Last Updated : 28 Mar, 2018 09:03 AM

 

Published : 28 Mar 2018 09:03 AM
Last Updated : 28 Mar 2018 09:03 AM

மாற்றத்துக்கான தலைமைத்துவம்: வழிகாட்டுகிறது இந்தியா!

டந்த பத்தாண்டுகளில் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களைக் கவர்ந்த ஆய்வுப்பொருள்களில் ஒன்று, தலைமைத்துவம். 2,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தலைமைத்துவம் பற்றிய ஆய்வுகள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுகள் அனைத்தும் அரசியல் தலைவர்களைப் பற்றித்தான் செய்யப்பட்டிருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம். இவற்றில் பெரும்பாலானவை மேலாண்மையில் மிளிர்ந்த தலைவர்களைப் பற்றியவை. உண்மையில், அரசியலில் தலைமைத்துவம் பற்றிய ஆய்வுகள் மிகவும் குறைவு.

இன்று உலகில் 80% மக்கள் மக்களாட்சியின் கீழ் வந்துவிட்டனர். இவ்வளவு பரவலாக, மக்களாட்சி விரிவாக்கம் சீர்திருத்தமும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அரசியல் தலைமைத்துவம் ஏன் ஆராய்ச்சியாளர்களைக் கவரவில்லை என்பதுதான் நமக்கு எழும் கேள்வி.

வளர்ச்சியின் பின்னால்...

சமீபகாலத்தில் உலகில் வியத்தகு மாற்றங்களை உருவாக்கியவர்கள், மேலாண்மை மிக்க தலைவர்கள்தான். தலைமைத்துவங்களிலே மிகப்பெரிய சாதனைகளைச் செய்தது சந்தை மற்றும் தொழில் தலைமைத்துவம்தான். அதுதான் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் வியத்தகு மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. மேற்கூறிய தளத்தில் நடந்த மாற்றங்கள், ஆளுகையிலோ, நிர்வாகத்திலோ, அரசியலிலோ நடைபெறவில்லை. இந்தக் குறைபாட்டின் காரணமாகத்தான் அரசியல் தலைமைத்துவம் பற்றி ஆய்வுசெய்ய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவதும் இல்லை. ஆராய்ச்சிக்கு நிதி தரும் நிறுவனங்கள் கண்டுகொள்வதும் இல்லை.

அரசியலிலும் நிர்வாகத்திலும் தலைமைத்துவம் மெருகேறியிருந்தால் இன்று மக்களாட்சி விரிவடைந்த நிலையில் சந்தைப் பரவலாக்கத்தின் வளர்ச்சியை எல்லாத்தரப்பு மக்களுக்கும் கொண்டுசேர்த்திருக்க முடியும். ஆனால், அது நடைபெறவில்லை. அதன் விளைவுதான் நாம் இன்று பார்க்கின்ற ஏற்றத்தாழ்வுகளும் சமூக அவலங்களும். தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்வதைப் பார்க்க முடிகிறது, ஆனால் அரசியல், ஆளுகை, நிர்வாகம் ஆகியவை சிறப்படைவதற்குப் பதிலாக பின்னடைவையே சந்தித்துவருகின்றது.

அரசியலுக்கும் பயிற்சிப் பள்ளிகள்

இந்தச் சூழலை, தலைமைத்துவம் பற்றி ஆய்வுசெய்த அறிஞர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். இதைச் சரிசெய்வதற்காகத்தான் உலகில் பல நாடுகளில் குறிப்பாக வட அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஆசியாவில் ஒருசில நாடுகளிலும் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பள்ளிகளில் அரசியல், ஆளுகை மற்றும் நிர்வாகத்துக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன. அத்தகைய பள்ளிகளில் பயின்று, அரசியலுக்கு வருவோரின் எண்ணிகை நம் நாட்டில் மிகவும் குறைவுதான். பயிற்சிப் பள்ளிகளில் படித்து அரசியலுக்கு வருவது என்பது அனைவருக்கும் சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல.

இன்னொருபக்கம், மேற்கத்திய நாடுகளின் பயிற்சிப் பள்ளிகளில் படித்துவிட்டு வந்து அரசியல் விமர்சனம் செய்பவர்களையும், இந்தப் பயிற்சி நிறுவனங்களைப் பற்றியும் கடுமையான விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. பெரும்பாலான பயிற்சிப் பள்ளிகளில் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவருவதற்கு ஏற்றவகையில் எப்படிப்பட்ட அரசியலைக் கட்டமைக்க வேண்டும், எப்படிப்பட்ட ஆளுகை நடைபெற வேண்டும், எப்படிப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தம் தேவை என்பது பற்றித்தான் போதிக்கப்படுகிறது. பெற்ற வளர்ச்சியால் எல்லாத் தரப்பு மக்களும் பயனடையச் செய்வதற்கான தலைமைத்துவத்தை இந்தப் பயிற்சிப் பள்ளிகளால் உருவாக்கித் தர முடியவில்லை.

வழிகாட்டுகிறார் காந்தி

1978-ல், அமெரிக்க அரசியல் மற்றும் வரலாற்றுத் துறை ஆய்வாளர் ஜேம்ஸ் பர்ன், ‘லீடர்ஷிப்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகம் உலகத்தை மாற்றும் ஆற்றல் படைத்த தலைமைத்துவத்தை உருவாக்கக்கூடிய உன்னதமான பயிற்சிப் பள்ளிக்கான வழிமுறைகளை இந்தியா கொடையாக உலகுக்கு வழங்கியுள்ளதை கவனப்படுத்தியது. இந்தியா முன்வைக்கும் தலைமைத்துவத்துக்கு ‘உருமாற்றம் செய்யும் உயர்நிலைத் தலைமைத்துவம்’ என்ற பெயரிட்டுள்ளார் ஜேம்ஸ் பர்ன். இவர் உருவாக்கிய புதிய தலைமைத்துவக் கோட்பாட்டுக்கு அடிப்படைக் கருத்துக்களைத் தந்தவர் காந்தி.

காந்தி எப்படிப்பட்ட தலைமைத்துவத்தை முன்வைத்தார், அதைச் செயல்படுத்த எத்தகைய அமைப்புக்களை உருவாக்கினார், அதற்கான விழுமியங்களை எங்கேயிருந்து எடுத்தாண்டார் என்பதை விளக்குகிறது ஜேம்ஸ் பர்ன் எழுதிய இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் கருத்துக்கள் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சித் திட்டத்தை மாற்றியமைத்தாலும், மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்க முடியவில்லை. அதற்கான காரணம் இந்தியாவில் காந்தியால் உருவாக்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகள் என்பவை ஆசிரமங்கள்தான். இந்தியாவில் ஆசிரமம்தான் பயிற்சிப் பள்ளியாகச் செயல்பட்டு பக்குவப்பட்ட உயர்நிலை மனிதர்களை உருவாக்கியது. அதன் பின்புலத்தில் உள்ள ஆன்மிகம், மாற்றத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றது என்பதை மறுக்க இயலாது. அந்தச் சூழலை மேற்கத்திய பயிற்சிப் பள்ளிகளில் உருவாக்க முடியவில்லை.

கிராமங்களிலிருந்து தொடங்குவோம்

இன்றைக்கும்கூட உலகம் வியக்கும் உன்னதத் தலைமையை உருவாக்கும் சக்தி நம் நாட்டுக்கு உண்டு. ஆனால் அதன் மேன்மையைப் பற்றி நமக்குத் தெரியாது. அதை ஒரு அமெரிக்க அரசியல் துறை ஆய்வாளர் நமக்குப் புரியவைக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பயிற்சியை நம் பஞ்சாயத்துத் தலைவர்களுக்குத் தந்து ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தையும் ஒரு குட்டிக் குடியரசாக்குவதற்கு, கடந்த 20 ஆண்டுகளாக முயற்சிசெய்து வருகிறேன். அதில் ஒரு சில வெற்றிகள் கிடைத்துள்ளன.

ஒப்பற்ற சிற்றூராட்சித் தலைவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் சாதனைகள், வேதனைகள் அனைத்தையும் ஆய்வுசெய்திருக்கிறேன். நல்ல தரமான பயிற்சி ஒரு தலைவருக்குத் தந்துவிட்டால், அவர் அந்த ஊரையே மாற்றிவிடுவார். எனவே இன்று நம் நாட்டுக்குத் தேவை நல்ல தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளிகள். இதைப் பற்றி நம் அரசும் அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் சிந்திக்க வேண்டும்!

- க.பழனித்துரை, காந்திகிராமம் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைப் பேராசிரியர்,

தொடர்புக்கு: gpalanithurai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x