்புகொண்ட ஒரு வீட்டில் மூன்று பேர் வசித்தால் அவர்களின் தேவைக்கு மழைநீரைச் சேமிக்க 16 ஆயிரம் ரூபாய் செலவுசெய்தால் போதும். 1,000 லிட்டர் மழைநீர் சேகரிக்க கண்டெய்னர் வாங்க 10 ஆயிரமும், இதர செலவுகளுக்கு 6 ஆயிரமும் ஆகும்.

இந்தச் செலவு ஒருமுறை முதலீடுதான். அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்தச் செலவும் இல்லாமல் மழைநீரைப் பயன்படுத்தலாம். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வடிகட்டியை மாற்றுவதைத் தவிர, வேறு எந்தப் பராமரிப்புச் செலவும் இல்லை. மின்சாரக் கட்டணமும் மிச்சமாகும் என்பது அவர் காட்டிச்சென்ற வழி. வரதராஜனின் வழியில் தமிழகத்தில் பலரும் மழைநீரைச் சேமித்துக் குடிநீராகப் பயன்படுத்துகிறார்கள். அவர்களில் ஒருவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் செங்கட்டான் தெருவைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் ராஜா.

வீட்டுக்குள் நீர்த்தொட்டி

ஆயிரம் லிட்டர் வரை மழைநீரைச் சேமிக்கும்வகையில் வீட்டின் உள்ளேயே லாப்ட் பகுதியில் பிளாஸ்டிக் டேங்க் அமைத்துள்ளார் ராஜா. ‘‘மழைநீரைப் பூமிக்கடியில்  விடாமல் அப்படியே ஏன் உபயோகப்படுத்தக் கூடாது என்று யோசித்தேன். மேல்மாடியில் மழைநீர் சேகரிப்பதற்காகத் தனியாக பைப்லைன் அமைத்து, அந்த நீரை வீட்டின் கீழ்ப் பகுதிக்குக் கொண்டுவந்தேன். இந்த நீரைச் சுத்தப்படுத்துவதற்காகத் தனியாக ஃபில்டர் அமைத்துள்ளேன். இதிலிருந்து வரும் சுத்தமான நீரை வீட்டிலுள்ள டேங்கில் நிரப்பி, தினமும் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்திவருகிறோம்.

மழைக் காலங்களில் தொடர்மழை பெய்யும்போது கிடைக்கும் அதிக அளவு நீரைச் சேமிக்க வீட்டின் ஹாலில் கீழே 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைத்தளத் தொட்டி அமைத்துள்ளேன். அத்தொட்டியும் நிறைந்தவுடன் தொட்டியின் உள்ளிருந்து பூமியில் 40 அடிக்கு பைப் பொருத்தப்பட்டுள்ளது அதன் வழியாக அதிகப்படியான தண்ணீர் பூமிக்குள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மழைநீர் வீணாக்கப்படாமல் பூமிக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது. தேவை ஏற்படும்போது, தரைத்தளத் தொட்டியிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை டேங்கில் நிரப்பிவிடுவேன். மழைநீரை ஃபில்டர் கொண்டு வடிகட்டுவதால் கிருமிகள் இல்லாமல் சுத்தமாக இருக்கிறது’’ என்கிறார் ராஜா.

விவசாயத்துக்குப் பேருதவி

திருவாரூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறைப் பொறியாளர் தெய்வசிகாமணி வயல்வெளியில் குட்டை வெட்டி மழைநீரைச் சேமிப்பதன் மூலம் அதில் விவசாயத்துக்கான பாசனம், மீன் வளர்ப்பு, நிலத்தடி நீர் மட்டம் உயர்வு எனப் பல்நோக்குத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறார்.

‘ஒவ்வொரு விவசாயியும் தனது நிலப்பரப்பில் பத்து சதவிகிதத்தை குட்டை வெட்ட ஒதுக்க வேண்டும். பத்து ஏக்கர் நிலமிருந்தால் அதில் ஒரு ஏக்கர் நிலத்தில் குட்டை வெட்ட வேண்டும். அதன்மூலம் நீரைத் தேக்கிவைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம். மீன் வளர்க்கலாம், தேவைப்படும்போது வயலுக்கும் பாய்ச்சலாம்’ என்று சொல்லும் வரதராஜன், குட்டை வெட்டுவதற்கான தொழில்நுட்ப முறையையும் விளக்குகிறார்.

‘குட்டை வெட்டும்போது எடுக்கும் மண் கொண்டு நிலமட்டத்திலிருந்து நான்கு அடி உயரத்துக்குக் கரை எடுத்துக்கொள்ள வேண்டும். நிலமட்டத்தில் ஒரு அடுக்கும், அதிலிருந்து நான்கு அடி ஆழம் அதிகமாக அடுத்த அடுக்கும் இருக்க வேண்டும். அதேபோல அடுத்தடுத்து நான்கு அடி ஆழம் வைத்து மொத்தம் நான்கு அடுக்குகளாகக் குட்டை வெட்ட வேண்டும். ஆக, குட்டையின் நடுப்பகுதி மொத்தம் பன்னிரண்டு அடி ஆழத்துக்கு இருக்க வேண்டும்.

இந்த முறையில் குட்டை வெட்டினால் எவ்வளவு வறட்சியிலும் குட்டை வறண்டு போகாது. இதனை இப்போது பல ஊர்களிலும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்’’ என்கிறார் தெய்வசிகாமணி. தேவைப்படும் இடங்களுக்கு  நேரடியாகச் சென்றும் இதுகுறித்து ஆலோசனை வழங்கிவருகிறார் அவர். இந்தக் குட்டையின் கரையைச் சுற்றி வெளிப்புறமாக நான்கு அடி பள்ளம் வெட்டி, அதிலும் நீரை நிரப்பிவைத்துக்கொண்டால், வயலுக்குத் தேவைப்படும்போது மோட்டார் வைத்து அதை இறைத்துக்கொள்ளலாம் என்று உபரியாக இன்னொரு திட்டத்தையும் இவர் முன்வைக்கிறார்.

ஆற்றிலிருந்து முதன்மை வாய்க்கால், கிளைவாய்க்கால், கண்ணிகள் என்று படிப்படியாகப் பிரிந்துசெல்லும் நீரானது வழியிலிருக்கும் பல்லாயிரம் குளம் குட்டைகளை போகிறபோக்கில் நிரப்பிச் சென்றுவிடும். அதன்மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பாதுகாக்கப்படும் என்பது நம் முன்னோர்களின் கணக்கு.

காலம்காலமாக அப்படித்தான் நடந்துவந்தது. ஆனால், தற்போது ஆறுகளிலும் தண்ணீர் வருவதில்லை. குளம் குட்டைகளும் கட்டிடங்களாகிவிட்டன. மழைநீரைச் சேகரிக்கும் மாற்றுவழிகளைப் பின்பற்றினால்தான் இனி தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்கலாம்.

தொடர்புக்கு: muthu.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x