Last Updated : 19 Mar, 2018 09:00 AM

 

Published : 19 Mar 2018 09:00 AM
Last Updated : 19 Mar 2018 09:00 AM

பாஜகவால் புறக்கணிக்க முடியாத தோல்விகள்!

த்தர பிரதேசம், பிஹாரில் நடந்த சமீபத்திய இடைத் தேர்தல் முடிவுகளுடன் ராஜஸ்தான், மத்திய பிரதேசத் தேர்தல் முடிவுகளையும் சேர்த்துப் பார்த்தால், பாஜகவுக்கு எதிரான வாக்களிப்பில் ஒரு பாங்கு உருவாகிவருவது தெளிவாகிறது. இதை அக்கட்சியின் தலைமை அலட்சியப்படுத்த முடியாது. தன்னுடைய தேர்தல் உத்தியை மறு பரிசீலனை செய்வதுடன், தன்னுடைய கட்சி ஆளும் மாநிலங்களில் அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள், மத்திய அரசின் திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றையும் இணைத்துப் பார்த்து, இதனால் மக்களுக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று நடுநிலையோடு ஆராய வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆணவத்தோடு நடந்துகொள்ள முடியாது என்று பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கண்டிப்பதை பாஜக தலைமை இனியும் புறக்கணிக்க முடியாது.

2014 மக்களவைத் தேர்தலின்போது பாஜகவுக்குக் கிடைத்த 282 தொகுதிகளில் 93 உத்தர பிரதேசம், பிஹாரைச் சேர்ந்தவை; கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு! இதனால்தான் 2015 பிஹார் சட்ட மன்றத் தேர்தல் முடிவு வெளியான பிறகு, நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை அணுகி, அதை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அழைத்துவந்தது பாஜக. எனவே, 2019 மக்களவைத் தேர்தலிலும் வெற்றிபெற வேண்டுமென்றால், இவ்விரு மாநிலங்களிலும் தன்னுடைய ஆதரவுக் குப் பின்னடைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது.

பாஜகவின் தோல்வி முகம்

2019 மக்களவைத் தேர்தலை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு இப்போது வழி ஏற்பட்டிருக்கிறது. சமாஜ்வாடி கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு, முதலமைச்சர் ஆதித்யநாத்தின் கோட்டையான கோரக்பூரையும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா வென்ற பூல்பூரையும் கைப்பற்றப் போதுமானதாக இருந்திருக்கிறது. பாஜகவுக்கு எதிராகப் பொது வேட்பாளரை எல்லா கட்சிகளும் இணைந்து நிறுத்தினால், அதைத் தோற்கடிப்பது எளிது என்பது புலப்பட்டிருக் கிறது.

பிஹார் சட்ட மன்றத் தேர்தலின்போது 2015-ல் மகா கூட்டணி என்ற பெயரில் இப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றியையும் ஈட்டித்தந்தது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), காங்கிரஸ் ஆகிய மூன்று பெரிய கட்சிகளும் கைகோத்து பாஜகவைத் தோற்கடித்து எதிர்க்கட்சி வரிசையில் அமரவைத்தன. 2014 மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான சில மாதங்களுக்கெல்லாம் இந்த வெற்றி சாத்தியமானது என்பதையும் மறக்கக் கூடாது. 2014 மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராகப் பல முனைப் போட்டிகள் நடந்ததை பாஜக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றியது.

இப்போது பிஹாரில் பாஜக - ஐக்கிய ஜனதாதளக் கூட்டணி அனைவரும் எதிர்பார்த்ததைவிட வலு குறைவானதாக இருப்பதும் அம்பலப்பட்டிருக்கிறது. அராரியா மக்களவைத் தொகுதியையும் ஜெஹனாபாத் சட்ட மன்றத் தொகுதியையும் ஆர்ஜேடி தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. பபுவா சட்ட மன்றத் தொகுதியை பாஜக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. 2015-ல் கிடைத்த தேர்தல் முடிவுக்குத் துரோகம்செய்யும் விதத்தில் நிதீஷ் குமார் நடந்துகொண்ட பிறகு, கால்நடைத் தீவன ஊழல் வழக்கு தொடர்பாகச் சிறையில் அடைக்கப்பட்டார் லாலு பிரசாத் யாதவ். அவர் சிறையில் இருந்த நிலையில்கூட அவருடைய கட்சிக்கு அமோக ஆதரவைத் தெரிவித்துள்ளனர் மக்கள். 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல மாநிலங்களை பாஜக கைப்பற்றியது. தனியாகவோ, கூட்டுசேர்ந்தோ 21 மாநிலங்களில் அது ஆட்சிசெய்கிறது. எனினும், அதற்குப் பிறகு நடந்துள்ள இடைத் தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் தோற்றுவருகிறது.

பொறுப்பு தட்டிக்கழிப்பு

பாஜகவும் அதன் அனுதாபிகளும் உத்தர பிரதேசத் தோல்விக்குக் காரணம் முதல்வர் ஆதித்யநாத்தின் நிர்வாகத்துக்குக் கிடைத்த பரிசுதானே தவிர, மத்திய அரசு நிர்வாகத்தின் மீதான அதிருப்தியல்ல என்று வாதாடுகின்றனர். இடைத் தேர்தலில் மோடியோ அமித் ஷாவோ பிரச்சாரம் செய்யவில்லை என்கின்றனர். பிஹாரில் லாலு பிரசாத் சிறையில் இருக்கிறாரே என்ற அனுதாபத்தில் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்று சமாளிக்கின்றனர். ஆனால், கோரக்பூரிலிருந்தும் பூல்பூரிலிருந்தும் வரும் தகவல்கள் உண்மை இவையல்ல என்று தெரிவிக்கின்றன. தலித்துகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருவதால் நாடு முழுவதும் தலித் மக்கள் பாஜகவுக்கு எதிராக அணி திரண்டு வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்த போதிலும் சமாஜ்வாடிக்கு ஆதரவு தெரிவியுங்கள் என்று தலித் மக்கள் கட்சித் தலைவர் மாயாவதிக்குத் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். பாஜகவை எதிர்த்து வாக்களியுங்கள் என்று மாயாவதி கட்டளையிட்டதும் தலித்துகள் அதை மிகுந்த உற்சாகத்துடன் நிறைவேற்றியுள்ளனர். பாஜக மீதான அதிருப்தி சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே, பல்வேறு காரணங்களுக்காகத் திரண்டிருக்கிறது.

பொருளாதார மந்த நிலையாலும் அரசின் கொள்கைகளாலும் நிவாரணம் கிடைக்காத மத்திய தர வர்க்கம், பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பவில்லை. பாஜகவுக்கு நிலையான ஆதரவு அளித்துவந்தவர்கள் மத்திய தர மக்கள்தான். உத்தர பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையில் தாக்கூர்களின் ஆதிக்கம் அதிகரித்துவருவதை மாநில மக்களில் கணிசமான தொகையுள்ள பிராமணர்களும் விரும்பவில்லை. அரசின் முக்கிய பதவிகளுக்கு தாக்கூர்களே நியமிக்கப்படுகின்றனர். பணமதிப்பு நீக்கம், பொதுச் சரக்கு-சேவை வரி ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவரும் வர்த்தகர்களும் பாஜகவை ஆதரிக்கவில்லை.

2014 மக்களவைத் தேர்தலின்போதும் 2017 உத்தர பிரதேச சட்ட மன்றத் தேர்தலின்போதும் வெகு கவன மாக பாஜக உருவாக்கிய சாதிகள் கூட்டணி சிதறிவிட்டது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தள், குர்மி சமூகத்தவருடையது. இருந்தும் சமாஜ்வாடி நிறுத்திய குர்மி வேட்பாளர் பாஜகவின் குர்மி வேட்பாளரை பூல்பூரில் தோற்கடித்துவிட்டார். கோரக்பூரில் சமாஜ்வாடி கட்சி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் நிஷாத் என்ற சமூகத்தைச் சேர்ந்த பிரவீண் நிஷாதை நிறுத்தியது. அவருடைய தந்தை சஞ்சய் நிஷாத் கோரக்பூர் வட்டாரத்தில் செல்வாக்குள்ள சாதித் தலைவர்.

எதிர்க்கட்சிகளுக்கும் பாடம்

சுருக்கமாகச் சொல்வதென்றால், பகுஜன் சமாஜும் சமாஜ்வாடியும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு இடையே தங்களுக்கிருக்கும் ஆதரவைப் புதுப்பித்துக்கொண்டிருப்பதுடன் வலுப்படுத்தியும் வென்றுள்ளன. சமாஜ்வாடி கட்சி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே பரவலான செல்வாக்கு பெற்றிருந்து, படிப்படியாக அந்தச் செல்வாக்கை இழந்து வெறும் யாதவர்களின் கட்சியாகச் சுருங்கியிருந்தது. 2017 சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொருவராக விலகி அதன் செல்வாக்கைக் குறைத்து கடைசியில் அதை மாயாவதியின் ஜாதவ் சமூகத்தினரின் கட்சியாகக் குறுக்கினர்.

இந்த இடைத் தேர்தல் முடிவுகள் எல்லா கட்சிகளுக் கும் சில பாடங்களை உணர்த்தியுள்ளன. பாஜக இதை அலசிப் பார்த்து விரைவில் மாற்று நடவடிக்கைகளைத் தொடங்கிவிடும். பிற எதிர்க்கட்சிகள் என்ன செய்யப்போகின்றன? தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை மறந்து, பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகள் உத்தர பிரதேசத்தில் காட்டியுள்ள வழிகளைப் பின்பற்றுவார்களா, தங்களுடைய அகந்தையை விடுவார்களா, ராஜதந்திரத்துடன் நடப்பார்களா என்று பார்க்க வேண்டும். 2019-ல் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், எல்லா எதிர்க் கட்சிகளும் கைகோத்து ஒற்றுமையாகப் பொது வேட்பாளரை நிறுத்தினால் தான் எளிதாக முடியும்!

தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x