Last Updated : 01 Mar, 2018 07:57 AM

 

Published : 01 Mar 2018 07:57 AM
Last Updated : 01 Mar 2018 07:57 AM

வியாழன் வரலாறு: மரணம் ஒரு கலை!

பிறப்பு நிகழும்போதே

மரணமும் உறுதியாகிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் சுவார சியமே, மரணம்தான்!

மரணம் நம் கதையின் கிளைமாக்ஸ். கிளைமாக்ஸ் தெரிந்துவிட்ட இந்தக் கதையின் திரைக் கதையை மட்டுமே நாம் தினம் தினம் எழுதிக் கொண்டு இருக்கிறோம்.

மரணம் மட்டுமே மனிதர்களைப் பயத்துடன் வைத்திருக்கிறது. தவறு செய்யாமல் காக்கிறது. நல்லது - கெட்டதை உணரச் செய்கிறது. நன்மை - தீமைகளை நம்ப வைக்கிறது. ‘வாழும்போது தான் செய்யும் பாவபுண்ணியங்கள் தன்னுடைய மரணத்தைக் கொடியதாக்கும்’ - என்ற நம்பிக்கையே, மனிதர்கள் நல்லவர்களாக இருக்கக் காரணம் ஆகிறது.

மரணத்தை, தன்னுடைய வாழ்க் கையின் ஆகச் சிறந்த தருணமாக மாற்றிக்கொண்ட வரலாற்று நாயகர் கள் நம்மிடையே இருக்கிறார்கள். மரணத்தை அவர்கள் நல்ல உண வைப் போல் ருசித்திருக்கிறார்கள். நல்ல இசையைப் போல் அனு பவித்து இருக்கிறார்கள். நல்ல கலையைப் போல் கொண்டாடி இருக்கிறார்கள்.

உன் வீடு எங்கிருக்கிறது சே?

ன்னுடைய வாழ்வின் அடுத்த அத்தியாயம் போல் சே மரணத்தை எதிர்கொண்டார்.

‘‘ஒரு மனிதனைத்தானே கொல்லப் போகிறாய்? கோழையே சுடு..!’’

துப்பாக்கிமுனையின் எதிரில் நின்றபடி மரணத் தைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் வாய்ப்பு உலகப் புரட்சிக்காரர்களில், சே குவேராவுக்குத்தான் கிடைத்தது.

சே இறந்து சரியாக 50 ஆண்டுகள் ஆகின்றன.

ஆலிவ் இலைப் பச்சை ராணுவ உடையில், புகையும் சுருட்டுடன் இருக்கும் சே-வைப் பார்ப்பவர்கள் எல்லோரும் கவரப்படுகிறார்கள். அவரின் சிரிப்பை விவரிக்கவே முடியாது. வசீகரம். கொள்ளை அழகு. இயற்கையிலேயே அழகும் கம்பீரமும் நிறைந்த சே தன்னை நேர்த்தியாக வைத்துக்கொண்டதே இல்லை. வாரப்படாத தலையும், சீர் செய்யப்படாத தாடியும், தேய்க்கப்படாத சட்டையும், கட்டப்படாத ஷூ லேஸ்களுமாக அசிரத்தையாக இருந்த சே-தான் உலக அளவில் மக்களைக் கவர்ந்து கொண்டிருக்கிற புரட்சிக்காரர்.

‘‘எனது வீடு என்பது எனது இரு கால்கள்’’ என்று பயணத்தின்மேல் தீராக் காதல் கொண்ட சே, உலகையே சுற்றிப் பார்க்க விரும்பும் பயணிகளுக்கான முன்னோடி. பயணம் செய்யும் இடத்தின் மண்ணையும் மக்களையும் அறிந்து வருவதே சே-வின் விருப்பம். சே தன்னுடைய பயணங்களில் இருந்தே ஒரு போராளியாக உருவெடுத்தார். பயணத்துக்காக அவரே வடிவமைத்த நார்ட்டன் மோட்டர் சைக்கிளும், முதுகில் சுமந்த தோள்ப் பையும் சே-வின் அடையாளங்கள்.

இரண்டாம் உலகப் போரின் பேரழிவுக்குப் பின், பிறந்து வளர்ந்த தலைமுறைக்கு சே புரட்சியின் நாயகன். அறுபதுகளில் உலகைக் கவர்ந்த சாகசக்காரர்.

வசதியான குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் மூத்த குழந்தையாகப் பிறந்து செல்வாக்காக வளர்ந்தவர் எர்னஸ்டோ சே குவேரா. மருத்துவம் படிக்கும்போதே தன்னுடைய வாழ்க்கைப் பயணம் திசை மாறுவதை சே-வால் உணர முடிந்தது. தாடி முளைக்காத அந்தக் கொரில்லாப் போராளி தோட்டாக்கள் நிறைக்கப்பட்ட பெட்டியை சுமப்பதா அல்லது முதலுதவிப் பெட்டியைச் சுமப்பதா என்று முடிவெடுக்க வேண்டிய சூழலில், தோட்டாக்கள் நிரம்பிய பெட்டியை சுமப்பதையே தேர்ந்தெடுத்தார், தீவிர ஆஸ்துமா நோயாளியான சே.

பிறப்பால் அர்ஜெண்டையரான சே, தன்னுடைய நாட்டு மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டும் போராடவில்லை. ’’தீ பற்ற வை, மக்கள் நெருப்பென எழுவார்கள்’’ என்று, எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் போராட விரும்பினார்.

ஃபிடலுடன் சேர்ந்து சே-வும் தோழர்களும் நடத்திய போராட்டங்களின் விளைவாக ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு கியூபாவில் அமைந்தது.

கியூபாவின் தேசிய வங்கியின் தலைவர், தொழில்துறை அமைச்சர், திட்டக்குழு இயக்குநர், ராணுவ கமாண்டர், அரசியல் பொருளாதாரக் குழுக்களின் தலைவர் என்று கியூபாவின் அரசியல் வெளிச்சம் முழுக்க சே-வின் மேல் இருந்தது.

ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு நாடுகளின் அரசியல் அரங்குகளில் உரையாடவும், உலகத் தலைவர்களை சந்திக்கவும் பறந்து கொண்டிருந்தவர் சே.

பொலிவியாவில் சே

ஏகாதிபத்தியம் விழுங்கக் காத்திருக்கும் நாடுகளில் கட்சியை வலுப்படுத்தவும், விவசாயிகளின் சுரண்டலுக்கு எதிராக புரட்சியை உண்டாக்கவும் நினைத்த சே, பொலிவியாவைத் தேர்ந்தெடுத்தார். 1966-ம் ஆண்டின் இறுதியில் சிறிய புரட்சிக் குழு பொலிவியாவுக்குச் சென்றது.

பொலிவியாவில் சே எதிர்பார்த்த ஆதரவும், ஒத்துழைப்பும் அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியிடம் கிடைக்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே பொலிவியாவில் கெரில்லாப் போராளிகளுக்குச் சாதகமான சூழல் அமையவில்லை. விளைவு, வாழ்வை முழுமையாக ரசித்து வாழ விரும்பிய சே, மரணத்தின் வாயிலுக்கு விரும்பி அழைத்துச் செல்லப்பட்டார்.

மரங்களில்லா மலைகளில் மனத் துணிச்சலுடன் போரா டிக் கொண்டிருந்த சே குவேராவின் புரட்சிப் படை, 1967-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி, ராணுவத்தால் சுற்றி வளைக்கப்படுகிறது. சே குவேரா உள்ளிட்ட தோழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் சே-வின் வலது காலில் குண்டு பாய்கிறது. பொலிவிய ராணுவம் அவரின் ஒற்றை நட்சத்திரம் மின்னும் தொப்பியைத்தான் முதலில் வீழ்த்தியது.

சே பிடிபட்ட செய்தி ரேடியோ ஆபரேட்டர் மூலமாக ராணுவத் தலைமைக்கு அனுப்பப்படுகிறது. சே-வை உயிருடன் கொண்டு வர உத்தரவு வருகிறது. பொலிவியாவின் சிறு அசைவையும், கழுகின் நிழல்போல் அமெரிக்கா கண்காணிக்கத் தொடங்கியது.

சே-வை என்ன செய்வது என்று ராணுவமும், அரசும் ஆலோசனை செய்தன. சே-வின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இரண்டுமே ஏற்கவில்லை. அவரைக் கொல்வதில் உறுதியாக இருந்தார்கள். கொல்வதின்மூலம் அவரின் புரட்சி, வெற்றியின் குறியீடாக மாறிவிடும், சே மரணத்தில் இருந்துகூட மீண்டெழுந்துவிடுவார் என்று பயந்தன. சே சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி பரவினால் உலக அரங்கில் கியூபாவின் புகழ் கூடிவிடும் என்றும் கணக்குப் போட்டார்கள். சே-வை சுட்டுக் கொன்று, உடலை வெளித்தெரியாமல் மறைத்துவிடலாம் என்று பொலிவிய அரசு இறுதியில் முடிவு செய்தது. ராணுவம் அதைச் செயல்படுத்தியது.

துணிவின் இன்னொரு பெயர்

சே இருந்த பள்ளிக்கூட அறைக்குள் துப்பாக்கியுடன் நுழைகிறான் கியூபிய வீரன். காலில் குண்டடிப்பட்டு இருந்த தால் படுத்திருந்த சே, ‘‘கொஞ்சம் பொறு... நான் எழுந்து நின்று கொள்கிறேன்!’’ என்கிறார்.

சுவரில் கைகளைத் தாங்கிக்கொண்டு எழுந்து நிற்க முயற்சி செய்கிறார் சே. அவரின் துணிவைப் பார்த்துக் கலங்கிய வீரன், நடுநடுங்கி துப்பாக்கியுடன் வெளியில் ஓடி வந்துவிடுகிறான்.

கொஞ்சம் மது அருந்திவிட்டு, மீண்டும் சே இருந்த வகுப்பறைக்குள் நுழைகிறான். இப்போது சே எழுந்து நின்று கொள்கிறார். அப்போதும் அவனுடைய கைகள் நடுங்கு கின்றன.

‘‘நீ எதற்கு வந்திருக்கிறாய் என்று தெரியும். ஒரு மனிதனைத்தானே கொல்லப் போகிறாய்? கோழையே சுடு’’ என்று சே தன்னுடைய மரணத்துக்கான உத்தரவைப் பிறப்பிக்கிறார். சே-வை நேருக்கு நேர் பார்க்க முடியாத கியூபியன், முகத்தைத் திருப்பிக்கொண்டு ஆறு குண்டுகள் சுடுகிறான். திறந்த கண்களுடன் தன் மரணத்தைப் பார்த்தபடியே சே சரிந்து விழுந்தார். உயிர் பிரிந்தது.

புத்தம் புதிய கனவுகளுடன் இருந்த சாகச வீரர் சே காலமானார். இறந்து கிடந்த சே-வின் உடலைப் பார்த்த அப்பகுதி மக்கள், ‘‘யேசு கிறிஸ்துவைப் போலவே சே இருந்தார்!’’ என்றார்கள். சே-வின் இறந்த உடல் வாலே கிராண்டோ விமானத் தளத்தில் புதைக்கப்படுகிறது. உலகையே தன் இரு கால்களில் அடக்கிக்கொள்ள நினைத்த பிரபஞ்ச காதலனான சே-வின் கைகளில் ஒன்று புதைப்பதற்கு முன்னால், அடையாளத்துக்காக வெட்டி எடுக்கப்படுகிறது.

சே-வின் எலும்புகூட ஃபிடல் காஸ்ட்ரோவுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்ற வெறியில் இருந்த ராணுவம், வெளி உலகம் அறியாதபடி சே-வின் உடலை மறைத்துவிட்டது.

30 ஆண்டு துயரம்

1995- ம் ஆண்டு சே-வின் சுய சரிதை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் ஜான் லீ ஆண்டர்சன் மூலம்தான் சே புதைக்கப்பட்ட இடம் கண்டறியப்பட்டது. ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் கியூபாவுக்கும் துடைக்க முடியாத பழியாக 30 ஆண்டுகள் நீடித்த துயரம் முடிவுக்கு வந்தது.

சே கொல்லப்பட்ட நடவடிக்கை உலக வரலாற்றின் துயரப் பக்கம். சே கொல்லப்பட்டதில் விடுவிக்கமுடியாத ரகசியங்களும் மர்மங்களும் அடங்கியிருக்கின்றன. சே-வைக் கொல்லும் நடவடிக்கையில் ஈடுபட்ட எல்லோருமே அடுத்த 15 ஆண்டுகளில் வன்முறையாலும் அகாலத்திலும் இறந்துபோனார்கள் என்பது காலத்தின் இன்னொரு ரகசியப் பக்கம்.

சே என்றால் மொட்டு என்று பொருள். புரட்சி நடவடிக்கையில் தோற்றாலும், புரட்சியை விரும்பும் மனங்களில் சே இன்னமும் மலர்ந்து கொண்டிருக்கிறார்.

- வருவார்கள்...

எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x